அடுத்த ஆண்டும் தொடரும்… மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வட்டாரம் தகவல்
புற்றுநோயில் இருந்து மன்னர் சார்லஸ் குணமடைந்து வந்தாலும், அவருக்கான சிறப்பு சிகிச்சைகள் அனைத்தும் அடுத்த ஆண்டும் தொடரும் என அரண்மனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டும் தொடரும்
சார்லஸ் மன்னரின் புற்றுநோய் சிகிச்சையானது எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவருக்கான சிகிச்சைகள் அடுத்த ஆண்டும் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட சார்லஸ், திடீரென்று தமக்கு புற்றுநோய் இருப்பதாக ஒருநாள் வெளிப்படையாக அறிவித்தார்.
பொதுவாக பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்கள் தங்கள் உடல்நிலை தொடர்பில் இதுவரை வெளிப்படையான கருத்துகள் எதுவும் தெரிவித்திராத சூழலில், மன்னரின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களையும் கலங்க வைத்தது.
அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனும் புற்றுநோயால் பாதிக்கப்பட, 2024 ஆம் ஆண்டு பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிக நெருக்கடியான ஆண்டாகவே மாறியது.
வில்லியம் மற்றும் கேட் தம்பதி
தற்போது இருவரும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மன்னர் சார்லஸின் சிகிச்சை அடுத்த ஆண்டும் தொடரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மன்னர் சார்லஸ் முன்னெடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக விருந்து நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி கலந்துகொள்ளவில்லை.
சீன உளவாளியுடன் நெருக்கம் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவும் இந்த விருந்தில் இருந்து கலந்துகொள்ளாமல் விலகினார். திட்டமிட்டபடி வில்லியம் – கேட் தம்பதி நார்ஃபோக் சென்றுள்ளனர்.