ரூ 14,131 கோடி மீட்டதாக கூறிய நிதியமைச்சர்: 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை – விஜய் மல்லையா பதிலடி
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பதிலடியாக தொழிலதிபர் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார்.
ரூ.14,000 கோடி
வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துக்களை விற்று வந்த ரூ.14,000 கோடியை, அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளிடம் திரும்ப தரப்பட்டிருக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது பேச்சு பதில் அளிக்கும் வகையில் விஜய் மல்லையா தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
விஜய் மல்லையா
நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “Kingfisher Airlines கடன்களை அதனுடைய ரூ.1,200 கோடி வட்டியையும் சேர்த்து ரூ.6,203 கோடி என கடன்தொகையை நிர்ணயித்தது கடன் மீட்பு தீர்ப்பாயம்.
நாடாளுமன்றத்தில் பேசியுள்ள நிதியமைச்சரோ, அமலாக்கத்துறை மூலம் வங்கிகள் என்னுடைய சொத்துக்களை விற்று ரூ.14,131.60 கோடியை மீட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இது தீர்ப்பாயத்தின் ரூ.6,203 கோடி கடன்தொகை தீர்ப்பிற்கு எதிரானது ஆகும். ஆனாலும், இன்னமும் நான் பொருளாதார குற்றவாளியாக இருக்கிறேன்.
அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் என்னிடம் இருந்து கடன் தொகையை விட, இரண்டு மடங்கு அதிகமாக பெற்றிருக்கும் தொகையை குறித்து சட்டரீதியாக விளக்க வேண்டும். இல்லையென்றால் நான் எடுக்கப்போகும் சட்ட நடவடிக்கைகளுக்கு, அவர்கள் நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், அவர் மற்றொரு பதிவில் ‘நான் யாரிடமும் ஒரு ரூபாய் கடன் வாங்கியதில்லை, திருடியதில்லை. King Fisher Airlines கடன்களுக்கு உத்தரவாதம் மட்டும்தான் கொடுத்திருந்தேன்’ என தெரிவித்தார்.