‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ !! (கட்டுரை)
மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர்.
அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கும் பாதிக்கப்பட்டவர்களால், தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தமையால், உடனடியாகக் குறித்த காரணத்தைக் காட்டி, கைது நடவடிக்கையிலிருந்து பின்வாங்கிய பொலிஸார், போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், ஓட்டோவை ஓட்டிய 19 வயதான இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை மாணவனை 09.12.2021 அன்று கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து, மறுநாள் 10.12.2021 மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் விளைவித்துள்ள, சட்டவிரோதமான கைது, சட்டத்துக்கு முன் சமனாக நடத்தப்படுதல் ஆகிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில், குறித்த இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினூடாக மட்டுமல்லாமல், உயர்நீதிமன்றத்தையும் நாடுதல் பொருத்தமானதாகும். அது ஒருபுறமிருக்க, இந்தச் சம்பவம், ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழிக்கான நிஜ உதாரணமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
‘மாவீரன்’ என்ற ஒரு தமிழ்ச் சொல்; அதன் சூழமைவு பற்றி எந்த அக்கறையுமின்றி, இலங்கை அரச இயந்திரத்தை அச்சம் கொள்ளச் செய்கிறது என்றால், எப்பேற்பட்ட அச்சத்தில் அரண்டும், மிரண்டும் போயுள்ளதொரு கோழை அரச இயந்திரமாக அது இருக்க வேண்டும்?
தமிழ் என்றால் பயம், தமிழனென்றால் பயம் என்ற மனநிலையில், எப்படி ஓர் அரச இயந்திரம் இயங்க முடியும்? அதுவும், சிங்களவர்களுக்கு அடுத்த பெரும்பான்மை இனமான தமிழர்களைக் கொண்ட நாட்டில், அந்தக் குடிகளை அச்சத்துடனும் சந்தேகத்துடனும் அரச இயந்திரம் அணுகினால், அந்த நாடு எப்பிடி அனைவருக்குமான நாடாக முடியும்?
‘ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு சட்டம்’ என எல்லாவற்றிலும் ‘ஒற்றுமை’யை உருவாக்க விளைகிறவர்கள், நாட்டின் பிரதான மக்கள் கூட்டத்தை, அச்சத்துடனும் சந்தேகத்துடனும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் அணுகிக்கொண்டு, தாம் விரும்பும் அந்த ‘ஒற்றுமை’யை ஒருபோதும் ஸ்தாபிக்க முடியாது.
ஒரு சிங்கள இளைஞன், தன்னுடைய ஓட்டோவில் ‘மாவீரன் துட்டகைமுனு’ என்று, தான் விரும்பும் மகாவம்சக் கதாப்பாத்திரத்தின் பெயரை எழுதிக்கொண்டால், அவனை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால், ஒரு தமிழ் இளைஞன் தன்னுடைய ஓட்டோவில், ‘மாவீரன் கர்ணன்’ என்று, தான் விரும்பும் மகாபாரதக் கதாபாத்திரத்தின் பெயரை எழுதிக்கொண்டால், அந்த இளைஞனை விசாரணைக்கு அழைப்பது ஏன்?
ஊடகங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தலையிட்டதும், உடனே அந்த நபரைப் போக்குவரத்துக் குற்றச்சாட்டுக்காகக் கைது செய்வது ஏன்? அவர் மீது சாட்டப்பட்ட போக்குவரத்துக் குற்றச்சாட்டுக்காக, அந்நபரை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தது ஏன்? போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுகிற அனைவரும், இரவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்களா என்ன? ஏன், இந்தப் பாரபட்சம்? இதுதான் ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்பதைக் கட்டியெழுப்பும் முறையா?
தமிழ் மக்களை, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எல்லா வகையிலும் அலட்சியம் செய்யும் ஓர் அரச இயந்திரத்தால் ஒருநாளும் இந்நாட்டில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது என்பதை இத்தனை தசாப்த இனமுரண்பாடுகளைக் கடந்தும், ஓர் அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லையென்றால், இது புரிதல் பற்றிய பிரச்சினையல்ல; இது மனப்பான்மை பற்றி பிரச்சினை.
தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் போக்கை, இன்னும் சில சம்பவங்கள் மேலும் ஒப்புவிப்பதாகவே அமைகின்றன. ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ அமைக்க ஜனாதிபதி ஒரு செயலணியை அமைத்திருந்தார். அந்தச் செயலணி அறிவிக்கப்பட்டபோது, அதில் ஒரு தமிழர் கூட நியமிக்கப்பட்டிருக்கவில்லை. குறித்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தபோது, அதைப்பற்றி அக்கறை கொள்ளாது, இரண்டு தமிழர்களை அந்தச் செயலணிக்கு நியமித்தார் ஜனாதிபதி.
தற்போது கூட, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ஆணையாளர்களை நியமித்துள்ளார். அதில் ஒரு தமிழரோ, ஏன் முஸ்லிமோ கூட இல்லை. இலங்கை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் பல இனத்துவேச, இனவாத நடவடிக்கைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தம்மை நேரடியாக இனவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்கள் சில பெயரளவு நடவடிக்கைகளிலேனும் (tokenism) ஈடுபட்டார்கள். அதன் பலனாக, எல்லாக் குழுக்களிலும் சிறுபான்மையின பிரதிநிதி ஒருவரையேனும் நியமித்தல், சில முக்கிய அரச பதவிகளுக்கு, தமக்கு விசுவாசமான தமிழர்களை நியமித்தல் என, இந்தப் பெயரளவு நடவடிக்கைகள் அமைந்தன.
இத்தகைய பெயரளவு நடவடிக்கைகளை முன்னெடுத்த கட்சியினர், அரசியலுக்காக இனவாதத்தைப் பயன்படுத்தியவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தமிழர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வு, அச்சம் என்பதைவிட, தமது அரசியல் பிழைப்புக்காக, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை முன்னெடுத்தல் என்பதே அரசியலாக இருந்தது.
ஆனால், இன்றைய ஆட்சியாளர்களின் நிலை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள் மீதான அச்சம் மட்டுமல்ல, கடும் துவேசமும் மிக்க ஆட்சியாளர்களாக இவர்கள் இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத்தான் நடவடிக்கைகள் பறைசாற்றி நிற்கின்றன.
இன்று, இன சௌஜன்யத்துக்கான பெயரளவு நடவடிக்கைகள் கூடக் கைவிடப்பட்டு, பட்டவர்த்தனமான இனவாத முகத்தை ஆட்சியாளர்கள் வௌிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால், இரண்டு எண்ணங்கள் தோன்றுகின்றன.
ஒன்று, இவர்கள் சிறுபான்மையினரை உண்மையாக வெறுப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது, அவர்களுக்கு முன்னையோர் அரசியலுக்காக கட்டிய இனவாதக் கதைகளை முழுமையாக நம்பி, சிறுபான்மையினர் மீது கடும் வெறுப்பைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இரண்டு, இவர்கள் சிறுபான்மையினர் மீது அச்சமும் சந்தேகமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தமது பாதுகாப்பின்மை உணர்வைப் பிரதியீடு செய்ய, சிறுபான்மையினரை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
உண்மையில், சிறுபான்மையினர் மீது அச்சமும் சந்தேகமும் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், அது ஒரு மிகப்பெரிய மனநோய். இந்த நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரை வெறுத்துக்கொண்டு, நாட்டை ஆளுவதும் அந்த மனநிலையை நாட்டு மக்களிடையே விதைப்பதும் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு விஷமூட்டுவதைப் போன்ற செயல்தான். அது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் இனசௌஜன்யத்தையும் ஒற்றுமையையும் கொன்றொழித்துவிடும்.
புத்தர் சொன்ன உபதேசங்கள், இங்கு முக்கியமானவையாகும். “வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை” என்று சொன்ன புத்தர், “மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார். நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார்” என்று உரைத்தார்.
மேலும் புத்தர், ‘உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள்” என்றும் கூறுகிறார்.
மூலைக்கு மூலை புத்தர் சிலைகளை வைப்பதில் காட்டும் அக்கறையை, ஆட்சியாளர்கள் புத்தரின் போதனைகளைக் கேட்பதிலும் பின்பற்றுவதிலும் காட்டினால் இலங்கை உண்மையில் புண்ணிய பூமியாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.