ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!! (கட்டுரை)
ஆறாவது முறையாக ரணில் விக்கிரமசிங்க, மே 12 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவற்றில், ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றழைக்கப்பட்ட 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், அவர் மூன்று முறை பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
முதன் முதலாக ரணில், 1993 ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டதை அடுத்து, அப்போதைய பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனை அடுத்து, 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். 2015ஆம் ஆண்டு ஜனவரியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமலேயே ரணில் மீண்டும் பிரதமரானார்.
2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டார். 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மைத்திரிபாலவால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அவராலேயே டிசெம்பர் மாதம் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். இப்போது ரணில், ஆறாவது முறையாகவே பிரதமர் கதிரையை அலங்கரிக்கிறார்.
இதில் விந்தை என்னவென்றால், எந்தவொரு முறையும் அவர், பிரதமர் பதவிக் காலம் பூரணமாக முடிவடையும் வரையும் பதவியில் நீடித்திருக்கவில்லை என்பதாகும்.
தற்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதாரம், அரசியல் சார்ந்த பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே, ரணிலை இப்போது பிரதமராக, ஜனாதிபதி கோட்டாபய நியமித்துள்ளார். அந்த நோக்கம், எவ்வளவு தூரத்துக்கு நிறைவேறும் என்பது இப்போதே கூற முடியாது. அதேவேளை, இந்த நியமனம் அரசியல் நெருக்கடியை மேலும் சிக்கலாக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, அரசாங்கத்துக்கு எதிராக நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி, காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டு தொடரும் ஆர்ப்பாட்டமே, அவற்றின் மையப் போராட்டமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கிடையே ஜனாதிபதி பதவி விலகத் தேவையில்லை; தற்காலிக சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும் என மைத்திரிபால தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஆளும் கட்சியிலிருந்து விலகியிருக்கும் 10 சிறிய கட்சிகளும் கோருகின்றன. தமக்கு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையாகவே இது தெரிகிறது.
ஏனெனில், நாட்டில் தற்போதைய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், ஜனாதிபதியின் தூரநோக்கற்ற நடவடிக்கைகளே என்பது தெளிவாக இருக்கும் நிலையில், ஜனாதிபதி அவ்வாறே இருக்க சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை நியமிக்க வேண்டும் என்பது, தமக்கும் அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து, தமக்குள்ள மக்கள் ஆதரவைக் காட்டி, அத்தோடு அரச எதிர்ப்பையும் அடக்கி, தமது பதவியை காத்துக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டார்.
அதன் பிரகாரம், மே மாதம் ஒன்பதாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ, ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களை, தமது உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு அழைத்து, அவர்கள் மூலம் தமக்கு ஆதரவைத் தெரிவிக்கச் செய்து, பின்னர் காலி முகத்திடலில் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டவும் அவர்களை ஏவினார்.
ஆனால், அவர் போட்ட கணக்கு பிழையாகிவிட்டது. ஒரு மாத காலமாக மிகவும் சாத்வீகமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த ஆரப்பாட்டக்காரர்கள், உண்மையிலேயே பொது மக்களின் வேதனையின் வெளிப்பாடாகவே அமைந்து இருந்தனர்.
எனவே, தொடர்ந்து நாளாந்தம் வந்த இந்த ஆரப்பாட்டச் செய்திகள் காரணமாக, மக்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஒருவித ஆன்மிக பிணைப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் தாக்குதல் பற்றிய செய்தி, ஒரு சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக, நாடு முழுவதிலும் பரவியது. மக்கள் கொதித்தெழுந்தனர். பிரதமர் மஹிந்த, பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, உயிரைப் பாதுகாத்துக் கொள்ள திருகோணமலை கடற்படைத் தளத்தில் பதுங்க வேண்டியேற்பட்டது.
இதனால், அரசாங்கம் மேலும் நெருக்கடியை எதிர்நோக்கியது. பிரதமர் பதவி விலகியதை அடுத்து, அமைச்சரவை தாமாகவே கலைந்துவிடுகிறது. இந்த நிலையில், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமை உருவாகியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழியான, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி பெறுவதற்கும் இது தடையாக அமைந்துவிட்டது. ஏனெனில், அந்த உதவி பெறுவதென்றால், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து இருந்தது.
எனவே, எவரையாவது பிரதமராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டு இருந்தது. அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அணுகினார். நாட்டை பொறுப்பேற்க, தாமும் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறிய போதிலும், அதற்காக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையில், அக்கட்சி உறுதியாக இருந்தது. அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியை ஜனாதிபதி அணுகவில்லை.
சஜித், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை ஆரம்பத்தில் விதித்த போதிலும், ரணில் பிரதமராக நியமிக்கப்படப் போவதாகத் தெரியவந்தவுடன், அந்த நிபந்தனையை சற்றுத் தளர்த்த முன்வந்தார். ஆனால், அப்போது ரணிலை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி இறுதி முடிவை எடுத்திருந்தார்.
உண்மையிலேயே, ஜனாதிபதி ரணிலையே மிகவும் விரும்பி இருப்பார். ஏனெனில், மார்ச் மாதம் ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் இருந்தே, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போல்தான், ரணில் நடந்து கொண்டார்.ஜனாதிபதி
வெளியேற வேண்டும் என்ற ஏனைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, ரணில் முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகளில் இருந்து, பிரதமர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதையே ஜனாதிபதி விரும்பினார். அதன் மூலம், இது புதிய அரசாங்கம் என்றதொரு தோற்றத்தைக் காட்டி, மக்களின் எதிர்ப்பை குறைப்பதே அவரது நோக்கமாகியது.
அதேவேளை, பொருளியல் சார்ந்த விடயங்களை விளக்குவதில், ரணில் திறமை காட்டி வந்தார். எனவே, ரணில் பிரதமரானால் நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்று சிலர் நினைத்தனர்; ஜனாதிபதியும் அவ்வாறே நினைத்திருக்கலாம்.
ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என்று பலர் அவரை விமர்சிக்கின்றனர். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமரான போதும், அவருக்கு அந்தப் பெரும்பான்மை இருக்கவில்லை. இப்போது, சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்களும் மக்கள் விடுதலை முன்னணியும், அன்று அதனை எதிர்க்கவில்லை.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரணிலை, மைத்திரிபால பதவி நீக்கம் செய்து, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த போது, மஹிந்தவுக்கும் அந்தப் பெரும்பான்மை இருக்கவில்லை. அப்போது, மஹிந்தவின் ஆதரவாளர்கள் அதனை எதிர்க்கவில்லை.
ரணில் பிரதமராகியதற்கு மறுநாளிலும் அதற்கு அடுத்த நாளிலும், டொலருக்கான ரூபாயின் பெறுமதி சுமார் 10 ரூபாயால் குறைந்தது. அதற்காக அவர் எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்ய அவருக்கு நேரம் இருக்கவும் இல்லை. டொலரின் பெறுமதியை அவ்வாறு வித்தைகளால் குறைக்கவும் முடியாது. அது, மத்திய வங்கி எடுத்த சில தற்காலிக் நடவடிக்கைகளின் விளைவாகும். எனினும், ரணிலே அதற்குக் காரணம் என சில ஐ.தே.க தலைவர்கள் கூறினர். இது வழமையான ஏமாற்றுக் கதையாகும்.
சர்வதேச நாணய நிதியத்திடமும் சில வெளிநாடுகளிடமும் நிதி உதவி பெறுவதையும் இலங்கையின் கடன் பழுவைக் குறைக்குமாறும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை ஒத்திப் போடுமாறும் வெளிநாடுகளிடம் கோருவதைத் தவிர, ரணிலிடமும் தற்போதைய பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நடவடிக்கைகள், மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் அப்போது இருந்த நிதி அமைச்சர் அலி சப்ரியும் ஆரம்பித்தவையாகும். தீர்வுக்கு முன்னர், மக்கள் மேலும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அலி சப்ரி கூறியதையே ரணிலும் கூறுகிறார்.
எவ்வாறாயினும், எல்லோரும் பின்வாங்கும் நிலையில் பிரதமர் பதவியை ரணில் ஏற்றதைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், இந்த வாரம், புதிய பிரதமர் ஒருவருடன் புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்காவிட்டால், தாமும் இராஜினாமாச் செய்வதாக மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்து இருந்தார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், நாடு மேலும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும். ரணிலின் நியமனம், ‘கோட்டா வெளியேறு’ என்று இளைஞர்களும் எதிர்க்கட்சிகளும் நடத்தும் போராட்டத்தை சற்று மழுங்கடித்தாலும், மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளின் நிலையிலிருந்து பார்த்தால், ரணிலின் முடிவைக் குறைகூற முடியாது.