ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது.
இந்நிலையில், அந்நாட்டில் இந்த சட்டத்தை மீறும் பெண்களை கண்டுபிடிக்கவும், ஹிஜாப்பை முழுமையாக கடைபிடிக்க செய்யவும் ஈரான் அரசு சிசிடிவி உள்ளிட்ட நவீன முறைகளை கையாள்வதாக ஐக்கிய நாடுகளின் சபையானது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிகையில், ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டுபிடிக்க ஈரான் அரசு பெரும்பாலும் இந்த சட்டங்களை ஆதரிக்கும் அந்நாட்டு மக்களையே சார்ந்துள்ளதாகவும், ஹிஜாப்பை அணிவதும் அதை மீறுபவர்களை கண்டுபிடித்து புகாரளிப்பதும் மக்களின் பொறுப்பு என்ற பிம்பத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை மீறும் பெண்கள் குறித்து மக்கள் புகாரளிக்க ‘நாஸர்’ எனும் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளதாகவும் அதன் மூலம் கார், பேருந்து, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாமல் செல்வது குறித்து புகாரளிக்கப்பட்டால் உடனடியாக அவர்களது வாகனத்தை அடையாளம் கண்டுபிடித்து அவர்களது செல்போனுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தில், அடுத்ததாக ஈரான் அரசு மின்னனு சாதனங்களின் உதவியை சார்ந்துள்ளதாகவும், டிரோன் போன்ற நவீன சாதனங்களைக் கொண்டு பொது இடங்களில் பெண்களை கண்கானிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெஹ்ரானிலுள்ள அமீர்கபீர் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் அந்நாட்டு அதிகாரிகள் முகங்களை அங்கீகரிக்கும் சாஃப்ட்வேர்களை நிறுவி அதன் மூலம் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டுபிடிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மஹ்ஸா அமினி என்ற பெண் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் மர்மமான முறையில் பலியானார். அவரது, மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டு ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவிலான மக்கள் போராட்டம் வெடித்தது.
ஆனால், அந்த போராட்டங்களை ஈரான் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. அந்த போராட்டங்களில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 22,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டங்களுக்கு பின் அந்நாட்டு ஹிஜாப் சட்டங்கள் சில காலத்திற்கு தளர்ந்த நிலையில் காணப்பட்டாலும் கடந்த 2024 ஏப்ரலில் ’நூர்’ என்ற திட்டம் மூலம் அது மீண்டும் கடுமையாக்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனைப் பெற்ற 938 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.