முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்?
சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al Assad) சிரியாவை விட்டு விமானம் மூலம் தப்பிச் சென்றார்.
இதனால் 24 ஆண்டு கால அசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், கிளர்ச்சியாளர்கள் படை தலைநகர் டமாஸ்கஸுக்குள் நுழைந்து அரசு தொலைக்காட்சி வளாகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலகங்களின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.
ஆரம்பத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானத்தில் எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றார் என்பது தெரியவராமல் இருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அசாத் தனது குடும்பத்தினருடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
வெளியேறும் ரஷ்ய படைகள்
இந்நிலையில் உக்ரைனிய புலனாய்வு தகவல்களின்படி, கிளர்ச்சியாளர்கள் படை டமாஸ்கஸை கைப்பற்றியதை அடுத்து சிரியாவிலிருந்து ரஷ்யா தனது ராணுவ படையை பின்வாங்கத் தொடங்கியுள்ளது.
ரஷ்ய கடற்படையின் “அட்மிரல் கிரிகோரோவிச்”(Admiral Grigorovich) ஃபிரிகேட் மற்றும் “எஞ்சினியர் ட்ருபின்”(Engineer Trubin) கப்பல் ஆகியவை சிரியாவின் டார்டஸ்(Tartus) துறைமுகத்திலிருந்து மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம் க்மெய்மிம்(Khmeimim) விமானத் தளத்திலிருந்து மீதமுள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த செய்திகளை உண்மையற்றவை என்று தள்ளுபடி செய்துள்ளார்.
ரஷ்ய படைகளின் இயக்கம் மத்தியதரைக் கடலில் வழக்கமான இராணுவ பயிற்சியின் ஒரு பகுதி என்று அவர் வலியுறுத்துகிறார்.