நத்தாருக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்து பலர் பலி : 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்
கொங்கோ நாட்டில் அதிகப்படியானவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
வடகிழக்கு கொங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) போண்டே எனும் இடம் வரையில் பயணம் செய்யும் படகில் சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளனர். அப்போது நடு வழியில் அந்த படகு கவிழ்ந்துள்ளது. இதில் 38பேர் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள்
இந்த படகில் பயணம் செய்த பெரும்பாலானோர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் எனவும் அவர்கள் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தாதாகவும் கூறப்படுகிறது.
பயணப்படகுகளில் அதிக நபர்களை ஏற்றக்கூடாது எனவும் மீறினால் தண்டனை அளிக்கப்படும் எனவும் கொங்கோ நாட்டு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற படகு விபத்துகள் அந்நாட்டில் நிகழ்வது தொடர்கதையாகி வருகின்றது.
தொடர் மோதல்கள்
மேலும், மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையே தொடர் மோதல்கள் ஏற்பட்டு வருவதினால், பெரும்பாலான சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு செல்ல அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.