கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையே, ட்ரூடோவின் எக்ஸ் பதிவை விமர்சித்து டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க செயல்திறன் துறை தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரூடோவை விமர்சித்த எலான், தனது எக்ஸ் பதிவில் “பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் ஆளுநர் இல்லை. ஆகையால், உங்கள் கருத்துகள் குறித்து கவலைகள் இல்லை’’ என்று கூறியுள்ளார்.
There isn’t a snowball’s chance in hell that Canada would become part of the United States.
Workers and communities in both our countries benefit from being each other’s biggest trading and security partner.
— Justin Trudeau (@JustinTrudeau) January 7, 2025
Girl, you’re not the governor of Canada anymore, so doesn’t matter what you say
— Elon Musk (@elonmusk) January 8, 2025
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை மேற்கோள் காட்டி கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலவும் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கத் தவறினால் கனடா பொருள்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்தியிருந்தார். இந்த அச்சுறுத்தல் அரசியல் ரீதியாக சவாலான சூழலுக்கு கனடாவைத் தள்ளியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். அவர் ராஜிநாமாவை அறிவித்த அடுத்த நாளே, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்குமாறு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.