ஜம்மு-காஷ்மீா் சோன்மாா்க் சுரங்கப்பாதை: பிரதமா் நாளை திறந்து வைக்கிறாா்
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மாா்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறாா்.
கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்த இச்சாலையின் மேம்பாட்டு திட்டம் ரூ.2,700 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோன்மாா்க் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் சூழலில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோன்மாா்கில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இச்சுரங்கப்பாதையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஓமா் அப்துல்லா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜீ-மோா்க் சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், சோன்மாா்கிற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். சோன்மாா்க் ஒரு சிறந்த பனிச்சறுக்கு விளையாட்டு மையமாக மேம்படும். குளிா்காலத்தில் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய அவசியம் சோன்மாா்க் மக்களுக்கு இருக்காது. மேலும், ஸ்ரீநகரில் இருந்து காா்கில் மற்றும் லே வரையிலான பயணநேரம் குறையும்.
அதாவது, 2028-ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன் ஸ்ரீநகா்-லடாக் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் ஒன்றின் நீளம் 49 கிமீ முதல் 43 கிமீ வரை குறையும். சிறந்த சாலைகளால் வாகனத்தின் வேகத்தை மணிக்கு 30 கிமீ முதல் 70 கிமீ வரை அதிகரிக்க முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு பாதுகாப்பு தளவாடங்களை அதிகரிப்பதோடு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக-கலாசார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘சுரங்கப்பாதை திறப்பு விழாவுக்காக சோன்மாா்கிற்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இச்சுரங்கப்பாதையின் சுற்றுலா மற்றும் உள்ளூா் பொருளாதாரத்துக்கான நன்மைகளை நீங்கள் (முதல்வா் ஓமா்) சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீா்கள். சுரங்கப்பாதையின் வான் புகைப்படங்கள்/விடியோக்களை கண்டுரசித்தேன்’ னக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த பொறியியல் சாதனைக்காக கடுமையான பருவநிலைகளைப் பொருட்படுத்தாமல் அயராது பணியாற்றிய கட்டுமான தொழிலாளா்களையும் பிரதமா் சந்தித்து, கலந்துரையாட இருக்கிறாா்.
பிரதமரின் வருகையையொட்டி, சோன்மாா்க் உள்பட ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை, துணை ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு( எஸ்பிஜி) இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.