வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்!! (கட்டுரை)
இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி.
ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும்.
இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகப் பொருளாதார நெருக்கடி சார்ந்ததும் அயலுறவுக் கொள்கை சார்ந்ததும் ஆகும். எனவே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, வெறுமனே பொருளியல் நோக்கில் மட்டும் அணுகிவிட முடியாது.
இந்த உண்மையை, ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், இது மிகவும் கசப்பான உண்மை. இது, இலங்கையின் அரசியல்-சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு சார் மாற்றங்களை வேண்டிநிற்கும்.
எனவே, இதை வசதியாகத் தவிர்த்துவிடுவது நல்லது. இதையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே, கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளை, பொருளியல் அடிப்படைகளில் நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கவியலும்.
1. பொதுக்கடனின் பாரிய அதிகரிப்பு
2. அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு
3. நிதிப்பற்றாக்குறை
4. முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை.
இந்த நான்கையும் வரவு செலவுத் திட்டம் இனங்காணத் தவறுகிறது. இது தெரியாமல் நிகழ்ந்ததென்று எவரும் நம்பவில்லை. திட்டமிட்டே திசைதிருப்பும் யுத்தியாக, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு வேறு காரணங்களைக் காட்டும் நோக்கில் அமைந்ததே இந்த பட்ஜெட். இதை, வரவு செலவுத் திட்ட உரையை முழுமையாகக் கேட்ட எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் ஒன்று சுற்றுலாத்துறை. ஈஸ்டர் தாக்குதலும் அதைத் தொடர்ந்த கொவிட்-19 பெருந்தொற்றும் இத்துறையை முற்றாகச் சிதைத்துள்ளன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட உரையில், “கொரோனாவை வெற்றிகொண்டதன் விளைவால், சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக, பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மீட்டெடுப்பதற்கு எமக்கு இயலுமாகவிருந்தது” என்றார். இது, அரசாங்கம் உண்மையை ஏற்க மறுத்து, மக்களை ஏமாற்றுகின்றது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் மட்டுமே!
நிதியமைச்சர், வரவு செலவுத் திட்ட உரையில், இலங்கையின் பிரதானமான மூன்று சவால்களாக இனங்கண்டவை பின்வருமாறு இருந்தன:
1. சர்வதேச போதைப்பொருள் மாபியா
2. நாட்டுக்குத் தீங்குவிளைவிக்கும் அந்நியச் சக்திகள்
3. மோசடியான வியாபாரத் தொழிற்பாடுகள்.
இதில் முதல் இரண்டும், இலங்கைக்கு வெளியே உள்ள காரணிகளைச் சுட்டுகின்றன. மூன்றாவது, மோசடியான வியாபாரத் தொழிற்பாடுகளை, இந்த அரசாங்கம் தான் ஊக்குவிக்கிறது. சான்றாக, பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி, விரும்பிய விலையில் பொருட்களை விற்பதற்கு, இதே நிதியமைச்சர் தான் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதியளித்தார்.
இலங்கையின் சவால்களை, வெளியே அடையாளம் காணுவது வசதியானதும் வாய்ப்பானதும் ஆகும். ஏனெனில், எதிரி வெளியே இருக்கிறான் என்பதனூடு தேசியவாதத்தை வளர்க்கமுடிகின்ற அதேவேளை, இதைக் கையாளுவதற்கான பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளவும் இயலுமாகிறது.
இம்முறை பட்ஜெட்டின் பெரும்பகுதி, தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான மொத்தச் செலவீனத்தில் 15 சதவீதம் தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீத அதிகரிப்பாகும். இது, இலங்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் கோடு காட்டுகிறது.
இலங்கையர்களுக்கு இன்னமும் எஞ்சியுள்ள இரண்டு முக்கியமான சமூகப் பாதுகாப்புகள் இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களாக அவை, திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கம், கல்வியையும் சுகாதாரத்தையும் எவ்வாறு நோக்குகிறது என்பதற்கு, வரவு செலவுத் திட்ட உரை நல்லதொரு சான்று.
நிதியமைச்சர் தனது உரையில், “கல்வி, சுகாதார வசதிகளில் அடையாளம் காணப்பட்ட மாவட்ட ஏற்றதாழ்வைக் குறைப்பதற்காக, எப்போதும் எமது அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது. இதற்காக, தனியார் துறையும் எப்போதும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளது. இம்முயற்சிகளை, மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன பாணியில் சர்வதேசப் பாடசாலையும் வைத்தியசாலையும் ஏற்படுத்துவதற்கு, முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு காணிகளையும் வரிச் சலுகைகளையும் வழங்குவதற்கு முன்மொழிகிறேன்” என்றார்.
ஏற்ற தாழ்வுகளைக் களைவதற்கு, தனியார் சர்வதேச பாடசாலைகளும் தனியார் வைத்தியசாலைகளும் உதவும் என்ற அரசாங்கத்தின் நோக்கு, அரசாங்கம் மக்களுக்கானது அல்ல; மாறாக, இலாபத்துக்கும் தனியாரின் நலன்களுக்குமானது என்ற உண்மையை, நிதியமைச்சர் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்; இது புதிதல்ல!
நாட்டின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும், கடந்த 70 வருடகாலப் பாராளுமன்ற ஆட்சி ஊடாக, மாறி மாறி அதிகாரத்துக்கு வந்தவர்களால் நாடு தேய்ந்து சென்றதே தவிர, வளர்ச்சி அடையவில்லை. அதிலும் குறிப்பாக, கடந்த 43 ஆண்டு (1978-2021) கால ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ், நாடு சகலதுறைகளிலும் சீரழிக்கப் பட்டே வந்துள்ளது. 1977இல் இருந்து, இரண்டு பிரதான விடயங்களை ஆட்சிக்கு வரும் பேரினவாத முதலாளித்துவ சக்திகளால் முன்னெடுக்கப்பட்டன.
ஒன்று, உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ், தாராளமயம் – தனியார்மயத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டமை.
இரண்டாவது, இன முரண்பாட்டை, பேரினவாத ஒடுக்குமுறையாக்கி, கொடிய யுத்தத்தைத் திணித்து வளர்த்தெடுத்தமை.
இந்த இரண்டின் தொடர்ச்சியை, எந்தவொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் கைவிடவில்லை. இதன் தொடர்ச்சியையே முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலும் காண முடிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும், பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வந்துள்ளன. ரூபாயின் பெறுமதி, வீழ்ச்சி அடைந்து வந்துள்ளது. பணவீக்கம் உயர்வடைந்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்தினதும் விலைகள் உயர்ந்து உள்ளன. வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது, உழைக்கும் மக்கள் திணறி வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு வருடங்களில் பல மடங்காகப் பெருகி உள்ளது.
பொருட்களின் அதிகரித்த விலை உயர்வுகளுக்கும் சேவைக் கட்டணங்களின் அதிகரிப்புகளுக்கும் கொரோனாவும் உலகச் சந்தையும் தான் காரணம் என, அரசாங்கத்தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளை, சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களை, இனஅடிப்படையில் ஒருவரோடு ஒருவர் மோத வைக்கப்படுகின்றனர்.
ரூபாயின் இன்றைய மதிப்பிறக்கத்தை, ஓர் இடைக்கால நிகழ்வாகக் கருதி, குறுகியகாலத் தீர்வுகளால் கையாள முயலும் போக்கே தொடர்கிறது. அதற்கான காரணங்களை, வசதியாகப் புறத்தே தேடி, தேசியவாத உணர்வுகளைக் கிளறுவதன் மூலம், காலங்கடத்த அரசாங்கம் நினைக்கிறது. அதேவேளை, ஊழலும் அதிகாரத் துர்ப்பாவனையும் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. இவை குறித்துப் பேச, அரசாங்கம் தயராக இல்லை.
இலங்கையின் பொருளாதாரம், மிகப்பாரிய உள்ளார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகளை, ஒருபுறம் அரசாங்கம் மூடுகிறது. இன்னொருபுறம், இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல், அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது.
இந்த அரசாங்கம், கிராம மட்டத்தில் தனது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சில வேலைத் திட்டங்களை, பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளது. அது, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அரசநிதியை மறைமுகமாக வழங்கும் செயலன்றி மக்களுக்கானதல்ல. பொருளாதாரத்தைச் சீரமைக்காத, மக்களுக்கு எதையும் வழங்காத, இருப்பதையும் உருவிக்கொள்ளும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து, ஆதரவைப் பெற இவ்வரசாங்கத்தால் முடிந்திருக்கிறது.
மக்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள். நாம் இழப்பதற்கு, இன்னமும் நிறைய இருக்கின்றன.