;
Athirady Tamil News

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்: ரஷ்யா எச்சரிக்கை

0

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

கஜகஸ்தானில் 38 பேர் உயிரிழந்த பயணிகள் விமான விபத்துக்கான காரணம் குறித்து யூகங்களை பரப்ப வேண்டாம் என்று ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது.

ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), விமான விபத்து குறித்த விசாரணை முடியும் வரை காத்திருக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

சில விமான போக்குவரத்து நிபுணர்களின் கூற்றுப்படி, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்ய குடியரசான செச்னியா மீது பறந்து கொண்டிருந்தபோது வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டது.

இந்த விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை தான் காரணம் என்று அஜர்பைஜான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “விசாரணையின் முடிவுகளுக்கு முன்னர் எந்தவொரு அனுமானத்தையும் முன்வைப்பது தவறு. நிச்சயமாக நாங்கள் இதை செய்ய மாட்டோம், யாரும் இதை செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

Embraer 190 விமானம் புதன்கிழமை காலை அஜர்பைஜானின் பாகுவில் இருந்து செச்னியாவில் உள்ள குரோஸ்னிக்கு புறப்பட்டது.

மூடுபனி காரணமாக விமானம் மேற்கு கஜகஸ்தானில் உள்ள அக்தாவ் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

விபத்துக்கு முன்பு, விமானம் காஸ்பியன் கடலில் பறந்தது. விமானி இரண்டு முறை குரோஸ்னிக்கு அருகே அடர்த்தியான மூடுபனியில் தரையிறங்க முயன்றார், ஆனால் முடியவில்லை.

ஆக்டோவில் உள்ள ஓடுபாதையில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர்.

கஜகஸ்தான் அதிகாரிகள் விமான தரவு ரெக்கார்டரை மீட்டுள்ளனர் மற்றும் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.