ஜனாதிபதி வீட்டை மீண்டும் சுற்றிவளைத்த பொலிசார்: ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம்
ஜனாதிபதி யூன் சுக் இயோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரைக் கைது செய்ய தென் கொரிய அதிகாரிகள் முயற்சி முன்னெடுத்துள்ளனர்.
முயற்சிகள் தோல்வி
பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் நபராக உள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ இல்லம் 1,000 கலகத் தடுப்பு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட உள்ளது.
மட்டுமின்றி, நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை பொலிசார் அமுல்படுத்த உள்ளனர். டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் தோல்வியுற்றதன் பேரில் கிளர்ச்சியைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் சியோல் இல்லத்தை முற்றுகையிடத் தொடங்கினர். ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு சேவையின் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
இந்த நிலையில், மற்றொரு கைது முயற்சியை எதிர்பார்த்து, யூனின் ஊழியர்கள் அவரது சொகுசு மாளிகையின் பாதுகாப்பை பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பொலிசாருடன் தென் கொரிய ஊழல் விசாரணை அதிகாரிகளும் களமிறங்கியுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதனிடையே, கைதாணை இருந்தபோதிலும், கைது சட்டப்பூர்வமானதா என்பது குறித்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. யூனின் விசுவாசமான ஆதரவாளர்கள் தங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு வீட்டைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.
ஜனவரி மாத தொடக்கத்தில் அதிகாரிகள் முதன்முதலில் ஜனாதிபதியைக் கைது செய்ய முயன்றபோதும் யூன் விசுவாசிகள் இதேபோன்ற நடவடிக்கையைச் செய்தனர். மட்டுமின்றி, மக்களால் ஜனாதிபதி பாதுகாக்கபப்டுவதாகவும் எங்கள் பிணத்தின் மீது தான் கைது நடவடிக்கை நடத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த ஜனாதிபதியைத் தேடி பல மணி நேரம் செலவிட்ட பிறகு, ஜனவரி 3 ஆம் திகதி காவல்துறையினர் தங்கள் கைது நடவடிக்கையை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போதும் பொலிசாருக்கு பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த கைதாணை நிறைவேற்றப்பட்டால், தென் கொரிய வரலாற்றில் கைது செய்யப்படும் முதல் ஜனாதிபதியாக யூன் அறியப்படுவார்.