சிரிய தலைநகரில் இரண்டு விஞ்ஞானிகள் படுகொலை
சிரியாவில் (syria)ஜனாதிபதி பசார் அல் ஆசாத்(Baššār al-Asad) தப்பியோடியுள்ள நிலையில் தலைநகர் டமாஸ்கஸில் இரண்டு முக்கிய விஞ்ஞானிகள் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்படி செவ்வாயன்று(10), தலைநகர் டமாஸ்கஸ் நகரின் உள்ளூர் வட்டாரங்கள், சிரிய கரிம வேதியியலாளர் கலாநிதி ஹம்தி இஸ்மாயில் நாடி(Dr. Hamdi Ismail Nadi) படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளன.
மேம்பட்ட வேதியியல் மற்றும் மருந்துத் துறையில் நிபுணத்துவம் பெற்ற கலாநிதி ஹம்தி இஸ்மாயில் நாடி, செவ்வாய்க்கிழமை சிரிய தலைநகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
இரசாயன ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு
உள்ளூர் மற்றும் சர்வதேச இரசாயன ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் தனது துறையில் முக்கிய நபராக அறியப்பட்ட நாடியின் மரணம் “மர்மமானது” என்று உள்ளூர் வட்டாரங்கள் விவரித்துள்ளன.
அதேபோன்று பிரபல சிரிய நுண்ணுயிரியலாளர் சஹ்ரா ஹெம்சியா (Zahra Hemsiya), டமாஸ்கஸில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு பிரபல விஞ்ஞானி
நுண்ணுயிரியல் துறையில் சிரியாவின் பிரபல விஞ்ஞானியான சஹ்ரா ஹெம்சியா, அவரது வீட்டிற்குள் வைத்து இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த செய்தி அதிகாரப்பூர்வ ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் மறுக்கப்படவில்லை என ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.