;
Athirady Tamil News

வடக்கின் அபிவிருத்தி!! (கட்டுரை)

0

அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று க்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை, நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதும் எதுவித உத்தரவாதமோ விசேட கவனிப்போ இன்றி, நாட்டின் ஏனைய பகுதியினருடன் அவர்களை போட்டியிட நிர்ப்பந்திப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சியாகவே கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றை, எதுவிதமாக விசேட நிவாரண அல்லது உதவி ஏற்பாடுகளுமின்றி, மற்றையவர்களோடு போட்டியிடச் சொல்வது நியாயமாகாது.

மறுபுறத்தில், 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து நாம் அவதானித்தால், கணிசமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வடக்கின் எதிர்காலத்தை வளமாக்கும் விதைகள் எதுவும் இதுவரை விதைக்கப்படவில்லை.

அபிவிருத்தியின் அடிப்படை, பொருளாதார வளர்ச்சி. குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் வடக்கில் முன்னெடுக்கப்படவில்லை.

உட்கட்டமைப்பு வசதிகள் என்பவை, வடக்கை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைக்கும் வீதிகள், ரயில்ப் பாதையமைப்பு என்பதைத்தாண்டி, பெரும் முன்னேற்றம் காணவில்லை. வீடமைப்பு என்பது ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டாலும், அதனைத்தாண்டிய வாழ்வாதார வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை முன்னெடுக்கப்படாமையால், மக்கள் வறுமையில் உழலவேண்டிய சூழலே காணப்படுகிறது.

இவையெல்லாம், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுபவை, வெறும் கண்துடைப்புக்கள்தான் என்பதை கோடிகாட்டி நிற்பதோடு, நீடித்து நிலைக்கத்தக்க அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்புகளும், திட்டங்களும், ஏன் சிந்தனைகள் கூட இருப்பதாகத் தெரியவில்லை.

விதையை விதைக்கிறவன், பலவேளைகளில் விருட்சத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவதில்லை. ஆனால், அதற்காக அவன் விதைக்காமலே இருந்துவிட்டால், விருட்சங்களை எந்தத் தலைமுறையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். அபிவிருத்திக்கான விதைகளை நாம் இன்று விதைப்பதைப் பற்றிச் சிந்தித்தால்தான், நாளைய தலைமுறைக்கு அவர்கள் மகிழ்ச்சியோடு வளமாக வாழத்தக்கதொரு மண் கிடைக்கும்.

பொருளாதாரத்தின் ஆணிவேர் உற்பத்தி. பொருட்களை உற்பத்தி செய்வதும், சேவைகளை வழங்குவதும் பொருளாதாரத்தின் அடிப்படை. உற்பத்திகள் உள்ளூர் சந்தைகளைத் தாண்டி வௌியூர் சந்தைகளைச் சென்றடைய வேண்டும். சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, வௌிநாட்டவர்கள் வரவேண்டும். அப்போதுதான் அந்த மண்ணின் பொருளாதாரம் பெருகும்; மக்களின் வாழ்வு வளமாகும்.

உலகத்தோடு இணையும் நவீன புள்ளி இணையம். பலமான இணைய வசதி இருக்கும் போது, நவீன கணினித் தொழில்நுட்ப சேவைகளை முழு உலகுக்கும் வழங்குவது சாத்தியமாகும். ஆனால், பொருட்களும் சேவைகளும் வழங்கப்பட, பாரம்பரிய இணைப்பு வசதிகளான துறைமுகமும் விமான நிலையமும் அவசியமாகிறது.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால், நாடோடிகளாகத் திரிந்த மனிதர்கள், ஒரேயிடத்தில் வாழத்தொடங்கியபோது, அவர்கள் நதிக்கரையோரங்களில் குடியேறினார்கள். நதிக்கரை நாகரிகங்கள் உருவாயின. நதிக்கரைகளையொட்டியே நகரங்கள் உருவாயின. சர்வதேச வணிகம் வளர்ந்தபோது, துறைமுகங்களையொட்டி பெருநகரங்கள் உருவாகத் தொடங்கின.

அந்நியர் வரும்வரை, இலங்கைத் தீவில் எந்தவோர் இராச்சியத்தின் தலைநகரும் துறைமுக நகரில் அமையவில்லை. அந்நியர் வந்து, சர்வதேச வணிகம் வளர்ந்தபோது, அவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் துறைமுக நகரங்கள் வளரத்தொடங்கின. கொழும்பு எனும் வணிகத் தலைநகரின் வரலாறும் இதைத்தான் சுட்டிக்காட்டும்.

ஆகவே, சர்வதேச வணிக உலகின் உயிர்நாடி, துறைமுகமும் விமானநிலையமும் ஆகும். அவை உருவாகும் போது, நீண்டகாலத்தில் அந்த நகரமும் வேறு காரணங்கள் இடையீடு செய்யாத நிலையில், அந்தப் பிராந்தியமும் வளர்வதற்கான சாத்தியம் அதிகம்.

மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பிறந்த மண்ணான ஹம்பாந்தோட்டையில் துறைமுகம், சர்வதேச விமானநிலையம் ஆகியவற்றை அமைத்தபோது, பலரும் ‘அங்கு எதற்கு இவை?’ என்று நகைப்பாகவே விமர்சித்தார்கள். அந்த விமர்சனத்தில், காலத்தின் தேவை சார்ந்த நியாயங்களும் இருந்தன.

விமானங்கள் வராததால், அந்த விமான நிலையத்தை நெற்களஞ்சியமாகவும் பயன்படுத்தினார்கள் என செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஹம்பாந்தோட்டை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. கொழும்பு நிறைந்து வழியும் நிலையில், எதிர்கால முதலீடுகளுக்கான வாய்ப்பான இடமாக ஹம்பாந்தோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் கனவுத் திட்டமான “ஒற்றைப்பட்டை ஒற்றைப்பாதை” திட்டத்தின் ஒரு புள்ளியாக ஹம்பாந்தோட்டை இருக்கிறது. அடுத்த 50 வருடங்களில் இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அது மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிற்க!

வடக்கின் அபிவிருத்தி பற்றி நீண்டகால அடிப்படையில் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றே விதைத்தால்தான் அது நாளை முளைக்கும். வடக்கின் அபிவிருத்திக்கான மூலவேர் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. பலாலி சர்வதேச விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டால், அது வடக்கின் அபிவிருத்திக்கு அஸ்திவாரமாக அமையும்.

சர்வதேசத்துடன் வடக்கை இணைக்கும் புள்ளிகளாக இவை வரும்போது, வடக்கின் உற்பத்தி, சேவைத்துறைகளுக்கான முதலீகள் வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். வடக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியைப் பெருமளவுக்கு உயர்த்துகிற ஒரு முக்கிய அம்சமாக இவை அமையும்.

பலாலி விமானநிலையம், யாழ் சர்வதேச விமான நிலையமாக பெயரளவில் அறிவிக்கப்பட்டு, ஓடுபாதையும் இந்திய உதவியுடன் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், நவீன சர்வதேச விமான நிலையமாக அது மாற, இன்னும் பலமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி அவசியமாகிறது.

ஹம்பாந்தோட்டையைப் பொறுத்தவரையில் சீனா, அதற்கான கடனுதவியை வழங்கியிருந்தது. ஹம்பாந்தோட்டையில் சர்வதேச விமானநிலையத்தை அமைப்பதற்கு ராஜபக்‌ஷர்கள் காட்டிய அக்கறையை, யாழ்ப்பாண விமாநிலையத்தை கட்டியெழுப்புவதில் காட்டுவார்களா என்பது சந்தேகமே.

யாழ்ப்பாண விமானநிலைய அபிவிருத்திக்கு இந்தியா கடன்கொடுக்க முன்வந்தாலும், “உதவியாகத் தருவதென்றால் பரவாயில்லை; கடனாகத் தருவதென்றால் வேண்டாம்” என்று ராஜபக்‌ஷர்கள் சொன்னால், அது அவர்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள் என்பதைத்தான் கோடிகாட்டிநிற்கும்.

மறுபுறத்தில், யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தியை இந்தியா கையேற்பது இந்திய-சீன போட்டியில் இந்தியாவுக்குச் சாதகமானதொன்றாக அமையும். நிச்சயமாக, இன்னொரு விமான நிலையத்தை இலங்கையின் வடக்கில் இந்தியாவிற்கு மிக நெருக்கமாக கைப்பற்றிக்கொள்ள சீனா ஆர்வம் காட்டும். ஆனால், அதனை அனுமதித்து, இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொள்வது இலங்கைக்கு உவப்பானதொரு முடிவாக இருக்காது.

ஆகவே, இலங்கையும் இந்தியாவும் ‘வெற்றி-வெற்றி’ என்பதை அடைய, இந்தியா யாழ்ப்பாண விமானநிலைய அபிவிருத்திக்கான நிதியை, உதவியாக அல்லது மிக நீண்டகால வட்டியற்ற சகாயக் கடனாக, இலங்கைக்கு வழங்குவது மிகச்சிறந்த உபாயமாக அமையும்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். சிலமாதங்கள் முன்பு இந்திய கடனுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என்று, செய்திக் குறிப்புக்கள் தெரிவித்ததோடு, அந்தச் செய்தி அடங்கிவிட்டது.

வடக்கில் சர்வதேச விமான நிலையமும் வணிகத் துறைமுகமும் அமைவது, வடக்கினதும் வடக்கு, கிழக்கினதும் முழு இலங்கையினதும் நீண்டகால அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும். அது இந்தியாவின் போட்டி நாடுகளின் அரவணைப்பிற்குச் செல்லாமலிருப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் இந்திய நலன்களுக்கும் சாதாகமானதாக அமையும்.

ஆகவே, வடக்கின் அபிவிருத்தி பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தையும் காங்கேசன்துறை வணிகத் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதை முன்னுரிமை அடிப்படையில் கொண்டுநகர்த்த வேண்டும். மறுபுறத்தில், அதற்கான உதவியை வழங்க இந்தியா முன்வர வேண்டும்.

அவ்வாறு, இந்தியா அதற்கான உதவியைச் செய்யாவிட்டால், சீன உதவியுடனாவது இதனை நடத்துவது அவசியமாகிறது. இந்தத் திட்டங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு நிச்சயமாக முன்னுரிமை அளிக்கலாம். அது வரலாற்று ரீதியிலான, இந்திய-இலங்கை உறவுக்கு ஏற்புடையதொன்றுதான்.

ஆனால், தகுந்தநேரத்தில், தேவையான உதவியை இந்தியா செய்யாவிட்டால், இந்தியாவைத் தாண்டி மாற்று உதவிகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கை தயக்கம் காட்டக் கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.