யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போதும் பயிர் அழிவு மற்றும் கால்நடை இழப்புக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், அவை தொடர்பான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள பிரதேச செயலாளர்கள் ஊடாக பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வெள்ள நீர் வீதிகளில் தேங்கியமைக்கு வீதிகளின் அமைப்பு முறைகள், மதகுகள் போன்றவை அமைத்ததில் சரியான ஆலோசனைளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனப் பல முறைப்படுகள் கிடைக்கப் பெற்றதால் இதற்கான பொறிமுறை உருவாக்குவதற்கு பிரதேச செயலக ரீதியாக கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கோரியதுடன்,
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்கள் ஊடாக
வெள்ள அழிவு பயிர்களின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் வங்கிகளால் வழங்கப்படும் விவசாய கடன்கள் பற்றிய தெளிவூட்டல்கள், காப்புறுதி, 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண, மாவட்ட விவசாய திட்டங்கள், வெண்முகுது தாவரதத்தி, கபிலத்தத்தி ஒருங்கிணைந்த பீடைக்கட்டுப்பாடு மற்றும் முற்காப்பு நடவடிக்கை என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதில் விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ். ஜே. அரசகேசரி, கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதிநிதிகள், வங்கி மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.