;
Athirady Tamil News

சலிக்காமல் கரம் கொடுக்கும் இந்தியா!! (கட்டுரை)

0

இலங்கையில் அண்மைய காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலைமையால் துன்ப சுமைகள் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமத்தப்பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நோய் காலத்துக்கு பின்னர் இலங்கை பாரியளவான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. பணவீக்கம், டொலரின் பெறுமதியின் அதிர்ச்சி கொடுக்கும் ஏற்றம் என நாடு அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் இலங்கைக்கு கைகொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகின்றமை மக்களை கொஞ்சமாவது ஆசுவாசப்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.

இலங்கையின் வேண்டுகோளின் படி பல்வேறு உதவிகளை அரசியல், மற்றும் பொருளதார மட்டத்தில் இந்தியா வழங்கி வருகின்றது அனைவரும் அறிந்த விடயம். இதற்கு மேலதிகமாக, சாதாரண மக்கள் மத்தியிலும் தமது நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்தியா பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ளது.

அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ஊடாக மக்களை மையமாகக் கொண்டு, இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதுடன், பல்வேறு மனிதாபிமான உதவித்திட்டங்களால் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளிலும் இந்தியா நேரடியாக ஈடுபட்டு வருகின்றது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஏனைய பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொதிகள் கடகந்த 27ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் நிலை செயலாளர் அஷோக் குமாரால் இந்த நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டதுடன், இந்த விசேட நிகழ்ச்சித் திட்டமானது முஸ்லிம் யுவதிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. ஈகைத் திருநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் முகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் , கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெலிகம்பிட்டியவில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங்கால் வழங்கப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இதேபோல, புதுவருடத்தை முன்னிட்டு புனித நகரான அனுராதபுரத்திலுள்ள மடவேவா மற்றும் கிரிமெட்டியாவ போன்ற பகுதிகளிலும், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கிரிய பகுதிகளில் உள்ள ஆறு கிராமங்களிலும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இலங்கை மக்களுக்கான இந்த விசேட மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டமானது மார்ச் 13 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள், 600 மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கையளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள மீனவர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கையில், நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சவால்களை எதிர்கொண்டுள்ள மக்களின் அன்றாட வாழ்வில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் ஆகியவையும் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

நாளாந்தம் அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் அன்றாட உணவு தேவையைகூட பூர்த்திசெய்து கொள்ள முடியாத நிலையில் பல குடும்பங்கள் துன்பங்களுக்க முகங்கொடுத்து வருகின்றன. தலைநகரம் மற்றும் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் வசிப்பவர்களே விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல் திணறும் போது, கஷ்ட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் சொல்ல மாளாது. இவ்வாறான நிலையில் இலங்கையில் உள்ள தனது தூதரகங்களின் ஊடாக இந்தியா முன்னெடுத்துள்ள இந்த மனிதாபிமான முயற்சி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள் கொடி உறவு இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. இலங்கைக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது இந்தியா உதவிக்கரம் நீட்டுவது என்பது ஒன்றும் புதிதல்லவே.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கூட பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில், இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவால் சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது.

இம்மருத்துவப்பொருட்கள் அடங்கிய தொகுதி இந்தியக் கடற்படைக் கப்பல் கரியால் மூலமாக கொண்டுவரப்பட்டதுடன் பேராதனை போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக அவை வழங்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை துரிதமாக இலங்கைக்கு விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டமையானது இலங்கைக்கும் மக்களின் நலன்களுக்கும் இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தினை நிரூபிக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

மேலும், சிசெல்ஸுக்காக இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட அலை சவாரி படகொன்றும் இந்தியக் கடற்படைக் கப்பலான கரியாலில் தற்போது ஏற்றப்பட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த விடயங்களை கையாள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் இரு பாதுகாப்பு படைகளினதும் ஒன்றிணைவு ஆகியவற்றை இச்செயற்பாடுகள் பிரதிபலிக்கின்றன.

இதற்கு மேலதிகமாக, கரியால் கப்பல் மூலமாக இரு அம்புலன்ஸ் வாகனங்களும் மாலைதீவுகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள மூன்று பங்காளி நாடுகளின் பரந்த தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக கரியால் கப்பலை சேவையில் ஈடுபடுத்தியமை “பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்” என்ற இந்தியாவின் சாகர் கோட்பாட்டினை எடுத்தியம்புவதாக அமைகின்றது. அத்துடன் பிராந்தியத்தில் உள்ள பங்காளி நாடுகளின் தேவைகளை தனியாகவும் ஏனைய நாடுகளின் பங்களிப்புடனும் நிவர்த்தி செய்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பினையும் இது சுட்டிக்காட்டுகின்றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் முதலில் பதிலளித்து செயற்படும் நாடாக இந்தியா பரவலாக கருதப்படுகின்றது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் எம்டி நியூ டயமன்ட் மற்றும் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் குறித்த அனர்த்தங்கள் ஏற்பட்டபோது இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோரக் காவற்படைக்கு சொந்தமான கலங்கள் உடனடியாகவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை மூலமாக இலங்கையின் கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகள் தணிக்கப்பட்டமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும்.

அத்துடன் 2017 மேயில் இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படையினர் உடனடியாக வருகைதந்திருந்ததுடன், கொவிட்-19 பெருநோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 2021 ஓகஸ்ட் மாதம் 100 தொன்கள் திரவ நிலை ஒட்சிசனையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான, மனிதாபிமான நடவடிக்கையில் ஊடாக இலங்கையுடனான தனது உறவினை இந்தியா மேலும் வலுப்படுத்தி வருவதுடன், இலங்கை மக்களின் நலனில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை துன்பத்தில் தவிக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை துளிரசெய்திருக்கின்றது என்றால் அது மிகையில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.