ஆட்சிக்கு வரும் முன்னரே ட்ரம்புக்கு கிடைத்த பேரிடி… எலோன் மஸ்கின் முயற்சிகளும் தோல்வி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட செலவு மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரால் முடியாமல் போனது டொனால்டு ட்ரம்புக்கு அவமானகரமான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கூச்சல் குழப்பத்தில் முடியும்
செலவு மசோதாவை நிறைவேற்றத் தவறியதால் வழக்கம் போல இந்த ஆண்டும் அரசாங்க அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. 174-235 வாக்குகளுக்கு டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் ஆதரித்த இந்த மசோதாவானது தோல்வியடைந்துள்ளது.
ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்பின் ஆட்சி காலம் இது போன்ற கூச்சல் குழப்பத்தில் முடியும் என்றே விமர்சகர்கள் விளக்கமளிக்கின்றனர்.
மேலும், இந்த பிரேரணையை நிறைவேற்ற தமது சமூக ஊடக நிறுவனம் ஊடாக எலோன் மஸ்க் தீவிரமாக பரப்புரை செய்து வந்ததை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக கிண்டல் செய்துள்ளதுடன் ஜனாதிபதி மஸ்கின் முயற்சிகள் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மசோதாவை நிறைவேற்ற டொனால்டு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தும் சொந்த கட்சியை சேர்ந்த 38 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். ட்ரம்பின் சொந்தக் கட்சி உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மசோதா நிறைவேறியிருந்தால், மார்ச் மாதம் வரையிலான செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கும். அத்துடன் பேரிடர் மற்றும் கடன் தள்ளுபடிக்கு என 100 பில்லியன் டொலர் செலவிடவும் வாய்ப்பு அமைந்திருக்கும்.
ஊழியர்களுக்கான ஊதியம்
மட்டுமின்றி, இந்த மசோதா நிறைவேறியிருந்தால், ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளபடி வரி குறைப்பு நடவடிக்கைகளும் மிக எளிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கும். இந்த மசோதாவானது செலவினங்களைக் குறைக்கத் தவறிய அதே வேளையில் அதிக கடனுக்கு வழி வகுக்கும் என்று சில குடியரசுக் கட்சியினர் எதிர்த்தனர்.
இந்த மசோதா சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தற்போது ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டில் அது நீண்ட தடங்கல்களை எதிர்கொண்டிருக்கும் என்றே கூறுகின்றனர்.
அரசின் நிதியுதவியானது வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. தற்போது இந்த காலக்கெடுவை நீட்டிக்க காங்கிரஸ் தவறினால், அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி பணிநிறுத்தம் ஏற்படும்.
இது எல்லை அமலாக்கத்திலிருந்து தேசிய பூங்காக்கள் வரை அனைத்திற்கும் முன்னெடுக்கப்படும் அன்றாட செலவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெடரல் ஊழியர்களுக்கான ஊதியம் தடைபடும்.
அத்துடன் விடுமுறை நாட்களில் விமானப் பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.