பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்… !! (கட்டுரை)
“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன.
எங்கே எம் பிள்ளைகள் படிக்காது இருந்தால், பிழையான வழியில் சென்று விடுவார்கள்; அதனால் எதிர்காலத்தில் துன்பப்பட்டுவார்கள் என்ற ஏக்கத்திலும் ஆதங்கத்திலும், அவர்கள் அவ்வாறு ஏ(பே)சியிருப்பார்கள்; அதனை விடுவோம்.
ஆனாலும், அங்கே மறைமுகமாக அல்லது உட்கிடையான கருத்து ஒன்று, மறைந்து நிற்கின்றது. அதாவது, மாடு மேய்ப்பது இரண்டாம் தரத் தொழிலாகவே பார்க்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலைச் செய்வதை, ஒருபடி கீழே வைத்தே நோக்கப்பட்டுள்ளது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாகவே மாறி விட்டது எனலாம். ஒருங்கிணைந்த பண்ணைகள், கூட்டுப் பண்ணைகள் என்ற பெயர்களில் கால்நடைகள், பறவைகள், மீன்கள் எனப் பல்வேறு தொழில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனது உற்பத்தி, வியாபார சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில், நம் இளம் சந்ததி உயிர்ப்புடன் தொழிற்படுகின்றது.
அன்று, இவ்வாறான பண்ணைகளை ஓரளவு படித்தவர்களே நடத்தி வந்தார்கள். ஆனால், இன்று இவற்றினது உரிமையாளர்கள், முகாமையாளர்கள் சாதாரன படிப்பு படித்தவர்கள் அல்ல.
மாறாக விஞ்ஞானமானி, வணிகமானி, முகாமைத்துவம், பொருளாதாரம் எனப் பல்கலைக்கழக இளமானி, முதுமானிப் பட்டம் வைத்திருக்கும் பட்டதாரிகளால் நடத்தப்பட்டு வருகின்ற பண்ணைகள் ஆகும்.
பட்டம் பெற்றவுடன், பட்டதாரி ஆகியதும் அரச வேலையைத் தேடும் இளையோர் மத்தியில், இவ்வாறான பண்ணையாளர்கள், பலருக்குத் தொழில் வாய்ப்பை வழங்குவதன் ஊடாக, அவர்களது வாழ்வுக்கும் ஒளியேற்றுகின்றார்கள்.
பண்ணை நடத்தும் பட்டதாரி, சிறிய இடத்தில் பண்ணை நடத்,தி அதிக லாபம் சம்பாதிக்கும் தம்பதிகள், குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் எனப் பல்வேறு தலைப்புகளில் பலரது பண்ணை வளர்ப்பு சொந்த அனுபவங்களை, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.
மேலும், இன்றைய பண்ணைத் தொழிலும் பாரம்பரிய முறைகளிலிருந்து சற்று வேறுபட்டு, பல தொழில் நுட்பங்களையும் உத்திகளையும் புகுத்தி வெற்றி கண்டுள்ளது.
இதற்கு மேலாக, உரிமையாளர்(கள்) தனது இடத்திலிருந்து கொண்டு, பிறிதோர் இடத்திலிருக்கும் தனது பண்ணையை சிசிரிவி கமெராக்கள் உதவியுடன், தனது கையிலிருக்கும் அலைபேசி மூலம் கண்காணிக்கக் கூடிய பல வசதிகளை, இன்றைய நவீன தொழில்நுட்பம் வழங்கி உள்ளது.
அடுத்து பால், முட்டை என்பன புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். முக்கியமாக, சிறுவர்கள் அதிகமாகவும் கட்டாயமாகவும் தங்களது உணவில் சேர்க்க வேண்டியவைகள் ஆகும்.
எனவே, ‘உனக்கு முன்னால் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. எங்கே தொடங்கப் போகிறாய்; எவ்வாறு தொடரப் போகிறாய் என்பது உனது கையில் உள்ளது’ என்பது போல, “இங்கு (உள்நாட்டில்) உழைக்க முடியாது; அதனால் வெளிநாடு போகப் போகிறேன்” என்று கதைப்போருக்கு மத்தியிலும், வைத்தியத்துறை அல்லது பொறியியல் துறை கிடைக்காது விட்டால், அடுத்த கட்ட வாழ்வே இல்லை என்று புலம்புவோருக்கும் நடுவில், படித்து பட்டம் பெற்று, பண்ணைத் தொழில் முயற்சியில் தானும் வாழ்ந்து, தன் சமூகத்திற்கும் வாழ்வளிக்கும் முயற்சியாளர்கள் உயர்ந்தவர்களே.
அந்தவகையில், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பிரியந்தன் Higher National Diploma in Civil Engineering கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ளார்.
அதனையடுத்து, மட்டக்களப்பிலுள்ள அரச திணைக்களமொன்றில் பொறியியல் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டு, ஆட்டுப் பண்ணை வளர்ப்பிலும் சாதித்துக் கொண்டிருப்பது போல, மேலும் பல இளைஞர்களும் இத்துறையில் பிரகாசிப்பதுடன், ஏனையோர் வாழ்வும் பிரகாசிக்க உழைக்கலாம்; உழைக்க வேண்டும்.