;
Athirady Tamil News

இழுவை வலைத் தடைச் சட்டத்தின் அவசியம் !! (கட்டுரை)

0

திங்கட்கிழமை (18) இரவு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது, இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில், மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே இவ்வாறு உயிரிழந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி, 40 நாள்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன.

இலங்கை – இந்தியக் கடற்பரப்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களில் ஒருவராக, ராஜ்கீரனும் மாறியிருக்கின்றார்.

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிணக்கு என்பது, அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலானது. அதுவும், இந்தியப் பெருமுதலாளிகள், பாரிய இழுவை மடிகளைக் கொண்ட தொழில்முறைக்குச் சென்றது முதல், இலங்கை, இந்திய மீனவர் பிணக்கு, அடுத்த கட்டத்தை அடைந்தது.

அந்தப் பிணக்கில், தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் தரப்பாக, இலங்கை மீனவர்களே இருந்தனர். இலங்கையின் கடற்பரப்பின் வளத்தை, ஒரேயடியாக வாரிச்சுருட்டிச் செல்லும் இந்திய பாரிய இழுவைப் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் உபகரணங்களையும் சேதமாக்கிவிட்டும் செல்கின்றன.

அதுவும், வடக்கு மீனவர்கள் பார்த்திருக்க, அவர்களின் கரைகளில் அதுவும் நிலத்திலிருந்து 500 மீட்டர் தூரமுள்ள கடற்பரப்பு வரையில் வந்து, பாரிய இழுவைப் படகுகள் கொண்டு, கடல் வளத்தை அள்ளிச் செல்கின்றன.

கடந்த வாரங்களில், பருத்தித்துறை, வடமராட்சிக் கிழக்கு, முல்லைத்தீவு ஆகிய இடங்களின் கடற்பரப்பில், ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள், நாள்கணக்கில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தன.

கடந்த சில ஆண்டுகளாக, சற்றே குறைந்திருந்த இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல், சில மாதங்களாக மீண்டும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு, தற்போதைய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் மேம்போக்கான அணுகுமுறை காரணமாகும்.

குறிப்பாக, கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இந்திய இழுவைப் படகு மீனவர்களை, இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில், ஆர்வம் வெளியிட்டிருந்தமை அதற்கு முக்கிய காரணமாகும்.

இலங்கையின் வடக்கு மீனவர்கள், தங்களது கடற்பரப்பினுள், கடல் வளத்தை அழிக்கும் இழுவை மடி தொழில் முறையைத் தடை செய்ய வேண்டும் என்று, 2010ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

அதன் பலனாக, கடந்த நல்லாட்சிக் காலத்தில் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த இழுவை வலைத் தடைச் சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் கடற்பரப்பில், எந்தவொரு தரப்பினரும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடை செய்யும் குறித்த சட்டத்தில், தடையை மீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகளும் முக்கியமானவை.

படகுகளைப் பறிமுதல் செய்வது தொடங்கி, பாரிய தண்டத்தொகையையும் அறவிடும் சரத்துகளும் உள்ளடங்கி இருக்கின்றன. குறித்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, இலங்கை, இந்திய மீனவர் தரப்புகளுக்கு இடையில், கொழும்பிலும் புதுடெல்லியிலும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றிருக்கின்றன.

இதன்போது, இழுவை வலைகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டு, அதைத் தடை செய்வது சரியான நடைமுறை என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. படிப்படியாக, இழுவை வலை தொழில்முறையில் இருந்து, இந்திய மீனவர்களை மாற்றுத் தொழில்முறைக்கு மாற்றுவது தொடர்பிலும், இந்திய மத்திய அரசு இணக்கத்தை வெளியிட்டிருந்தது.

ஆனாலும், அந்த நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசோ, தமிழக அரசோ ஈடுபடவில்லை. இதனால், இந்திய இழுவைப் படகுகள் எல்லை தாண்டி, இலங்கையின் குறிப்பாக வடக்கின் கடல்வளத்தை அபகரிக்கும் செயற்பாடுகளும் நின்றுபோகவில்லை.

தற்போது, இந்திய இழுவைப் படகுகள், இலங்கையின் கடற்பரப்பில் நுழைவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, நிறைவேற்றப்பட்ட இழுவை வலைத் தடைச் சட்டத்தை, முறையாக அமல்படுத்துவதிலேயே தங்கியிருக்கின்றது.

இதை வலியுறுத்தி, எம்.ஏ சுமந்திரனின் அழைப்பின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (17) முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலான கடல்வழிப் போராட்டமொன்றை மீனவர்கள் நடத்தியிருந்தனர்.

சம்பந்தப்பட்ட போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சமூக ஊடகங்களில் சில ‘ஆர்வக்கோளாறுகள்’, குறித்த போராட்டம், இந்தியாவுக்கு எதிராக ஏன் முன்னெடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பின. இன்னும் சிலரோ, போராட்டக்காரர்களைக் கேலி செய்தனர்.

போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் போது, அதன் அடிப்படைகள் தெரியாது விமர்சிக்கவும் கேள்வி எழுப்பவும் முற்படும்போது, போராட்டம் குறித்துப் பொதுவெளியில் தப்பான எண்ணங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவை, அரைநூற்றாண்டு காலமாக வளச்சுரண்டலால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்களை மோசமாகப் பாதிக்கும்.

இன்னொரு தரப்போ, குறித்த போராட்டம், இந்தியாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாகச் சித்திரிக்க முயன்றன. அதிலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்ற வெளிநாடுகளின் மதவாத அமைப்புகள், புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள், துண்டறிக்கைகளின் மூலம் பிரிவினையை தோற்றுவிக்க முயன்றன.

போராட்டம் குறித்த தெளிவின்றி விமர்சிப்பவர்களும் எள்ளிநகையாடல் செய்பவர்களும், மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு ஒப்பானவர்களேயாவர்.

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கடல் வளச்சுரண்டலைத் தடுத்து, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும் என்றால், அதைச் செய்வதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.

துறைசார்ந்த அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, சட்டத்தை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பணிப்பது, அவரது முக்கிய வேலை. ஆனால், அவரோ அதையெல்லாம் விடுத்து நின்று, இந்திய இழுவைப் படகு மீனவர்களை, இலங்கையின் கடற்பரப்பில் அனுமதிப்பது தொடர்பில், ஆர்வம் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அவர், யாருக்கான அமைச்சர் என்பதையே மறந்து நின்று செயற்படும் தோரணையை வெளிப்படுத்துகிறார்.

இழுவை வலைத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்ப்பதன் ஊடாக, இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் பிணக்குகளைப் பேண வேண்டிய தேவை, தென் இலங்கையின் இனவாத, அடிப்படைவாத தரப்புகளுக்கு இருக்கலாம்.

ஏனெனில், தமிழகத்தின் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு சீராக இருப்பது, தென் இலங்கைக்கு அச்சுறுத்தலானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவ்வாறான நினைப்பின் போக்கில், ராஜபக்‌ஷர்களோ ‌அல்லது நாளை வரும் இன்னோர் ஆட்சியாளர்களோ, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து விலகியிருக்க முயற்சிக்கலாம்.

ஆனால், அவ்வாறான சதிகளுக்கு எதிராக ஒருங்கிணைவது என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முக்கியமானது. அதுதான், தேவையற்ற உயிரிழப்புகளையும் தடுக்கும்.

இலங்கை, இந்திய கடற்பரப்பில் யார் கொல்லப்பட்டாலும், அவர்கள் ஈழத்தமிழர்களாகவோ அல்லது தமிழகத் தமிழர்களாகவோ தான் இருப்பார்கள்.

இழுவை வலைத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிணக்குகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம். ஆக, அந்தக் கட்டத்தை அடைவதுதான் தற்போதுள்ள முக்கியமான வழிமுறை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.