2022க்கான முன்னோட்டம்: ஒப்புதல் வாக்குமூலம் !! (கட்டுரை)
இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து செல்கின்றது. 2020ஆம் ஆண்டு போலவே, 2021ஆம் ஆண்டையும் பெருந்தொற்றே நிறைத்தது. ஆனால், நாமும் மெதுமெதுவாகப் பெருந்தொற்றோடு வாழப் பழகி வருகிறோம். மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதே மனிதகுலத்தின் மாண்பு என்பதை, நாம் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறோம்.
உலகம் மாற்றமடைகிறது; பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த உலகில் நாம் இப்போது இல்லை. உலகில் புதிய சக்திகள் மேலெழுந்துள்ளன; புதிய விடயங்கள் முன்னிலை அடைந்துள்ளன. எனவே, உலகை விளங்கிக்கொள்வதற்குப் புதிய சட்டகங்கள் தேவைப்படுகின்றன.
2022ஆம் ஆண்டை எதிர்பார்த்து நிற்கும் இந்தத் தருணத்தில், அயலுறவுகளையும் அதிகாரப் போட்டிகளையும் விளங்கிக் கொள்ள முனைவது பயனுள்ளது. இலங்கை மக்கள் தீவில் சீவித்தாலும், தனித்தியங்க இயலாதபடி உலக அலுவல்களில் நாம் இழுபடுவது தவிர்க்கவியலாதது.
அமெரிக்கா நினைத்தால், ஒரே இரவில் தமிழர்களுக்குத் தீர்வைத் தந்துவிடும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தியா மனதுவைத்தால் தமிழர்களுக்கான தீர்வை யாரும் தடுக்கவியலாது என்று இன்னமும் பேசியும் எழுதியும் வருவோர் பலருளர்.
தமிழருக்கான தீர்வு, மேற்குலகின் தலைநகரங்களிலேயே இருக்கிறது என்று நம்புவோர், இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கணிசமாக இருக்கிறார்கள்.
இவர்கள் யாரும், இலங்கையின் வரலாற்றைப் பற்றியோ, அவர்கள் நம்பிக்கை வைக்கும் நாடுகளின் நடத்தை பற்றியோ அறியும் ஆவலோ, அக்கறையோ அற்றவர்கள். அவர்கள் நினைப்பது சரியா, தவறா, சாத்தியமா, இல்லையா போன்ற கேள்விகளுக்கு உட்பட்டதில்லை.
இக்கேள்விகளை எழுப்புவோர், துரோகிகள் என்று அழைக்கப்படுவர். அத்துரோகிகளை ‘லைட்போஸ்டில்’ கட்டித் தூக்க இயலவில்லை என்ற கவலை அவர்களுக்கு உண்டு. ஆனால், உலகம் மாறிவிட்டது.
புலம்பெயர்ந்தோரில் கணிசமானோருக்கு, அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தோடு இலங்கை நின்றுவிட்டது. அவர்கள் புலம்பெயரும்போது இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சட்டகத்தை மையமாகக் கொண்டே அவர்கள், தங்கள் கருத்தாக்கங்களை உருவாக்குகிறார்கள்.
கொழும்பில் இருந்து ‘காப்பெட்’ போட்ட ஏ-9 வீதி வழியே, யாழ்ப்பாணம் சென்று திரும்பும் ஒருவர், “வடக்கு அபிவிருத்தியடைந்து விட்டது; கட்டடங்களும் வங்கிகளும் உணவகங்களும் வீதியின் இருமருங்கும் நிறைந்து கிடக்கின்றன. எனவே, மக்கள் வாழ்வு மகத்தானதாக உள்ளது” என்று சொல்வதற்கும் புலம்பெயர் அலப்பறைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லைத்தான்.
இலங்கையில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகள் பற்றிய உரையாடலில், புலம்பெயர் தேசத்தவர் ஒருவர் சொன்னார்: “எங்கட ஆக்களுக்குப் பரவாயில்லை; வெளிநாட்டு உதவி இருக்கு. அவங்களுக்குத் தான் கஷ்டம். நல்லதுதானே”. ‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ என்பதுபோல், புலம்பெயர் புரிதல்கள் இவ்வாறுதான் இருக்கின்றன.
அமெரிக்கா பற்றிய அளவுகடந்த நம்பிக்கை, இன்னமும் எம்மிடத்தில் உண்டு. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களில் உலக அலுவல்களில், அமெரிக்காவின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்துள்ளது. 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான கெடுபிடிப்போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்க அரசியல் ஆய்வாளரான பிரான்சில் புக்குயாமா, உலகின் முடிவை அறிவித்தார்.
1992ஆம் ஆண்டு வெளியான அவரது ‘வரலாற்றின் முடிவும் இறுதி மனிதனும்’ (The End of History and the Last Man) என்ற புத்தகம், உலகின் கவனத்தை ஈர்த்தது. இதில், ‘மனிதனது தத்துவார்த்தப் பரிணாம வளர்ச்சி, அதன் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. தாராளவாத ஜனநாயகமும் திறந்த சந்தை மைய முதலாளித்துவமுமே என்றென்றைக்கும் உரியதாக மாறும்’ என்று புக்குயாமா குறிப்பிட்டுள்ளார்.
‘சோவியத் ஒன்றியத்தின் தோல்வியோடு, சோசலிசம் கல்லறைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. மேற்குலகில் நடைமுறையில் உள்ள தாராண்மைவாத முதலாளித்துவ ஜனநாயகமே, உலகின் இறுதியான அரசாட்சி வடிவம். அதன் முதன்மை அரங்காடியாக அமெரிக்கா திகழும். அமெரிக்காவின் முதன்மையான வகிபாகம், பல தசாப்தங்களுக்குத் திகழும்’ எனவும் எதிர்வுகூறியிருந்தார்.
பிரான்சில் புக்குயாமா, மேற்குலகால் கொண்டாடப்பட்ட ஒருவரானார். ‘இவரது கருத்துகள், மார்க்ஸியத்தின் முடிவை முன்மொழிகின்றன’ என, மேற்குலக ஊடகங்கள் போற்றின. சோசலிசத்துக்கு எதிரான எதிர்ப்பிரசாரத்திலும், அமெரிக்காவை சர்வவல்லமை படைத்த சக்தியாக முன்னெடுப்பதிலும் புக்குயாமாவின் கருத்துகள் முன்னிலையடைந்தன. 1990களில் உலகச் சட்டகத்தை விளங்கிக் கொள்வதற்கான பிரதான கோட்பாட்டாளராக புக்குயாமா மாறினார்.
அண்மையில், Economist சஞ்சிகையின் 2022ஆம் ஆண்டுக்கான சிறப்பிதழில் ‘அமெரிக்கா மேலாதிக்கத்தின் முடிவு’ (The end of American hegemony) என்ற தலைப்பில், புக்குயாமா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அக்கட்டுரையில், ‘எதிர்பார்ப்புக்கு மாறாக, அமெரிக்க மேலாதிக்கம் 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே நீடித்தது. 1989 இல் பேர்லின் சுவர் சரிவுடன் தொடங்கிய மேலாதிக்கம், 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடு முடிவுக்கு வந்துவிட்டது. இக்காலப்பகுதியில் அமெரிக்கா, உலகளாவிய சமூகப் பொருளாதார அரசியல் தளங்களில் தலைமை வகித்தாலும், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீதான ஆக்கிரமிப்புகள், அமெரிக்காவுக்கு குழிபறித்தன. இராணுவபலத்தின் மீதான அளவுகடந்த நம்பிக்கையும் திறந்த சந்தைப் பொருளாதார சர்வதேச வர்த்தகத்தில் கொண்டுள்ள பாதிப்பு பற்றிய அக்கறையின்மையும், அமெரிக்காவின் இந்நிலைக்குக் காரணமாயுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், எந்த எதிர்வுகூறல்களுக்காகப் புக்குயாமா கொண்டாடப்பட்டாரோ, இன்று அதே எதிர்கூறல்கள் தவறானவை என்று, அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் நிலைமைக்கு உலகம் மாறியுள்ளது. இதைப் புக்குயாமா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆனால், யதார்த்தம் அவ்வாறுதானே இருக்கிறது! இன்னமும் தமிழர்களின் தலைவிதியை, அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு, காத்துக்கிடக்கச் சொல்கிறவர்களை என்ன செய்வது?
அக்கட்டுரையில், புக்குயாமா சொன்ன இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, ஒபாமா தனது எட்டு ஆண்டுகால ஆட்சியில் முனைப்புடன் முன்னெடுத்த ‘ஆசியாவை முன்னிலைப்படுத்தல்’ (Pivot of Asia) தோல்வியடைந்தது. ஆசியாவில், புதிய அரங்காடிகள் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். அமெரிக்கச் செல்வாக்கை மீள ஆசியாவில் நிறுவுவது இலகுவானதல்ல. அதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக இருக்கிறாரா என்பதே கேள்வி.
இன்று அமெரிக்காவின் நெருக்கடி உள்ளார்ந்தது. அமெரிக்கச் சமூகம், முன்னெப்போதையும் விடப் பிளவடைந்ததாக உள்ளது. ஆழமடைந்துள்ள சமூகப் பிரிவினைகள், அமெரிக்க ஜனநாயகத்துக்கே சவாலாக உள்ளன. இதைச் சரிசெய்யாமல், உலக அலுவல்களில் கவனம் செலுத்த இயலாது.
புக்குயாமா சொல்கின்ற இரண்டாவது விடயம், உலகம் பல்மைய உலகமாக மாற்றமடைந்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன, புதிய அதிகார மையங்களாக உருவெடுத்துள்ளன. இது தவிர்க்கவியலாதது.
அமெரிக்காவின் தனிப்பெருந்தலைமை என்பது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா செய்யக்கூடியது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கூட்டுத்தலைமைக்கு முயல்வதாகும். அதற்கு, அமெரிக்கா தனது உள்நாட்டு நெருக்கடிகளைக் கையாள வேண்டும். அதற்கு கொவிட்-19 பெருந்தொற்று பெருந் தடையாக உள்ளது.
தமிழ் மக்களின் எதிர்காலத்தை, அமெரிக்காவின் கைகளில் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்க முடியுமா என்பது முதலாவது கேள்வி.
அமெரிக்கா நினைத்தாலும், இலங்கை அலுவல்களில் செல்வாக்குச் செலுத்தும் வல்லமை உள்ளதா என்பது இரண்டாவது கேள்வி. தமிழர்களுக்காக அமெரிக்கா ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது கேள்வி.
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, நாம் இதயசுத்தியோடும் நடைமுறை அனுபவங்களின் ஊடும் முதலில் நோக்குவோம்.
ஜெனீவாவை நோக்கிய ‘காவடி’கள், ஆண்டுதோறும் தவறாமல் நடக்கின்றன. போர் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், நீதி கிடைத்துள்ளதா? உண்மை அறியப்பட்டுள்ளதா?
உரிமைகள் மீட்கப்பட்டுள்ளனவா? மனித உரிமைகள் பேணப்பட்டுள்ளனவா? போன்ற கேள்விகளுக்கான பதிலை நாமறிவோம்.
இலங்கை மீதான அதிகாரச் சதுரங்கத்தில், வெறும் பார்வையாளர்களாகவே நாமிருக்கிறோம். எம்மை நாம் நம்புவதை விட, அயலாரை நம்புவதை நாம் விரும்புகிறோம். அயலார் வருகையின் அனுபவங்கள், எமக்கு இனிப்பானவையல்ல! ஆனாலும் அயலாரை நம்பும் மனநிலையை என்னவென்பது?
2022ஆம் ஆண்டு, புதிய ஆண்டாகினும் சவால்கள் பழையன. மாறும் உலகு பற்றிய முன்னோக்கு பயன்தரும். இலங்கை இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது. புலம்பெயர்ந்தவர்கள், ‘சோறல்ல, சுதந்திரமே பிரதானம்’ என்று உண்டது செரிக்க பேசிக்கொள்ளட்டும். அடுத்தவேளை சோற்றுக்கென்ன வழி என்பது குறித்து, நாம் சிந்திக்கத் தொடங்கலாம்.
காலநிலைக் குற்றவாளிகள் யார்?
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நாம் வாழும் பூமியையும் இயற்கையையும் மனிதன் தொடர்ச்சியாகப் பழிவாங்கி வந்திருக்கிறான். இப்போது இயற்கையின் முறை; இதை நாம், கடந்த ஒரு தசாப்தகாலமாக, மிகவும் தெளிவாக உணர்கின்றோம்.
காலநிலை மாற்றம், எமது வாழ்வைத் திருப்பிப் போட்டிருக்கின்றது. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா? இயற்கையையும் பூமியையும் நேசிக்கின்றோமா, பிள்ளைகளுக்கு அவற்றை நேசிக்கக் கற்றுக் கொடுக்கின்றோமா? இக்கேள்விகளுக்கான பதிலை, நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும்.
வீதிகளில் வீசப்படும் குப்பைகள், பக்கத்துக் காணியில் கொட்டப்படும் கழிவுகள், அளவுகடந்த பிளாஸ்டிக் பாவனை, தண்ணீரை விரயமாக்குதல், தேவைக்கதிகமான சுவட்டு எரிபொருட்களின் பாவனை என, எமது அன்றாட வாழ்வு, இயற்கை மீதான வன்முறைகளால் நிரம்பிக் கிடக்கிறது.
காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது யார் என்ற வினா, உலக அரங்கில் பதிலற்ற கேள்வியாகத் தொடர்கிறது.
காலநிலை மாநாடுகள் காலம் தவறாமல் நடக்கின்றன. பேசுவதும் பேசுவது பற்றிப் பேசுவதுமாய் காலங்கள் கடக்கின்றன. இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளே, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஓர் உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.
பவளப் பாறைகள் அழிவுறுதல் மிகப்பாரிய நெருக்கடியாகும். குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பும் நிலத்தடி நீரின் இருப்பும் மீன்வளமும் பவளப்பாறைகளில் மிகவும் தங்கியுள்ளது. உலகளாவிய பவளப்பாறைகள் கண்காணிப்பு வலைப்பின்னல், கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, உலகில் பவளப்பாறைகளின் சிதைவையும் அழிவையும் ஆராய்ந்து அறிக்கைப்படுத்தி வருகிறார்கள்.
இவர்களின் 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 14%மான பவளப்பாறை மேடுகள் அழிந்தமைக்கு, கடல் மேற்பரப்பில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் ஒரு முக்கியமான விளைவே, கடல் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பு. இதன் துணை விளைவாக கடல் அமிலமயமாதலும் நிகழ்கின்றது. இரண்டும் சேர்ந்து, பவளப்பாறை மேடுகளின் அழிவுக்குப் பங்காற்றியுள்ளன.
வளம்மிக்க கடலின் குறியீடாக, பவளப்பாறை மேடுகள் விளங்குகின்றன. 25%மான கடல் வாழ் உயிரினங்களின் இருப்புக்கு, இந்தப் பவளப்பாறை மேடுகள் காரணமாக இருக்கின்றன. இவை, பல அரிய கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உணவுச் சுரங்கமாகவும் விளங்குகின்றன.
பூமியின் மொத்தக் கடற்பரப்பில் வெறும் 0.2%மான பகுதியில் மட்டுமே, இந்தப் பவளப்பாறை மேடுகள் அமைந்துள்ளன. கடல் மேற்பரப்பு வெப்பமடைதலுக்கு அடுத்தபடியாக, கடலை மாசுபடுத்தல், கட்டுப்பாடற்ற மீன்பிடி, கடலோர அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியனவும் பவளப்பாறைகளின் அழிவுக்குக் காரணமாகின்றன என்று, ‘உலகில் பவளப்பாறைகளின் நிலை’ என்ற அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தென்னாசிப் பிராந்தியம் குறித்துக் கவனம் செலுத்தியுள்ள இவ்வறிக்கை, இப்பகுதியில் அல்காக்களின் அளவு, கடந்த பத்தாண்டுகளில் 20%த்தால் அதிகரித்துள்ளது. இது பவளப்பாறைகள் அழிவதைக் குறிகாட்டுகின்றது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், உலகளாவிய காலநிலை மாற்ற ஆய்வுகளில், மீளவியலாத புள்ளியைத் தீர்மானிக்கும் விடயங்களில் பவளப்பாறைகளின் சிதைவும் முக்கியமானதாக அமைகின்றது.
உரிமைக்கும் மண்ணுக்குமான நீண்ட போராட்டத்தைச் செய்த பூமியை, இயற்கை மீளப்பெற்றுக் கொள்வதற்கான வழியை நாமே விரைந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? ஊரிமை பற்றியும் விடுதலை பற்றியும் பேசுவதற்கு, மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான பூவுலகம் நிலைக்க வேண்டும். அது குறித்து நாம் கவலைப்பட்டிருக்கிறோமா, அக்கறைப்பட்டுள்ளோமா?
ஆரியகுளம் மகிழ்வூட்டல் திடல் திறக்கப்பட்ட மறுநாள், அதைச் சுற்றி வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளுக்குள் குப்பைகளை வீசாமல், வெளியே குப்பைகள் வீசப்பட்டு இருந்ததையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இதுவொரு சின்னக் ‘குப்பைப் பிரச்சனை’ என்று கடந்துவிட இயலாதபடி, மனித நடத்தையும் சமூகப் பொறுப்புணர்வும் இத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன.
காலநிலை மாற்றம் என்பதை, வெறுமனே ‘புவியின் வெப்பநிலை அதிகரிப்பு’ என்ற வட்டத்துக்குள் சுருக்குவதன் ஊடு, இப்பாரிய மனிதகுல நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைக்கும் வேலைகள் நடக்கின்றன. ஆனால், இந்நெருக்கடி தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது. கட்டற்ற நுகர்வு, கட்டற்ற கழிவு உற்பத்திக்கும் கட்டற்ற சக்திப் பயன்பாட்டுக்கும் வழிவகுக்கின்றது.
கட்டற்ற நுகர்வை, திறந்த சந்தைப் பொருளாதாரம் ஊக்குவிக்கின்றது. அதற்கான பொருளாதார வழிமுறைகளை வங்கிகளும் அரசுகளும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கடந்த இரண்டாண்டுகளில் அத்தியாவசியம் இல்லாத எத்தனை பொருட்களை நாம் வாங்கியிருக்கிறோம் என்பதை பொறுமையாகச் சிந்தித்தால் புரியும்.
பொருட்களைத் திருத்திப் பயன்படுத்தும் பழக்கம் எம்மிடம் அருகி வருகிறது. ‘Use it and throw it’ என்பதே, இன்றைய சந்தையின் தாரக மந்திரமாகும். இதனால் உருவாகும் கழிவுகளை, எங்கே கொட்டுவது? அதன் விளைவுகளின் விலையைக் கொடுக்கப் போவது யார்?
காலநிலை மாற்றத்தால், எமது உணவுகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் தொடர்ச்சியான நெருக்கடியில் உள்ளது. வேளாண்சூழலியல் (agroecology) பற்றி, ஆழமாகச் சிந்தித்தாக வேண்டும்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் நிலத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தில், தவிர்க்கவியலாத பங்கை வேளாண்சூழலியல் வகிக்கிறது. இதேவேளை, பல்தேசியக் கம்பெனிகள் இலாபம் பார்க்கும் புதிய துறையாக, வேளாண்சூழலியல் பார்க்கப்படுகின்றது. இதற்கு அரசுகளும் என்.ஜீ.ஓக்களும் உதவுகின்றன.
இவை மூன்று விடயங்களை அடிப்படையாகச் செய்கின்றன. முதலாவது, தொழில்நுட்பத் தீர்வுகளே வேளாண்சூழலியலில் சாத்தியமாகும் என்று அனைவரையும் நம்ப வைக்கின்றன. இதன்மூலம், இயற்கை விவசாயம் மட்டுமன்றி, விவசாயிகளும் நிலத்திலிருந்து பெயர்க்கப்படுகிறார்கள். நிலங்கள் பல்தேசிய நிறுவனங்கள் வசமாகின்றன.
இரண்டாவது, வேளாண்சூழலியல் புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்குகிறது, எனவே, இது அனைவருக்கும் நல்லது என்ற பொய்யை அரசும் என்.ஜீ.ஓக்கள், பல்தேசியக் கம்பெனி ஆகியவற்றின் கூட்டு, மக்களுக்குத் தொடர்ந்து சொல்கிறது.
மூன்றாவது, அரச-தனியார் கூட்டாண்மை என்ற பெயரில், அரச நிலங்களும் அரச நிதியும் பல்தேசியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இதை விரிவாக விளங்கிக் கொள்ள, அண்மையில் வெளியான Junk Agroecology: The corporate capture of agroecology for a partial ecological transition without social justice என்ற அறிக்கையை வாசியுங்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளை கொவிட்-19 பெருந்தொற்று தின்றுள்ளது. பெருந்தொற்றும் காலநிலைப் பேரிடர்களும் உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம் மிகப்பெரிது. அடுத்தாண்டும் இதே நிலை தொடருமாயின் பாதிக்கப்படப்போவது எளிய மக்களே. இதற்கு தீர்வு இல்லையா என நீங்கள் நினைக்கலாம். நல்ல செய்தியொன்றுண்டு.
Paying for the pademic and a just transtion என்ற அறிக்கை பெருந்தொற்றாலும் காலநிலை மாற்றத்தாலும் ஏற்பட்ட மேலதிகச் செலவு ஆண்டொன்றுக்கு 9.410 ட்ரிலியன் அமெரிக்க டொல என்று இனங்காணுகிறது. ஆனால், இந்தத் தொகையை மீளப்பெறுவதற்கான வழிவகைகள் எம்மிடம் உள்ளன. இதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பங்களிப்பதோடு நின்றுநிலைக்கத்தக்க அபிவிருத்தியை மேற்கொள்ளவும் இயலும்.
இதற்காக 10 முன்மொழிவுகளை இவ்வறிக்கை முன்மொழிகின்றது. இதன்மூலம் ஆண்டுதோறும் 9.457 ட்ரிலியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொள்ளவியலும். இந்தப் பத்து முன்மொழிவுகளும் அடிப்படையில் மூன்று விடயங்களையே முன்னிறுத்துகின்றன. செல்வம் அதிகம் உள்ள இடத்தில் அவற்றுக்கு வரி வசூலிக்கப்பட வேண்டும்.
சுவட்டு எரிபொருட் பாவனைக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளின் ஊடு, அதன் பாவனை குறைக்கப்படுவதோடு அதன்மூலம் கிடைக்கும் வருமானம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த செலவழிக்கப்படலாம். மூன்றாவது, நாடுகள் இராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியைக் குறைப்பதன் ஊடு பெருமளவில் நிதி மிச்சப்படும்.
‘எமது குழந்தைகளுக்கான உலகம் யாது’ என்ற கேள்வியோடு நிறைவு செய்ய விரும்புகிறேன். எங்கள் குழந்தைகள் வாழும் வாழப்போகும் உலகம் பாதுகாப்பானதா, அதற்கு நாங்கள் பங்களித்திருக்கிறோமா?
யுனிசெவ் அமைப்பு The climate crisis is a child rights crisis என்ற தலைப்பில் அமைந்த அறிக்கையொன்றை அண்மையில் வெளியிட்டது. இதன்படி, (1) உலகில் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வெப்பஅலைகளால் தீவிரமாகப் பாதிக்கப்படுகிறார். புவி வெப்பநிலை அதிகரிக்க, இவ்வெண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். (2) ஆறில் ஒரு குழந்தை சூறாவளிக்கு இலக்காகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. (3) ஏழில் ஒரு குழந்தை ஆற்றுவெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார். (4) பத்தில் ஒன்று கடல்கோளினால் பாதிப்புக்கு உள்ளாகவுள்ளது. (5) உலகில் உள்ள குழந்தைகளில் 90%மானோர் மாசடைந்த காற்றைச் சுவாசித்துள்ளனர்; இன்னமும் சுவாசிக்கின்றனர். இத்தரவுகள் அச்சமூட்டுகின்றன.
இப்போது சிந்தியுங்கள் நீங்கள் காலநிலைக் குற்றவாளியா? அடுத்தாண்டை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்.