;
Athirady Tamil News

சர்ச்சைகளை வென்று மின்னொளியில் ஒளிரும் ஆரியகுளம்! (கட்டுரை)

0

மயூரப்பிரியன் –

ஆரிய குள புனரமைப்பு சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் திறக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆரிய குளம் அமைவிடம்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து , சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலும் , யாழ்.மத்திய புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தூரத்திலும் , பருத்தித்துறை வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளது. அருகில் நாக விகாரையும் அமைந்துள்ளது.

பெயர் எவ்வாறு வந்தது?, எப்போது வந்தது?

ஆரியகுளத்தை யாழ்ப்பாண அரசுடனும், அதன் ஆட்சியாளருடனும் தொடர்புபடுத்திக் கூறும் போது ஆரியகுளம் என்ற பெயர் எவ்வாறு வந்தது?, எப்போது வந்தது?, எந்த மன்னன் காலத்திற்கு உரியது? இக்குளம் யாருக்குச் சொந்தமானது? என்பன தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களும், பல கேள்விகளும் மக்களிடமும், வரலாற்று ஆர்வலர்களிடமும் நீணடகாலமாக இருந்து வருகின்றது. அது தொடர்பில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் ,

“தமிழ்ப் பேரகராதியில் ஆரியன் என்ற சொல்லுக்கு தலைவன், பிராமணன் என்ற பொருள்களும் உள்ளன. .

பாண்டியப்படைகள், கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகரகக் கொண்ட யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தனர்.

இதனால் இவ்வரசு பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சக்கரவர்த்திகள் அரசு என்றே அழைக்கப்படுகின்றன. இதனால் யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த தொடக்ககால மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்திகள் என்பதை ஒரு வம்சப் பெயராகக் கொண்டு தமது பெயருடன் ஆரியன் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டனர்.

யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்திகளின் முக்கிய வரலாற்று அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆரியச்சக்கரவர்த்திகள் வாழ்ந்த தென்தமிழகத்தில் அதிலும் குறிப்பாக பாண்டியரின் ஆதிக்கம் நிலவிய இடங்களில் ஆரியகுளம், ஆரியநல்லூர், ஆரியச்சக்கரவர்த்தி நல்லூர், ஆரியகவுண்டனனூர், ஆரியக்கவுண்டன் வளவு முதலான பெயர்கள் பரந்த பிரதேசத்திற்குரிய இடப்பெயர்களாக உள்ளன.

அதிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் என்ற அதே பெயர் தென்தமிழகத்தில் ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் பெயராக இருப்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் ஆரியச்சக்கரவத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்த தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

கவனிப்பாரற்று காணப்பட்ட குளம்.

யாழ்ப்பாண இராட்சியத்துடன் தொடர்புடைய மரபுரிமை சின்னமாக பேணப்பட வேண்டிய ஒரு குளம் ,அதுவும் நகர் மத்தியில் காணப்படும் குளம் கவனிப்பாரற்று காணப்பட்டது.

ஆகாய தாமரைகள் வளர்ந்தும் , பொலித்தீன் , பிளாஸ்டிக் கழிவுகள் என குப்பைகளாலும் நிறைந்து காணப்பட்டன.

அந்நிலையிலையே இந்த ஆண்டு ஆரம்பத்தில் மாநகர சபையை கைப்பற்றி ஆட்சி அமைத்து முதல்வரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் , தமது தேர்தல் வாக்குறுதியான “தூய கரங்கள் தூய நகரம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.

அதன் ஒரு கட்டமாக நகர் பகுதியில் உள்ள வெள்ள வாய்க்கால்கள் , மற்றும் குளங்களை துப்பரவு செய்யும் திட்டத்தை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து நகர் பகுதிகளில் உள்ள குளங்களை புனரமைத்து அழகு படுத்தும் செயற்திட்டங்களையும் ஆரம்பித்தனர்.

குள புனரமைப்புக்கு உதவி கோரல்

அதற்காக கொடையாளிகளிடம் உதவிகளையும் கோரினார்கள். இவர்களின் கோரிக்கையை அடுத்து தியாகி அறக்கொடை நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் ஆரிய குள புனரமைப்பு மற்றும் அழகு படுத்தலுக்கான நிதியுதவியை வழங்க முன் வந்தார்.

அதனை அடுத்து புனரமைப்பு மற்றும் அழகு படுத்தலுக்கான திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டு செலவு மதிப்பீடு செய்யப்பட்ட போது , சுமார் 4 கோடி ரூபாய் செலவு மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கான நிதியினை தருவதாக தியாகி அறக்கொடை நிறுவனர் உறுதியளித்தார்.

புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

புனரமைப்பு பணிகள் 4 கட்டமாக திட்டமிடப்பட்டு , கடந்த யூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பமானது , முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்து கடந்த 2ஆம் திகதி திறப்பு விழா நடைபெற்றது.

குறித்த இரண்டு கட்ட பணிகளையும் நிறைவு செய்வதற்கு சுமார் 2 கோடியே 80 இலட்ச ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குளத்தின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினை வாங்குவதற்கான மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் , குளத்தின் நடுவில் ஒரு சிற்றுண்டி சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது. அத்துடன் சில பணிகளும் உள்ளன. அவையே மூன்றாம் நான்காம் கட்ட பணிகளாகும்.

புனரமைப்பு பணியும் – எதிர்ப்பரசியலும்.

ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதும்,சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பலரும் அதனை வரவேற்றத்துடன் , அது தொடர்பிலான அபிப்பிராயங்களையும் வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து எதிர்ப்பரசியல் தொடங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளை கடுமையாக எதிர்த்தார்கள்.

அதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் , உள்ளூராட்சி சபை தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டவர்கள் “தூய கரங்கள் – தூய நகரம்” என வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆரிய குளம் புனரமைப்பும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததுடன் , தற்போதைய முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட 10 மாநகர சபை உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அல்லாது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என தனித்து இயங்குகின்றார்கள். தமது கட்சியை விட்டு , தனித்து இயங்குவதானல் , அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களை எதிர்த்து , எதிர்ப்பரசியல் செய்வதனை வழமையாக்கி கொண்டுள்ளார்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர்.

குளத்தை புனரமைத்தால் சிங்களமயமாகும் என எதிர்ப்பு

அதன் ஒரு கட்டமாகவே , ஆரிய குளத்தினை புனரமைப்பு செய்தால் , அருகில் பௌத்த விகாரை காணப்படுவதனால் , புத்தர் சிலை வைக்கப்படலாம் , விகாராதிபதி குளத்தை சொந்தமாக்கலாம் , அருகில் வயல்கள் இல்லாத நிலையில் எதற்காக குளத்தை புனரமைக்க வேண்டும் ? குளத்தை தூர்வாரி புனரமைத்தல் , குளத்தின் கீழ் உள்ள களிமண் படலம் அகற்றப்படலாம் அதனால் குளத்தில் நீர் தேங்கி நிற்காது என கடுமையாக புனரமைப்பு மற்றும் அழகு படுத்தல் திட்டத்தை எதிர்த்தனர்.

அவர்களின் எதிர்ப்பையும் மீறி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பமானது அதன் போது திட்ட வரைவு மக்கள் காட்சிக்கு வெளியிடப்பட்டது. அதில் குளத்தின் நடுவில் சிற்றுண்டி சாலை அமைக்கப்படும் காட்சி இருந்தது.

உடனே எதிர்ப்பரசியல் செய்தவர்கள் குளத்தின் நடுவில் உள்ளது சிற்றுண்டி சாலை அல்ல அது கொழும்பில் உள்ள “கங்காராம விகாரையை” ஒத்தது. என விமர்சனங்களை முன் வைத்தது சர்ச்சைகளை கிளப்பினார்கள்.

அதனால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் முகமாக கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி “ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களும் அமைக்கப்பட முடியாது” என யாழ்.மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.

நிதி பங்களிப்பு செய்தவருக்கு எதிராக விமர்சனம்

பின்னர் புனரமைப்பு பணிக்கு நிதி உதவி வழங்கும் தியாகி அறக்கொடை நிறுவனர் தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்தார். அவரின் நிதி பங்களிப்புடன் இராணுவத்தினர் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை வைத்து , அவர் இராணுவத்தின் முகவர் என விமர்சனங்களை முன் வைத்து சர்ச்சைகளை கிளப்பினார்கள். அவையும் பெரியளவில் சலனத்தை ஏற்படுத்தவில்லை.

அவ்வாறான எதிர்ப்புக்கள் , சர்ச்சைகளையும் தாண்டி முதலாம் மற்றும் இராண்டாம் கட்ட புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தல் திட்டங்கள் நிறைவு பெற்று டிசம்பர் 2ஆம் திகதி திறப்பு விழா என நாள் குறிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை பிரதம விருந்திரனாக முடிவெடுக்கப்பட்டு , அழைப்பிதழ்கள் வெளியானதும் , வடமாகாண ஆளுநர் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றார் , இராணுவத்தினருக்கு காணி வழங்கவுள்ளார் என கூறி பிரதம விருந்தினராக ஆளுநர் அழைக்கப்படுவதனையும் கடுமையாக எதிர்த்தனர்.

அவற்றையும் மீறி ஆளுநர் திறப்பு விழாவிற்கு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

திறப்பு விழாவும் கண்டிய நடனமும்.

திறப்பு விழாவான டிசம்பர் 2ஆம் திகதி , ஆரிய குளத்திற்கு வருவதற்கு முதல் ஆளுநர் அருகில் உள்ள நாக விகாரைக்கு சென்று வழிபட்டு விகாராதிபதியுடன் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். அவர்கள் வரும் போது , கண்டிய நடன வரவேற்புடன் நிகழ்விடத்துக்கு வந்தார்கள்.

இவ்வளவு காலமும் திட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் களமாடியவர்களுக்கு “சும்மா இருந்த வாய்க்கு அவள் கிடைத்தது போல ” ஆளுநர் மற்றும் நாக விகாரை விகாராதிபதி கண்டிய நடனத்துடன் ஆரிய குள திறப்பு விழாவிற்கு வருகை தந்த புகைப்படங்கள் அமைத்தன.

அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து , “யாழ்ப்பாணம் சிங்களமயமாகி விட்டது” , “அன்றே சொன்னோம் ஆரிய குள புனரமைப்பு சிங்கள மயப்படுத்தல் என்று ” கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்த முயன்றார்கள்.

திறப்பு விழா தமிழர் பாரம்பரியத்துடனே நடந்தது.

ஆனால் திறப்பு விழா அன்று விகாராதிபதி மற்றும் ஆளூநர் நிகழ்விடத்திற்கு வரும் போதே கண்டிய நடன வரவேற்புடன் வந்தார்கள். அதுவும் மாநகர சபை ஏற்பாடு செய்ததில்லை என முதல்வர் தெரிவித்தும் இருந்தார். திறப்பு விழா நிகழ்வு தமிழ் பாரம்பரியத்துடன் ,தவில் நாதஸ்வர மங்கள இசையுடனையே நடைபெற்றது. அவ்வாறு இருக்க விகாராதிபதி மற்றும் ஆளூநர் கண்டிய நடனத்துடன் நிகழ்விடத்திற்கு வருகை தந்த விடயத்தை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக்க முயற்சித்தார்கள்.

எவ்வளவோ சர்ச்சைகள் , திட்டங்களை குழப்புதற்கான முயற்சிகள் , முட்டுக்கட்டைகள் என எல்லாவாற்றையும் தாண்டி கடந்த 2ஆம் திகதி “ஆரிய குளம் மகிழ்வூட்டல் திடல்” திறந்து வைக்கப்பட்டது.

குப்பைகளால் நிரம்பி காணப்பட்ட குளம் வண்ணமயமான மின்னொளியில் மிளிர்கிறது. அன்றைய திறப்பு விழாவின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது யாழ்.நகர் மத்தியில் பிரசித்தமான சுற்றுலா தளமாக ஆரியகுளம் மாறியுள்ளது.

எதிர்ப்பரசியல் செய்வோர் இன்றும் ஆரிய குளத்தை எதிர்த்து பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கும் போது , யாழ்.மாநகர முதல்வர் அணி , ஈச்சமோட்டை மறவன் குள புனரமைப்பு பணிக்கான அடிக்கல்லினை கடந்த 8ஆம் திகதி நாட்டி புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மறுநாள் 09ஆம் திகதி நாயன்மார்கட்டு குள புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.

ஈச்சமோட்டை மறவன் குள புனரமைப்பு பணிகளுக்கான நிதியுதவியினை தியாகி அறக்கொடை நிறுவனரும் , நாயன்மார்கட்டு குள புனரமைப்பு பணிக்கனான நிதியினை மோட் நிறுவனத்தின் அருந்தவநாதன் அனோசனும் வழங்கியுள்ளனர்.

மாநகர சபை பட்ஜெட் தோற்கடிக்கப்படுமா ?

இதேவேளை நாளை மாநகர சபையில் , முதல்வரால் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை தோற்கடித்து தற்போதைய முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கான திட்டத்தை சில உறுப்பினர்கள் தீட்டி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிற நிலையில் கடந்த வியாழக்கிழமை இதனை முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது “வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே தயாரித்து இருக்கின்றோம். ஆகவே அவர்களுடைய கோரிக்கைகளை உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டத்தை அவர்களே தோற்கடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என நம்பிக்கை கொண்டுள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் பதவியை பறிக்கும் முகமாக பட்ஜெட் தோற்கடிக்கப்படுமா ? என்பது நாளை மாலை அறிய முடியும். யாழ்.மாநகர மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றுள்ள தற்போதைய முதல்வரின் பதவியை பறிப்பதன் ஊடாக தமது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்த மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் விரும்பாது என அரசியல் விமர்ச்சகர்கள் கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.