பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான நடமாடும் சேவை

இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.03.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு பிறப்பு சான்றிதழ் பெற முடியாதுள்ளவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும், நலன்புரி நன்மைகள் திட்டத்திற்கு கட்டாயம் தேசிய அடையாள அட்டை தேவையாகவுள்ளதாகவும் அதற்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம் எனவும் குறிப்பிட்டதுடன்,இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்ட பிரதிப் பதிவாளர், பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவிப் பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த நடமாடும் சேவையினை 18.06.2025 ஆம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 30 சிறுவர்களுக்கும் உத்தேச வயதுப்பத்திரம் 05 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 07 பேருக்கும், இறப்பு பதிவு 04 பேருக்குமாக 46 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் பி.பிரபாகர், மாவட்ட உதவிப்பதிவாளர் நாயகம் பி.தாரகா ,மாவட்ட மற்றும் பிரதேச செயலக மேலதிக பதிவாளர்கள் ,பிரதேச சிறுவர் மேம்பாடு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.