மலசல கூட குழி நிர்மாணத்தின் போது தவறி விழுந்து குடும்பஸ்தர் மரணம் -சாய்ந்தமருதுவில் சம்பவம்
கடை ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் ஒன்றில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடை தொகுதியில் வேலையில் ஈடுபட்டவர்கள் சிக்கிக் கொண்ட அனர்த்தம் ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(8) மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன் பின்னர் அவர்களின் கட்டளையின் பிரகாரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் மூச்சு திணரல் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதா என்பதை கண்டறிய கொழும்பில் உள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சடலத்தின் சில பகுதிகள் சான்றிற்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் 12 நாள் ஆண் குழந்தை ஒன்றின் தந்தையான சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியை சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது-29) என்பவர் ஓடாவி வேலைக்காக சென்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்தார்.அத்துடன் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரை காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் றிபான்(வயது-42) என்பவர் காயமடைந்து அபாயக் குரல் எழுப்பிய நிலையில் ஏனையோரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த கடை கட்டுமான வேலை தளத்தில் மூவர் இருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸாரின் புலன் விசாரணை மற்றும் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் தடயவியல் (SOCO) பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.