;
Athirady Tamil News

10 நாள்களுக்கு மௌனம் காப்போம் !! (கட்டுரை)

0

ஒரு கத்தியால் செய்யமுடியாத மாற்றத்தை, ஒரு பேனா செய்துவிடும். அதேபோல, புள்ளடியால் விட்ட தவறை, போராட்டம் திருத்திவிடும். மக்கள் போராட்டத்துக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதா என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ, மே9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தில் கையொப்பமிடும்போது உணர்ந்திருப்பார்.

போராட்டத்தின் பலத்தைக் கணக்கிலெடுக்காது விடுவோருக்கு, பிரதமரின் இராஜினாமா ஒரு படிப்பினையாகும். நமது நாட்டைப் பொறுத்தவரையில், எங்கு பார்த்தாலும் உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு, பல்வேறு அசௌகரியங்களுக்குப் பலரும் முகங்கொடுக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டால், அமரர் ஊர்திகூட, இடுகாட்டை நோக்கிப் பயணிக்கமுடியாத அவல நிலைமையொன்று, கொழும்பில் ஏற்பட்டிருந்தது. அந்தளவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை சுமக்கவேண்டி இருக்கின்றது. ஆனால், போராட்டங்கள் ஓயவில்லை.

கொழும்பில் சில முக்கியமான இடங்களை மையப்படுத்தி, பேரணிகள், போராட்டங்கள், வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமாயின், அப்பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வீதிகளில் திருப்பிவிடப்படும்.

இன்னும் சில இடங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, நோயாளர் காவு வண்டிக்கு (அம்புலன்ஸ்) இடமளிக்கப்படுவதில்லை; இது தவறானது. இதேபோல, நோயாளர் காவு வண்டிக்கு இடமளிக்கும் போது, அதனோடு புகுந்து செல்லவும் சில சாரதிகள் முயற்சிப்பர்; அதுவும் தவறாகும்.

நாடளாவிய ரீதியில் உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளும் இன்று (23) ஆரம்பமாகின்றன. தங்களுடைய தடையை பேனாவைக் கொண்டு தாண்டவிருக்கின்றனர். அவர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், எதிர்வரும் 10 நாள்களுக்கு எவ்விதமான போராட்டங்களையும் முன்னெடுக்காமல் விடுவதே சிறந்த பண்பாகும்.

கொரோனாவுக்கு பின்னர், ஒவ்வொரு மாணவனும் கல்வியில் செலுத்தும் கவனம் சிதறியிருக்கிறது. எரிபொருள், விலையேற்றம், மேலதிக வகுப்புகளுக்கு செல்வதில் முகங்கொடுத்திருந்த பொருளாதார பிரச்சினை, மின்வெட்டு இப்படி ஒவ்வொன்றும் சா/த பரீட்சார்த்திகளை ஏதோவொரு வகையில் பாதித்திருக்கும்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில், பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் மனதளவில் சோர்வடைந்து விடாதவகையில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். பரீட்சைக்குச் சுணங்கிவிட்டால் ஏற்படும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு, முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதான நகரங்களை விடவும், பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து பரீட்சை எழுதுவதற்காக, நகரங்களில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு வரும் பரீட்சார்த்திகளுக்கு, உரிய போக்குவரத்து சேவைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதனூடாகவே அவர்களால், வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லமுடியும்.
ஆகையால், எதிர்வரும் பத்து நாள்களுக்கு வழியை மறித்து, பரீட்சார்த்திகளின் வாழ்வில் விளையாடி விடாது, வழிவிட்டு, வழி சமைத்துவிடவேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்தாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.