தனியார் கல்வி நிலையங்களின் செயல்பாடுகள்
யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற தரம் 9 மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமைகளில் மாலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இடைநிறுத்துவது தொடர்பான முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்க தனியார் கல்வி நிறுவனங்களிடம் கோரப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குகின்ற தனியார் கல்வி நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்கள், முகாமையாளர்கள், குழு வகுப்புகளை நடத்துகின்ற ஆளணியினர்கள் என்போர் அழைக்கப்பட்டனர்.
இந்த தீர்மானத்திற்கு ஒரு சில தனியார் கல்வி நிறுவனத்தினர் தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் குறித்த முடிவு எட்டப்படுவதற்கான காரணம் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டது. ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக இதனை நாங்கள் செய்வதாகவும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்கள்
தரம் 9 மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட தரங்களுக்கான வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் வகுப்புகளை வைக்க சிலர் கோரிக்கை வைத்திருந்தாலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களுக்கான ஒய்வுக்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும் வழி செய்யப்பட்டது.
இதற்கான மேற்பார்வை நடவடிக்கைகளை பிரதேச செயலகங்களை மேற்கொள்ளுமாறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்பு ஆளணியினர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. – என்றார்.