சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி – இஸ்ரேலின் தாக்குதல் : மத்திய கிழக்கின் நிலைப்பாடு
சிரியாவில் (Syria) பஷர் அல் அசத் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, பஷர் அல்-அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் இதுவரை 310 வான்வழித் தாக்குதல்களை சிரியாவில் நடத்தியுள்ளது.
ஆயுத தொழிற்சாலைகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள், விமான நிலையங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் இலக்காகியுள்ளன.
அரபு நாடுகள்
டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிரியாவில் அசத் அரசு வீழ்ந்த பிறகு, அங்குள்ள ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க, அங்கு தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆனால், சவுதி அரேபியா, கத்தார், இரான், இராக் உள்ளிட்ட பல அரபு நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளன.
சிரியாவில் அசத் அரசின் வீழ்ச்சி குறித்தும், அங்கு நடத்தப்படும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறித்தும் இந்த நாடுகள் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா
கோலன் குன்றில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதும், சிரியா மீதான சமீபத்திய தாக்குதல்களும் சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதை உறுதிப்படுத்துகிறது என்று சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் பாதுகாப்பு, உறுதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அழிப்பதில் இஸ்ரேல் பிடிவாதமாக இருப்பதாக சௌதி அரேபியா கூறியுள்ளது.
சர்வதேச சமூகம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்து, சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது முன்னதாக, சிரியாவில் நடந்து வரும் நிகழ்வுகளை சௌதி அரேபியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் கூறியது.
சிரியா மக்களைப் பாதுகாக்கவும், அங்கு வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளால் சௌதி அரேபியா திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது .
ஈரான்
தங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கும் , சிரியாவுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கும் சிரிய மக்களுக்கு முழு உரிமை உள்ளது என ஈரான் கூறியுள்ளது.
“சிரியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை ஈரான் மதிக்கிறது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறியது.
சிரியாவில் எந்தவித வெளிப்புற தலையீடும் இல்லாமல் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக இரான் கூறுகிறது நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் பஷர் அல் அசத்தின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவரது அரசுக்கு ராணுவ ஆதரவை ஈரான் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
”சிரியாவின் தற்போதைய நிலைமையை இரான் ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அங்கு இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என்று இரான் கூறியுள்ளது.
மேலும் இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
ஈராக்
அசத் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஈராக், சிரியாவுடனான அல்-கைம் எல்லையை மூடியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா இடையே மக்கள் பயணிப்பதற்கும், பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் முதன்மையான பாதையாக இது செயல்படுகிறது.
ஈராக் – சிரியா எல்லையில் நிலைமை முற்றிலும் ஈராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஈராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் யாஹ்யா ரசூல் தெரிவித்தார்.
இராக்கும் சிரியாவும் நீண்ட எல்லையை கொண்டுள்ளன. சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதலை ஈராக் கண்டித்துள்ளதுடன், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தனது பொறுப்புகளை புரிந்துகொண்டு சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்க வேண்டும் என ஈராக் கூறியுள்ளது.
கத்தார்
அசத்தை அகற்றிய முக்கிய கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமை (HTS), திங்கட்கிழமை கத்தார் தொடர்பு கொண்டது. இந்த கிளர்ச்சிக் குழுவின் உயர்மட்ட தலைவர்களுடன் கத்தார் தூதர்கள் பேசினர்.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவரான முகமது அல்-பஷீரை செவ்வாயன்று சந்திப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருகிறது.
பஷீர் தற்போது சிரியாவின் இடைக்கால பிரதமராக உள்ளார். இந்த நேரத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் பிற கிளர்ச்சிக் குழுக்கள் சிரியாவில் அமைதியைப் பேணுவதையும், நாட்டின் பொது நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதே தங்களின் முழு முக்கியத்துவமும் என்று கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிரியாவில் செயல்படும் பல்வேறு குழுக்களுடன் அரபு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அல்-குலைஃபி திங்கள்கிழமை மாலை தெரிவித்தார்.
சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கத்தார் கவலை தெரிவித்துள்ளது. சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆபத்தானதாக கருதுவதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கி
சிரியாவில் புதிய அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்குள்ள மக்கள் தங்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள் என துருக்கி தெரிவித்துள்ளது.
சிரியா மக்கள் தாங்களாகவே நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையில் இல்லை என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடான் தெரிவித்துள்ளார்.
எனவே, சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு சீராக இருப்பதற்கு, சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு மில்லியன் சிரிய அகதிகள் துருக்கியில் உள்ளனர். அவர்கள் சிரியாவிலிருந்து தப்பி அங்கு வந்துள்ளனர். சிரிய மக்கள் விரைவில் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று துருக்கி அதிபர் விரும்புகிறார்.
ஹிஸ்புல்லா
லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்பொலா ஆயுதக்குழு சிரியாவின் நிலைமையை ஆபத்தானதாகக் கருதுகிறது. ஹெஸ்பொலா பல ஆண்டுகளாக சிரியாவில் அசத்தை ஆதரித்தது.
இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடுவதற்கு முன்பு, அது சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சிக்கு முழு ஆதரவை வழங்கியது. “சிரியாவில் நடப்பது ஆபத்தானது மற்றும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
சிரியாவில் இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது” என ஹெஸ்பொலாவின் தலைவரான ஹஸ்ல் ஃபதல்லாஹ் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
சிரியாவில் அசத்தின் வீழ்ச்சியால் ஒரு முக்கியமான கூட்டாளியை ஹெஸ்பொலா இழந்துள்ளது. சிரியாவில் அசத்தின் ஆட்சி நீண்ட காலமாக இருந்ததால், இரானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் ஹெஸ்பொலாவை எளிதில் சென்றடைந்தன.
சிரியா மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதாக ஓமன் தெரிவித்துள்ளது. “சிரியா மக்கள், வன்முறை காலத்தை கடந்து தங்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இது அவர்களின் நாட்டின் பாதுகாப்பு, உறுதி , வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைய உதவும்” என ஓமன் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.