;
Athirady Tamil News

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒலாஃப் ஷோல்ஸ் தோல்வி., பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல்

0

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தோல்வியடைந்தார்.

இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜேர்மனியில் முன்கூட்டியே 2025 பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளது.

முதலில் திட்டமிடப்பட்டதை விட ஏழு மாதங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 23 அன்று நாடாளுமன்ற தேர்தலை நடத்த பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 733 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்ற கீழ் சபையில் 207 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஷொல்ஸ் வென்றார்.

அதேவேளையில் 394 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர், 116 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

இதனால் அவர் வெற்றி பெறத் தேவையான 367 பெரும்பான்மையை விட மிகக் குறைவாகவே இருந்தார்.

83 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடான ஜேர்மனியில் நம்பிக்கை வாக்குகள் அரிதானவை. போருக்குப் பிந்தைய வரலாற்றில் ஒரு சேன்சலர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பது இது ஆறாவது முறையாகும்.

கடைசியாக 2005-இல் நடந்தது, அப்போதைய சேன்சலர் ஹெகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schröder) முன்கூட்டிய தேர்தலை நடத்தினார், அதில் மைய-வலது போட்டியாளர் அங்கேலா மேர்க்கெல் (Angela Merkel) குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜேர்மனியில் அடுத்த அரசின் செயல்பாடு மற்றும் அரசியல் பரஸ்பர ஒத்துழைப்பு சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.