;
Athirady Tamil News

ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்!! (கட்டுரை)

0

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது.

யாழ்ப்பாண நகரத்திலிருந்த குளமொன்று புனரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது; விவாதப்பொருளாகி இருக்கிறது என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்துப் போக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது.

ஒரு புறத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சார்ந்தவர்கள், ‘ஆரியகுளம்’ எனும் அலங்காரப் பெயர்பொறிப்பு, தமிழில் மட்டும் காணப்படுவது, மும்மொழிக் கொள்கைக்கு முரணானது என்று குரல் எழுப்பியிருந்தமை, இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும், அரச அலுவலகங்களிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், சிங்கள மொழியில் மட்டும் பெயர்ப் பலகைகள் மட்டுமல்ல, முக்கிய அறிவுறுத்தல்களும் காணப்படும் நிலைபற்றி விமர்சிக்காதவர்கள், யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கையை மட்டும் கேள்விகேட்பது, பெரும் முரண்நகை.

எனினும், இன்னொரு வகையில் பார்க்கப்போனால், அது தமிழ்த் தேசிய அரசியலிடம் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புவதாக அமைகிறது. தமிழ்த் தேசிய அரசியல், தானும் சிங்கள-பௌத்த தேசிய அரசியல்போலவே செயற்படப்போகிறதா, அல்லது ஒரு மாற்று முன்னுதாரணமாக இருக்கப்போகின்றதா என்பதே அந்தக் கேள்வியாகும்.

சிங்கள-பௌத்த தேசியவாதம், தமிழ் மொழிப் பாவனையை அலட்சியம் செய்கிறது என்பது, தமிழ் மக்களின் குற்றச்சாட்டாகும். ஆகவே, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் அணுகுமுறையைக் கையாண்டால், தமிழ் மட்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியமும் சிங்களம் மட்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்கள-பௌத்த தேசியவாதமும் நின்றுகொண்டால், அத்தகைய கண்ணுக்குக் கண் அணுகுமுறை, ஒரு குருடான உலகத்தையே உருவாக்கும்.

இந்த நாட்டில், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுவதே, அனைவருக்கும் ஏற்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்க முடியும். ஆனால், அது ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது.

ஆரியகுளத்தின் வரலாறு கூறும் கல்வெட்டொன்றைப் பதித்திருக்கும் யாழ். மாநகர சபை, அதனை மும்மொழிகளிலும் அமைத்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்க விடயம். அதுமட்டுமல்ல, அங்கு மும்மொழிக் கல்வெட்டுகளும் ஒரேயளவில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு மொழியை முன்னிலைப்படுத்தி பெரிதாகவும் மற்றைய மொழிகளை கடமைக்கென அமைக்கவும் இல்லை; இதுவும் பாராட்டுக்குரியது. ஆகவே, இந்த விடயத்தில் யாழ். மாநகர சபையின் அணுகுமுறையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் குறைகூறுவதானது அர்த்தமற்ற பேச்சாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரின் இத்தகைய அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளைவிட, அர்த்தமற்றதும் அசூயை மிக்கதுமான குற்றச்சாட்டுகளாக, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அமைகின்றன என்பது, தமிழ் மக்கள் வருத்தப்பட வேண்டிய விடயம் ஆகும்.

தமிழ்த் தேசிய அரசியலில் மிக நீண்ட காலமாகப் பெரும் குறைபாடாக அமைந்த விடயம், தமிழ்த் தேசிய அரசியலின் நிர்வாகத்திறனின்மை ஆகும். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தவர்கள், சட்டவாக்கத்தில், அதுவும் எதிர்த்தரப்பாக மிக நீண்டகாலம் பங்கெடுத்திருந்தாலும், நிர்வாகத்தில் அவர்கள் பங்குபற்றியதில்லை.

அந்த அனுபவக்குறைவு, தமிழ்த் தேசிய அரசியலின் மிகப்பெருங்குறைபாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியல் ஆளும் எல்லா சபைகளிலும், பகட்டாரவார வார்த்தை ஜாலப் பேச்சுகள் கடுமையாக ஒலித்தாலும், நடைமுறையில் பெருந்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படுவதுமில்லை; செயற்படுத்தப்படுவதுமில்லை.

இதைப் பற்றி கேள்வி கேட்டால் கூட, மத்திய அரசாங்கத்தின் மீது பழியை வெற்றிகரமாகப் போட்டுவிடும் வாய்ஜால வித்தை வாயக்கப்பெற்றதால் மட்டுமே, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இன்னமும் தப்பிப்பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாவது வடமாகாண சபை பதவியிலிருந்த போது, தமிழ்த் தேசிய அரசியலின் இந்தக் குறைபாடு அப்பட்டமாக வௌிப்பட்டது. பேசுவது இலகு; மற்றவர்களின் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசுவது அதைவிட இலகு. ஆனால், காரியம் சாதிப்பது மிகக் கடினமானது. இந்த உண்மையை, அரசியலில் யாரும் மறுக்க முடியாது.

ஒரு மாநகர சபைக்கென, உள்ளூராட்சி மன்றுக்கென சட்டரீதியில் பல வலுவான அதிகாரங்கள் இருக்கின்றன. அந்த அதிகார வரம்புக்கு உட்பட்டு, அவற்றால் சாதிக்கக்கூடிய விடயங்கள் நிறையவே உள்ளன.

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதில், மிக அடிப்படையான உட்கட்டமைப்பு, சுகாதார, கல்வி, நகர அபிவிருத்தி செயற்றிட்டங்கள், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைச் செய்யும் அதிகாரம், மாநகர சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றுகளுக்கும் உண்டு. அதை வைத்துக்கொண்டே சாதிக்கக்கூடிய விடயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஆனால், வெற்று வாய்ஜால அரசியல் மட்டும் தெரிந்தவர்களால் அதைச் செய்ய முடியாது; அல்லது, கொள்கையறிவும் சட்டவாக்க ஆற்றல் மட்டும் உள்ளவர்களாலும் அதைச் செய்ய முடியாது. அதைச் சாதிக்க வலுவான நிர்வாக ஆற்றல் தேவை.

நிர்வாக ஆற்றல் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் மிக அரிதான ஆற்றலாகவே காணப்படுகிறது. நிர்வாகம் என்பது, கட்டளை இடுதல் அல்ல. நிர்வாகம் என்பது, காரியத்தைச் சாதித்தல்; காரியத்தைச் சாதித்தல் என்பது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நிகழ்த்தப்பட முடியாது. பல்வேறு சவால்களையும் தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் எதிர்ப்புகளையும் கடந்தே காரியசித்தி காண முடியும்.

மாநகர சபையிலும் உள்ளூராட்சி சபையிலும் போய், “தனிநாடு கொண்டுவருவோம்” என்று அர்த்தமற்ற பேச்சுகளை முன்னெடுப்பவர்களால், உள்ளூராட்சி சபைக்கு எந்தப் பயனுமில்லை. அவர்கள் ஆளுகின்ற உள்ளூராட்சி சபைகளால், அந்த மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை.

உள்ளூராட்சிச் சபையில் போய் நின்றுகொண்டு, ‘தனிநாடு, சமஷ்டி’ என்று உளறிக்கொண்டும், அர்த்தமற்ற தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டும் இருப்பவர்களைவிட, ஒரு பொது மலசலகூடமேனும் கட்ட நடவடிக்கை எடுக்கும், ஒரு சுகாதார நிலையத்தையேனும் அமைக்கும், ஒரு பாலர் பாடசாலையையேனும் அமைக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் மேலானவர்.

நான் பாடசாலையில் படித்தகாலத்தில், மிகத் திறமையானதொரு பிரதி அதிபர் இருந்தார். ஒரு முறை, எங்கள் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பாட்டுப்பாடி, நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அங்கு வந்த அவர், அன்று சொன்ன ஒரு விடயத்தை, இங்கு பதிவது பொருத்தம் என்று கருதுகிறேன். வகுப்பறையில் ஆடிப் பாடிய மாணவர்களைப் பார்த்து அவர் சொன்னார்: “வகுப்பறை என்பது படிக்கும் இடம். நீ ஆடப் போகிறாய் என்றால், மண்டபத்தில் கலை விழா நடக்கும்; அங்கு போய் ஆடு. நீ பாடப் போகிறாய் என்றால், கச்சேரி நடக்கும்; அங்கு போய் பாடு. அதை அதை அதற்குரிய இடத்தில் செய்” என்றார். தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிகத் தேவையான பால பாடம் இது.

சமஷ்டி, அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு; இதெல்லாம் பேசப்பட வேண்டிய இடம் பாராளுமன்றம். அது பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களுக்குமானதாகும். மாகாண சபையில் ஆட்சியிலிருந்து கொண்டு, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலிருந்து பேசுவதை, மாகாண சபையில் பேசியும் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தப் பயனுமில்லை.

மாறாக, மாகாண சபையின் நிதியையும் இருக்கிற அதிகாரங்களையும் பயன்படுத்தி, மக்களுக்குச் செய்யக்கூடியவற்றையாவது செய்தால், மக்களின் வாழ்க்கை நிலையிலும் வாழ்க்கைத் தரத்திலும் கொஞ்சமேனும் முன்னேற்றம் ஏற்படும்.

அதுபோலவே, உள்ளூராட்சி சபையிலிருந்து கொண்டு சமஷ்டி, அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு பற்றிப் பேசுவதில் பயனில்லை. அதற்கான இடம், உள்ளூராட்சி சபையல்ல; உள்ளூராட்சி சபையில் நோக்கமும் அதிகாரமும் வேறுபட்டது. இந்த அரசியல் புரிதல், தமிழ்த் தேசிய அரசியலில் வரவேண்டும்.

அதற்காக, தமிழ்த் தேசிய அரசியலில் இந்தப் புரிந்துணர்வு உள்ளவர்களே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள, அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆளுமைமிக்கதொரு பாராளுமன்ற உறுப்பினரோடு, சாதாரணமாக உரையாடும் வாய்ப்பொன்றின் போது, “நீங்கள், வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராகும் எண்ணம் கொண்டிருக்கிறீர்களா” என்று கேட்டேன்.

“இல்லை! அது எனக்கான இடமல்ல. என்னுடைய ஆற்றல், சட்டவாக்கம் சார்ந்தது; நிர்வாகம் சார்ந்ததல்ல. ஆகவே, எனக்கான இடம் பாராளுமன்றம்தான்” என்று மிகத்தௌிவாகப் பதிலுரைத்திருந்தார்.

இவரது மாற்றாளியாக, தமிழ்த் தேசிய அரசியலில் முன்னிறுத்தப்படும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரிடமும் இதே கேள்வியைக் கேட்டபோது அவரும், “இல்லை! அது எனக்கான இடமல்ல.

அரசியலமைப்புக்கான 13ஆம் திருத்தத்தை நான் எதிர்க்கிறேன். அதை எதிர்த்துக்கொண்டு, நான் எப்படிப் போய் 13ஆம் திருத்தத்தின் கீழான மாகாண சபையில் முதலமைச்சராவது? மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காகவே நான் உழைக்கிறேன். அதற்கான இடம், மாகாண சபையல்ல” என்று தௌிவாகக் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசிய அரசியலின் இருதுருவங்களாகக் கருதப்படும் இருவருக்கும், தமது அரசியல் பற்றி நல்ல தௌிவு இருக்கிறது. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், இந்தத் தௌிவும் புரிந்துணர்வும் குறைவாகவே இருக்கிறது.

மாநகர சபையின் பணியைத்தான், யாழ். மாநகர சபை செய்திருக்கிறது. அதற்குள் குதர்க்கம் பேசிக்கொண்டு, அர்த்தமற்ற விமர்சன அரசியல் செய்வது, எவருக்கும் அழகல்ல!

You might also like

Leave A Reply

Your email address will not be published.