;
Athirady Tamil News

84 விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

0

சென்னை: தமிழ்நாட்டைச் சோ்ந்த 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, நிகழாண்டில் 100 வீரா், வீராங்கனைகளுக்க அரசுப் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

84 பேருக்கு பணி: இந்த அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிக் கல்வி, தொழில், எரிசக்தி, கூட்டுறவு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், நெடுஞ்சாலைத் துறைகள் என 14 அரசுத் துறைகளில் பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இளநிலை உதவியாளா், உதவியாளா், இளநிலை வரைவு அலுவலா், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளா் போன்ற பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்வின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.