மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்… மீண்டும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
ஜனவரி 20ம் திகதிக்கு முன்னர் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்கவில்லை என்றால், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மோசமான விளைவுகளை
காஸா போர் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி 20ம் திகதி தாம் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஹமாஸ் படைகள் அதற்கு தயாராகவில்லை என்றால், மிக மோசமான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பணயக்கைதிகள் தொடர்பில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன், ஜனவரி 20ம் திகதிக்கு முன்னர் போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வரவில்லை என்றால், அது உண்மையில் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடகவும் இருக்க முடியாது என்றார்.
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1200 பேர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் 250 பேர்களை ஹமாஸ் படைகள் கடத்தினர்.
பதிலுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெடுத்த போர் நடவடிக்கைகளில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 45,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் மட்டுமே அவர் கவனம்
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் அல்லது இஸ்ரேலிய இராணுவ மீட்பு நடவடிக்கைகள் மூலம் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஹமாஸ் படைகளிடம் இன்னும் சிக்கியுள்ள 100 பேர்களில் பாதி பேர்கள் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பெரும்பாலும், இஸ்ரேல் இராணுவ மீட்பு நடவடிக்கைகளில் பணயக்கைதிகள் கொல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிர நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கவில்லை என்றும், போரில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதாகவும், இது வெறும் அரசியல் நாடகம் என்றும் இஸ்றேல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்த உடன்படிக்கையைப் பெறுவதற்காக, ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் இப்பகுதிக்கு மூத்த அதிகாரிகளை மேலும் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.