யாழ்.மாநகர சபை பட்ஜெட் தோற்கடிக்கப்படுமா ? (கட்டுரை)
யாழ்.மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு வரும் வாரம் , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனை தோற்கடித்து , மணிவண்ணனிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு , தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை நம்பகரமாக அறிய முடிகிறது.
அந்நிலையில் , யாழ்.நகரில் உள்ள கட்சி அலுவலகம் ஒன்றில் , நேற்றைய தினம் கட்சி தலைமைகளுடன் அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக நம்பகரமான அறிய முடிகிறது.
அதன் போது , பாதீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதா ? இல்லையா ? என்பது தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. அதன் போது அக்கட்சி உறுப்பினர்களில் சிலர் , ” மணிவண்ணன் தரப்பு தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் , எங்களது அரசியல் இருப்பு கேள்விக்கு உள்ளாகும்” எனவே பாதீட்டுக்கு ஆதரவு வழங்க கூடாது என கருத்துக்களை முன் வைத்துள்ளார்களாம்.
அதேவேளை சில உறுப்பினர்கள் , ” செய்பவர்களை குழப்புவதும் ஆபத்து தானே ” என கூறியுள்ளார்களாம். அதானல் கூட்டம் எந்த முடிவும் இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
அது ஒரு புறம் இருக்க , இம்முறை பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , மாநகர சபை ஆணையாளர் கைக்கு சென்று விடும் என்ற நிலையில் , ” அப்படியில்லை. வல்வெட்டித்துறை நகர சபை பாதீடு தோற்கடிக்கப்பட்டு , அங்கு புதிய தவிசாளர் தெரிவு செய்யப்படவுள்ளது” என்கின்றனர். அதனால் மூன்றாவதாக ஒரு முதல்வரை தம்மால் தெரிந்தெடுக்க முடியும் என தங்கள் வாதங்களை முன் வைக்கின்றனர்.
ஆனால் , வல்வெட்டித்துறை நகர சபையை பொறுத்தவரை , முன்னர் இருந்த தவிசாளர் மரணமடைந்தமையால் , புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார் அவரது பாதீடு தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆக அதுவே பாதீடு முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டது. எனவே இரண்டாவது தடவையாக புதிய தவிசாளரை தேர்வு செய்ய முடியும்.
மாநகர சபையை பொருத்தவரை கடந்த ஆண்டு , பாதீடு தோற்கடிக்கப்பட்டு , புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டார். இம்முறையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , சபை கலைய கூடிய சாத்தியமே உண்டு.
சபை கலைவதனால் ஏற்படும் விளைவு
தற்போதைய கொரோனா பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் நிலைமையில் இலங்கையில் ஒரு தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு.
அவ்வாறு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படுமாக இருந்தாலும் , அது மாகாண சபை தேர்தலாக இருக்கவே அதிக வாய்ப்புண்டு. அதனால் உள்ளூராட்சி சபைகளின் காலம் ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது.
அந்நிலையில் தற்போது , பாதீடு தோற்கடிக்கப்பட்டு , சபை கலையுமாக இருந்தால் , அடுத்த தேர்தல் என்பதற்கு குறைந்தது 18 மாதங்களுக்கு மேலாகும். அதுவரை காலமும் , ஆணையாளரின் கீழே மாநகர சபை இருக்கும்.
வடமாகாண சபை இல்லாத நிலையில் எவ்வாறு வடமாகாண ஆளுநரின் செயற்பாடு இருக்கின்றதோ , அதே நிலைமை மாநகர சபையில் ஏற்படும்.
மத்திய அரசாங்கம் சொல்வதனையே , அரச அதிகாரி என்ற அடிப்படையில் , ஆணையாளர் அதனை நிறைவேற்றுவார். இதுவே சபை இயங்கிக்கொண்டு இருந்தால் , பலவற்றை சபையின் தீர்மானத்திற்கு விட்டு விடுவார்.
அதனால் சபை இயங்காத நிலையில் ஆணையாளர் எவ்வாறு செய்யப்பட்ட போகின்றார் , மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பதனை ஊகித்துக்கொள்ள அனைவராலும் முடியும்.
இவை தவிர , தற்போதைய மாநகர சபை உறுப்பினர்கள் , சபை கலைக்கப்பட்டால் , அவர்களுக்கான ஊதியம் , படிகள் என அனைத்தும் இல்லாமல் போகும். மேலும் சபை ஒரு வருட காலம் நீடிக்கப்பட்டால் ஒரு வருட காலத்திற்கான வருவாய் இழப்பு ஏற்படும்.
அடுத்ததொரு தேர்தல் அண்மையில் நடைபெற கூடிய சாத்தியம் இல்லாததால் , அவர்கள் மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
பாதீட்டை தோற்கடித்த பின்னர் என்ன செய்வார்கள்?
ஒரு சிலரின் கருத்தின் படி , மீண்டும் ஒரு முதல்வர் தெரிவு நடைபெறும் என கருதினால் , அடுத்த முதல்வர் யார் ? என்ற பெரும் கேள்வி உண்டு. அது நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பு உறுப்பினராகவே இருப்பார்.
அவ்வாறு புதியவராக தெரிவு செய்யப்படுவார் , தற்போதைய முதல்வர் காலத்தில் ,முதல்வரும் அவரது அணியினரும் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு மேலாக செயற்பட்டு காட்ட வேண்டிய தேவை உண்டு. அவ்வாறு அவர்கள் செயற்படாது விட்டால் , அது , தற்போதைய முதல்வர் மணிவண்ணன் தரப்பினருக்கான ஆதரவு தளம் மேலும் வலுவடையும்.
ஆக புதிதாக தெரிவு செய்யப்படும் முதல்வர் அவ்வாறு செயற்படுவாரா ? என்பது பெரும் கேள்விக்குறியே ..
மணிவண்ணன் தரப்பின் நகர்வு என்னவாக இருக்கும்.
பாதீடு தோற்கடிக்கப்பட்டு , சபை கலைக்கப்பட்டால் , மணிவண்ணன் தரப்பினர் தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தம்மை பலப்படுத்தும் செயற்பாட்டில் இறங்குவார்கள். மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் தீவிரமாக இறங்கி செயற்படுவார்கள்.
தற்போது அவர்கள் ஆட்சியில் உள்ள நிலையில் , ஆரிய குளத்தில் லைட் தூண் சரிந்தாலும் , ஸ்ரான்லி வீதியில் வெள்ளம் நின்றாலும் , மாநகர சபையின் கடைக்கோடி எல்லையில் குப்பை கிடந்தாலும் , சமூக வலைத்தளத்தில் , மாநகர முதல்வரையும் , சபை உறுப்பினர் வ. பார்த்தீபனையும் பொறுப்புக்கூற அழைப்பார்கள்.
அவர்கள் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டால், இதற்கு எல்லாம் அவர்களை அழைக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்த நேரத்தை எடுத்துக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.
சிலர் சொல்வது போன்று ,சபை கலையாது , புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டாலும் , மணிவண்ணன் தரப்பினர் தங்களால் முடிந்த , காரியங்களை செய்யவார்கள். முதல்வர் பதவி பறிபோவதானால் , அவர்களின் அரசியல் வீழ்ச்சி அடையாது.
சபை கலைக்கப்பட்டோ அல்லது புதிய முதல்வர் சிறப்பாக செயற்பட தவறினாலோ , பாதீட்டை எதிர்த்தவர்களின் அரசியல் கேள்விக்கு உள்ளாகும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க போவதில்லை.
பாதீட்டை எதிர்க்க காய் நகர்வுகளை முன்னெடுக்கும் சில உறுப்பினர்கள் மாகாண சபை கனவில் இருப்பதாகவும் ,சபை கலைக்கப்பட்டால் , மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகலாம் , அல்லது புதிய முதல்வர் வந்தாலும் , தாம் மாநகர சபையை விட்டு , மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியும் என நினைப்பதாகவும் நம்பகரமாக அறிய முடிகிறது.
எது நடக்கவிருக்கிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.