யாழில். பரவும் மர்ம காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி – தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும் , இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ,பரிசோதனை முடிவிலையே எலி காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு எட்டாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.