;
Athirady Tamil News

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சத்தில் இருந்து இலங்கை மீள எழுவது எப்படி? (கட்டுரை)

0

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்”

——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

தக்காளிப் பழம் 700 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஏனைய சகல மரக்கறிகளின் விலைகளும் முன்னெப்போதும் இல்லாதவாறு மூன்று இலக்கத்துக்கு அதிகரித்துள்ளன. இந்த விலை அதிகரிப்புக்கும் நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தான உணவுப் பஞ்சத்துக்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாடு தன்னிறைவு காண்பதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

“கோ கம” வீட்டுக்கு செல்லுங்கள் கோஷத்துக்கு நான் எதிரானவன் அல்ல. தனது கடமையில் இருந்து தவறியவர்கள் பெரும் ஊழலில் ஈடுபட்டு நாட்டை பொருளாதாரத்தை படு பாதாளத்துக்குள் தள்ளியவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆயினும் மரக்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்புக்கு காரணமானவர்கள் யார்? நிச்சயமாக இந்த நிலை ஏற்படுவதற்கு பசளைத் தட்டுப்பாடும் பீடைகொல்லி மருந்துகளையும் தடுத்து நிறுத்திய அரசாங்கமும் அதன் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஆனால் அரசாங்கமும் ஆட்சியாளர்களும் மட்டுமா இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் ? 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த எனது கிராமத்தின் அப்போதைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு பார்க்கிறேன்.

அதிகாலையில் எழுந்து துலா மிதித்து சூரிய உதயத்துக்கு முன்னரே தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கடின உழைப்பினால் “வரப்புயர” வாழ்ந்த சுறுசுறுப்பான ஆண்கள். வீடுகளில் சமைக்கும் நேரம் போக ஏனைய நேரங்களில் பனையோலைக் கைத்தொழில், ஆடு, மாடு கோழி வளர்ப்பு என்று வருமானத்தை பெருக்கி சுறுசுறுப்பான பெண்களுடன் உணவில் தன்னிறைவு கண்ட குடும்பங்கள்.

இன்றைய நிலை என்ன?

வெளிநாட்டு வருமானத்தில் தங்கியிருக்கும் சோம்பேறிக் குடும்பங்கள். குடித்தொகை அதிகரித்தாலும் பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக பயிரிடாமல் இருக்கிறது. பெண்கள் சமைக்காமல் வாங்கிச் சாப்பிடும் குடும்பங்களுடன், வருவாயை பெருக்கும் தொழில்களில் ஈடுபடாமல் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். மீதி நேரத்துக்கு தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் அரட்டை அடித்துக் கொண்டு பெருமளவு பணத்தை இந்த வசதிகளுக்கு வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

உள்நாட்டு யுத்த காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார உணவுத் தடைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தது. வீட்டுத்தோட்டங்களும் மரவள்ளி முதலான பயிர் செய்கையும் ஊக்கப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அரசங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட தற்போதைய நிலையை விட மோசமான உணவு எரிபொருள் மருந்து தடைகளையும் வெற்றிகரமாக அப்போதைய தமிழ் மக்கள் எதிர்கொண்டார்கள். முழுமையான மின்சாரத் தடைக் காலத்தில் எனது சக மாணவர்கள் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த தெருவோர மின்விளக்குகளில் படித்து பிற்காலத்தில் மருத்துவ நிபுணர்கள் ஆனார்கள். ஆனால் இன்றைய தலைமுறை வெளிநாட்டு வருமானத்தில் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டார்கள். வரப்புயர என்று விவசாயத்திலும் ஏனைய சிறு தொழில்களில் ஈடுபடுவதும் கௌரவக் குறைவாக உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு குடும்பமும் எளிதாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடக்கூடிய தக்காளி போன்ற மரக்கறிகளை மறந்து போய்விட்டதால் அவற்றின் விலை அதிகரித்து இருக்கிறது என்பதை “கோ கம” போராட்டக்காரர்களுடன் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் “வரப்புயர ” உணவில் தன்னிறைவு காணும் எண்ணமும் முயற்சியும் வரவேண்டும். அவ்வாறான மாற்றம் வீடுகள் தோறும் ஏற்படும் போது மாத்திரமே ஒளவையார் கூறிய நாடு தன்னிறைவு காணும் நிலை ஏற்படும்.

மறுபுறம் வரலாற்றில் இருந்து ஆட்சியாளர்களும் அரசாங்கமும் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் தற்போதைய இலங்கையை விட மோசமான பணவீக்கத்தினாலும் சரிவடைந்த பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெகுவிரைவிலேயே அது அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளை விட விரைவாக பொருளாதாரத்தில் முன்னேறியது (படம் இணைக்கப்பட்டுள்ளது ). ஜப்பான் விரைவாக முன்னேறியதற்கு பொருளாதார ஆய்வாளர்கள் இரண்டு முக்கிய காரணங்களை தெரிவிக்கின்றனர்.

1. போருக்காக பயன்படுத்திய வளங்களை அதை நிறுத்திவிட்டு நாட்டின் அபிவிருத்திக்காக திசை திருப்பினார்கள்
2. அமெரிக்க நிதிஉதவி உட்பட வெளிநாட்டு உதவிகளில் தங்கி இருக்காமல் உள்ளூர் வளங்களின் மூலமாக நாட்டை மேம்படுத்தினார்கள்.

ஆனால் இலங்கையை எடுத்து நோக்கினால் இதற்கு நேர்மாறான கொள்கைகளை வகுத்து செயல்பட்டிருந்தார்கள்

1. 2009 போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக ஆயுதப்படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தார்கள்.
2. உள்நாட்டு உற்பத்திகளை பெருக்காமல் வெளிநாட்டு கடன்களை அதிகமாக வாங்கினார்கள்.

தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் இன்னமும் இந்த இரண்டு தவறுகளையும் நிவிர்த்திக்காமல் மேலும் வெளிநாட்டுக் கடன்களை வாங்குவதற்குரிய உபாயங்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் “கோ கம” போராட்டக் காரர்களின் ஆட்சி மாற்றத்துக்கான கோரிக்கையே நாட்டை முன்னேற்றுவதற்குரிய ஒரே வழியாக உள்ளது.

நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
24.5.2022

You might also like

Leave A Reply

Your email address will not be published.