ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா
வரி விதிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஒன்ராறியோவின் முதல்வர் பதிலடி கொடுக்கும் விதத்தில் முடிவொன்றை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலகிலேயே மிக அதிகமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யும் மாகாணமான ஒன்ராறியோ, தற்போது அமெரிக்க மது பானங்களை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவுக்கு வர இருப்பதாக ஒன்ராறியோவின் முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது உறுதி என்று கூறியிருக்கிறார்.
மின்சாரம் ஏற்றுமதி
இந்த வார தொடக்கத்தில், ஒன்ராறியோவின் முதல்வரான டக் ஃபோர்டு, பல அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் அந்த மிரட்டல் டொனால்டு ட்ரம்பை கொஞ்சமும் அசைக்கவில்லை. டக் ஃபோர்டு அவ்வாறு முடிவெடுப்பார் என்றால், அது பரவாயில்லை என ட்ரம்ப் பதிலளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா கனடாவுக்கு மானியம் அளிக்கிறது, நாங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர் கனடாவுக்கு மானியமாக வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இனி அதன் தேவை இருக்காது என கூறியுள்ளார்.