;
Athirady Tamil News

ரணிலின் அந்த ஏழு நிமிடங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? (கட்டுரை)

0

இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்து வரும் வாரங்கள் அல்லது அடுத்து வரும் மாதங்கள் மிகவும் சவால் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் அமையும். அவற்றை அவர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதே தற்போதைய நிலைமையில் அரசியல் களத்தில் பேசப்படுகின்ற மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது. சமகாலத்தில் இரண்டு வகையான சவால்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கொண்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்தே போட்டியிட்டது. சஜித் பிரேமதாச தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 54 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டது. ஆனால் ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் வாக்குகளின் மூலம் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை கூட பெற முடியவில்லை. மாறாக ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது. அந்த தேசிய பட்டியல் ஆசனம் சுமார் ஒரு வருட காலத்திற்கு பின்னரே நிரப்பப்பட்டது. அதுவரை கட்சியில் யாரை அந்த தேசியப்பட்டில் ஆசனத்திற்கு தெரிவு செய்வது என்பதில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக பாராளுமன்றம் செல்வதை விரும்பவில்லை. அதனை அவர் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய பிரமுகர்களும் அதனை ஏற்கவில்லை. இறுதியில் கடந்த வருட நடுப்பகுதியில் நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவை நீங்கள் பாராளுமன்றம் சென்று கட்டாயம் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பங்களிப்பு செலுத்த வேண்டும், எனவே தேசியப் பட்டியல் ஆசனத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தவே அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்று பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார்.

ஏழு நிமிட உரை

சபைக்குள் பிரவேசித்த முதல் நாளிலேயே ரணில் விக்ரமசிங்க ஏழு நிமிடங்கள் உரையாற்றினார். அந்த ஏழு நிமிட உரை நாட்டின் பலரையும் அவரை திரும்பி பார்க்க வைத்தது. அதில் பல முக்கியமான விடயங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதாவது பொருளாதார நெருக்கடி எவ்வாறு தீவிரமடைய போகின்றது? எவ்வாறான பிரச்சினைகள் நாட்டில் ஏற்படப் போகின்றன? அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அந்த ஏழு நிமிட உரையில் தெரிவித்திருந்தார். அந்த உரையிலேயே ரணில் விக்ரமசிங்க தான் ஒரு மிகப்பெரிய அரசியல் ரீதியான கதாபாத்திரம் என்பதையும் பொருளாதார ரீதியான எதிர்வு கூறலை சரியாக முன்னெடுக்க கூடியவர் என்பதையும் வெளிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராகியிருக்கின்றார். 150 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வகையில் ஆட்சி செய்த அரசாங்கம் இன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவியை வழங்கியுள்ளது. 150 ஆசனங்களையும் வைத்துக்கொண்டு இந்த அரசாங்கம் பயணித்த போதும் இந்த நெருக்கடிகள் அரசாங்கத்துக்கு பாரிய சவால்களை ஏற்படுத்திவிட்டன. ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையிலும் நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னணியிலும் தற்போது ஒரே ஒரு ஆசனத்தை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆசனத்துக்கு சென்றுள்ளார்.

எதிரணியின் நகர்வு

அதேவேளை சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் அவரை பிரதமராக நியமித்திருக்க வேண்டும் என்ற கருத்து தற்போது முன்வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் ஜனாதிபதி சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு நீங்கள் பிரதமர் பதவியேற்று இடைக்கால அரசாங்கத்தை கொண்டு நடத்துங்கள் என்று கூறியிருந்தார். சில தடவைகள் ஜனாதிபதி தொலைபேசியிலும் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசியிருந்தார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார். மாறாக ஜனாதிபதி பதவி விலகும் பட்சத்தில் மட்டுமே தான் அந்த பதவியை ஏற்பதாக சஜித் கூறிவந்தார்.

இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தி அவரை பிரதமராக நியமித்தார். இறுதி நேரத்தில் சஜித் பிரேமதாச அணி சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயார் என்று அறிவித்ததுடன் ஒரு கடிதத்தையும் ஜனாதிபதிக்கு அனுப்பினார். ஆனால் அந்த கடிதத்துக்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி எனது பல கோரிக்கைகளை நீங்கள் மறுத்துவிட்டீர்கள். அதனால் நான் கலந்துரையாடல்களை நடத்தி ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தேன். அந்த தீர்மானத்தை தற்போது மாற்ற முடியாது என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ரணில் முன்னுள்ள சவால்கள்

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது பாரிய இரண்டு சவால்கள் காணப்படுகின்றன. அந்த இரண்டு சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்? அவற்றை எவ்வாறு முறியடித்து தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க போகிறார் என்பதை அடுத்து வரும் சில வாரங்களும் நாட்களுமே தீர்மானிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

பிரதமர் முன் இரண்டு சவால்கள் காணப்படுகின்றன. முதலாவது பாராளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை ‍வெளிக்காட்ட வேண்டும். இரண்டாவது ஏதாவது செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். அத்தியாவசிய பொருள் இறக்குமதி பிரச்சினை, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்றவற்றுக்கு தீர்வு காணவேண்டும். இந்த இரண்டு சவால்களையும் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு வெற்றி கொள்ளப் போகிறார் என்பதே மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒருவேளை முதல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது எதிரணியினர் எதிர்ப்பை வெளியிட்டு நீங்கள் பெரும்பான்மையை ‍வெளிக்காட்டுங்கள் என்று கூறலாம். எப்படியிருப்பினும் ஒரு சில வாரங்களிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டியகட்டாயம் இருக்கிறது.

பெரும்பான்‍மை கிடைக்குமா?

பதவியேற்ற பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் மாலை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எவ்வாறு பெரும்பான்மையை நீங்கள் நிரூபிப்பீர்கள் என்று கேட்டதற்கு அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று ரணில் பதிலளித்தார். அதேபோன்று உங்களுக்கு எந்த எந்தப் பக்கத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க எனக்கு ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் ஆதரவு வழங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த பதில்களை மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெறுமனே வார்த்தைகளை வெளியிடுபவர் அல்ல. அவர் திட்டமிட்டு விடயங்களை ஆராய்ந்தே வெளிப்படுத்துவார். எந்த விடயத்தையும் அறியாமல் அவர் கருத்து வெளியிடுவதில்லை. அந்தவகையில் தனக்கு எதிர்க் கட்சிகளினதும் ஆதரவு இருக்கின்றது என்று தெரிவித்துள்ளதை கவனிக்கவேண்டும். அதன்படி அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு அனைத்து தரப்பிலும் உறுப்பினர்கள் இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக ஆளுங்கட்சியில் 60 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் எதிரணியிலிருந்து 20 பேர் வருவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையில் ஒரு தெளிவற்ற தன்மை காணப்படுகிறது. எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரதமருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை நியமனத்தின் போது எந்தெந்த கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றன என்பதை கண்டுகொள்ள முடியும். எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன எதிர்க்குமா? அதாவது ஆதரவு வழங்குமா? ஒரு சில மாதங்களுக்கு இந்த கட்சிகள் புதிய பிரதமருக்கு சந்தர்ப்பத்தையும் ஆதரவையும் வழங்குமா என்பது முக்கியமான விடயங்களாக உள்ளன.

புதிய பிரதமரின் பதவியேற்புக்கு பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்தை பார்க்கும்போது உடனடியாக இந்த தரப்புக்கள் எதிர்க்காது என்று தெரிகிறது. அதாவது புதிய பிரதமரான ரணிலுக்கு பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மை கிடைக்கலாம், நாம் நிலைமையை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று மனோ குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பிரதமரின் நியமனத்தை கடுமையாக எதிர்த்திருக்கின்றார். ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகள் பிரதமரின் நியமனத்தை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி இந்த நியமனத்தை எதிர்த்து இருக்கிறது. எனவே அக்கட்சியின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியாகின்றது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 11 கட்சிகள் அல்லது சுயாதீன அணிகள் என்ன செய்யப் போகின்றன என்பதும் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.

மைத்திரிபால சிறிசேன விமல் வீரவன்ச மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட தலைவர்களின் கீழ் தற்போது சுயாதீன அணியில் 53 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் நிலைமை நெருக்கடியாகும். எனவே அவர்களின் தீர்மானமும் இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. இந்த நெருக்கடியான நேரத்தில் தமக்கு சகல பக்கத்தில் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கின்றார்.

எப்படியிருப்பினும் மிக விரைவிலேயே பிரதமருக்கு எதிராக ஒரு பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.

டொலர் நெருக்கடி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் இரண்டாவது மிகப்பெரிய சவாலாக இந்த டொலர் நெருக்கடி, பொருளாதார பிரச்சினை காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய மிகப்பெரிய ஒரு சவால் காணப்படுகிறது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு என்பன மக்களை வாட்டி வதைக்கின்றன. எரிவாயு தட்டுப்பாடு எரிவாயு விலை அதிகரிப்பு மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. அதேபோன்று நீண்ட நேர மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கின்றது. மக்களின் வருமானம் குறைவடைந்திருப்பதுடன் தொழில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் என்பதனை பணவீக்கத்தின் அளவைக்கொண்டு புரிந்துகொள்ளலாம். இலங்கையை மீண்டும் மூன்று வேளை உணவு உண்ணும் நாடாக மாற்றுவேன் என்று பிரதமர் ரணில குறிப்பிட்டிருந்தார். அதனூடாக மக்கள் தற்போது எந்தளவு தூரம் பொருளாதார சுமையை நெருக்கடியை எதிர் கொண்டு இருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அதனால் இந்த டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிக முக்கியமானதாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த ஆழமான அறிவையும் அனுபவத்தையும் கொண்டவர் என்பது சகலருக்கும் தெரியும். எனவே அவர் எவ்வாறு அவற்றை அணுகுவார் என்பது முக்கியமாகும். ஏற்கனவே இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை 3 தொடக்கம் 4 பில்லியன் கடன் உதவியை கோரியுள்ளது. அதனை பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் கொள்கை அளவில் இணங்கியுள்ளது. ஆனால் அதற்கு கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மாதங்கள் எடுக்கும். மறுபுறம் இலங்கையானது இந்தியா சீனா ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கடன் உதவிகளை கோரியுள்ளன.

பிரதமர் பதவியேற்றதும் இந்தியாவும் அமெரிக்காவும் உடனடியாக அவருடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவோம் என்றும் தெரிவித்திருக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலாவது விஜயமாக இந்தியாவுக்கு செல்லவிருக்கிறார். அவர் இந்திய பிரதமரை சந்தித்து விரைவாக இலங்கைக்கு கடன் உதவிகளை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவும் இலங்கைக்கு கடன் கடன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கவே இந்தியா 2,4 பில்லியன் உதவிகளை வழங்குகிறது. அதேபோன்று இலங்கை ஜப்பானிடம் உதவி கோரி இருக்கின்றது.

அடுத்து வரும் நாட்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் டொலர்கள் கூட இலங்கையின் கைவசம் இல்லை. எனவே உடனடியாக 500 மில்லியன் டொலர்களை பெறவேண்டிய தேவை ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றது. என்ன செய்யப் போகிறார் என்பதை இந்த விடயத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.

இந்த பின்னணியில் இரண்டு மிக முக்கியமான சவால்களை ரணில் விக்கிரமசிங்க எதிர்கொண்டிருக்கிறார். அந்த சவால்களை அவர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பது மிக முக்கியமானதாகவும் தீர்க்கமானதாகவும் காணப்படுகின்றது. அவர் எவ்வாறு இந்த செயற்பாடுகளை மேற்கொள்வார் என்பதை சகலரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் நிவாரணங்களையும் பொருளாதார நிம்மதியையும் எதிர்பார்க்கின்றனர். பொருளாதார ரீதியில் மக்கள் மூச்சு விடுவதற்கான அவகாசத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்பார்க்கின்றனர் என்பதே யதார்த்தமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.