நுவரெலியா மாவட்ட கல்விச் சமூகத்தினர் யாருக்கு வாக்களித்தனர்?
நாகநாதர்
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலய தமிழ் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களித்திருப்பர் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்லலாம்.
அவர்கள் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை. ஏனென்றால் அத்தேர்தலில் இ.தொ.கா ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றிருந்தது. அப்படியானால் அவர்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்தார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படியானால் அவர்களின் தெரிவாக இருப்பது தேசிய மக்கள் சக்தி தானே ? அப்படியானால் அவர்கள் அதற்குத் தானே வாக்களித்திருக்க வேண்டும்?
ஆம் கணிசமான தமிழ் ஆசிரியர்கள், அதிபர்கள், ஓய்வு பெற்ற கல்வியியலாளர்களின் தெரிவு தேசிய மக்கள் சக்தியாகவே இருந்தது. இதற்கு என்ன காரணம் என்பதுவும் அனைவருமே அறிந்த விடயம். நுவரெலியா மாவட்டத்தில் அதிக தமிழ்ப்பாடசாலைகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ,அதிபர்கள் கொண்ட இரு கல்வி வலயங்களாக நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலயங்கள் விளங்குகின்றன. அதே போன்று அதிக அரசியல் தலையீடுகள் , சீர்கேடுகள், பழிவாங்கல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் நிறைந்த வலயங்களாகவும் இவை இரண்டுமே உள்ளன.
கல்வி நிருப சுற்று நிருபங்களை மீறி தமக்கு சாதகமான அதிபர் ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு நியமித்தல், கேள்வி கேட்பவர்களை இடமாற்றம் செய்தல் , ஓய்வூதியங்களை நிறுத்தி வைத்தல், சம்பள அதிகரிப்பு சிபாரிசுகளை இழுத்தடிப்பு செய்தல், நிதி மோசடி மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிபர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காது அவர்களை வலயக் கல்வி பணிமனையின் உட்கார வைத்தல் என பல விதமான சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இதில் கூடுதல் சம்பவங்கள் நிச்சயமாக அட்டன் கல்வி வலயத்திலேயே இடம்பெற்று வருகின்றன.
அரசியல்வாதிகளால் நியமனம் செய்யப்படும் கல்வி அதிகாரிகள் கடந்த காலங்களில் அட்டன் வலய பாடசாலைகளின் கல்வியை எந்தளவுக்கு சீரழித்தனர் என்பதன் வெளிப்பாடு தான் , இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட முடிவுகள்.
இது கிட்டத்தட்ட 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை போன்றது. அதாவது அத்தேர்தலில் இறுதியுத்தத்தில் தமிழ் மக்களுக்கு பாரிய சேதத்தை விளைவித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். அது அவரின் மீது உள்ள அபிமானத்தினாலோ அல்லது ஆதரவினாலோ அல்ல. மகிந்த ராஜபக்ச வெற்றி பெறக் கூடாது என்பதும் அவர் மீதுள்ள வெறுப்புணர்வுமே காரணம்.
அதே போன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச ஊழியர்களில், ஆசிரியர்கள் பெருமளவுக்கு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமைக்குக் காரணம் கடந்த காலத்தில் இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டுமே மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்படுத்திய தாக்கங்களாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை கொண்டிருந்த போதும் அதற்குப் பிறகு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பக்கம் இருந்த சந்தர்ப்பத்திலும் நுவரெலியா மாவட்ட கல்வித்துறையில் அரசியல் தலையீடு மிதமிஞ்சியதாக இருந்தது.
அதிபர் வெற்றிடங்கள் மத்திய மாகாண செயலாளரின் நேர்முகத் தேர்வின்றி நிரப்பப்பட்டன. இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐ கொண்ட அதிபர்கள் இருந்தம் மேலதிக ஆளணியினராக இருந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஐந்து வருடங்கள் கடந்தும் பல அதிபர்கள் ஒரே கல்லூரியில் கோலோச்சினர். இருபது வருடங்கள் வரை ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் இருந்தனர்.
கல்வி அதிகாரிகள் தமதிஷ்டப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். இதற்கு சிறந்த உதாரணம் அட்டன் கல்வி வலய பாடசாலைகளில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற முறைகேடான ஆசிரியர் இடமாற்றங்கள். இது பல ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. சில பாடசாலைகளின் உயர்தர பிரிவுகளில் ஆசிரியர்களே இல்லாமல் போன சம்பவங்களும் நடந்தன. ஆனால் அரசியல் சிபாரிசுகள் மூலம் பாடசாலைகளில் நியமனம் பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. அதற்கெதிராக குரல் கொடுக்கவும் இல்லை.
எல்லாவற்றையும் விட குறித்த ஆசிரியர் இடமாற்றங்களையும், அதனால் ஏற்பட்ட சீரழிவுகளையும் பார்த்துக்கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மெளனம் சாதிக்க, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி எம்.பிக்களும் அதற்கெதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தேர்தலின் போது கட்சிகளுக்குக் கிடைத்த தபால் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு இதை நோக்கலாம். நுவரெலியா மாவட்டத்தில் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 20,502 ஆகும். வாக்களித்தோரின் எண்ணிக்கை 20,140. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 740. செல்லுபடியான வாக்குகள் 19,400. ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட இ.தொ.காவுக்கு மாவட்டத்தில் கிடைத்த மொத்த தபால் வாக்குகள் 1660 ஆகும்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி 2,477 வாக்குகளைப் பெற தேசிய மக்கள் சக்தி அதிகபட்சமாக 13,937 வாக்குகளைப் பெற்றிருந்தது. நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கும் போது, தமிழ்க் கல்வியின் காவலர்கள் என கடந்த காலங்களில் முழங்கி வந்த பிரதான தமிழ்க் கட்சியான இ.தொ.காவுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் 1660 மாத்திரமே.
இவர்களுக்கு கல்வித்துறையின் ஆதரவு கிடைக்காமைக்கு கல்வி சீர்கேடுகள் குறித்து இவர்கள் கண்டு கொள்ளாதது மாத்திரம் காரணம் அல்ல, சில சீர்கேடுகளுக்கு இவர்களே காரணகர்த்தாக்களாக இருந்ததும் முக்கிய விடயம். மாத்திரமின்றி கல்வித்துறையினரின் மனவோட்டங்களை அறிந்து அதை கட்சி தலைமைகளிடம் எடுத்துக் கூறுமளவுக்கு சமயோசிதமானவர்களை தனதருகில் வைத்துக்கொள்ளாததும் ஒரு காரணம்.
கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்ட இந்த சீரழிவுகளை நிவர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை கண்டும் காணாமல் இருந்தமை மிகவும் வேதனையாகும். ஆனால் இந்த தாக்கங்களின் விளைவுகள் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் அதிகமாகும். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் மேற்கூறிய கட்சிகளுக்கு கல்வித்துறையின் ஆதரவு கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு.