;
Athirady Tamil News

மோசமான வானிலை: தில்லியில் 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்!

0

புது தில்லியில் இன்று (ஜன.15) காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று (ஜன.15) காலை 5.30 மணியளவில் தில்லியின் சபார்டஞ் பகுதியின் குறைந்தபட்ச தெரிவுநிலை 200 மீட்டர்களாகவும், பாலம் பகுதியில் 150 மீட்டர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

புது தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான ஓடுபாதையின் தெரிவுநிலை 75 முதல் 300 மீட்டர்கள் அளவிலுள்ளதாகவும், இதனால் அங்கு இயக்கப்படும் விமானங்கள் சிஏடி 3 எனும் கட்டுபாடுகளின் கீழ் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் நேரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு அந்த விமானநிலைத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படவிருந்த 26 ரயில்களும் அடர்த்தியான மூடுபனியால் தாமதமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தில்லிக்கு மூடுபனிக்காக ஆரஞ்சு அலார்ட் அறிவித்திருந்தது. மேலும், வாகன ஓட்டிகளும் பயணிகளும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.