;
Athirady Tamil News

‘கறைபடிந்த கரிநாள்’ !! (கட்டுரை)

0

ஆட்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் மக்களை முட்டாள்களாகவே நினைக்கின்றனர். ஆனால், முட்டாள் தினத்துக்கு முதல்நாள் இரவே, ‘முட்டாள்கள் நாங்கள் இல்லை’ என்பதை மக்கள் நிரூபித்துவிட்டனர். அன்று இரும்பு கரத்தை கொண்டு அடக்கியதால், இலங்கை வர​லாற்றிலேயே 2022 மார்ச் 31 கறைபடிந்த கரிநாளாகிவிட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வீட்டுக் கதவை தட்டுமளவுக்கு, முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கவில்லை. நுகேகொடை, மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டுக்கதவு தட்டப்பட்டுவிட்டது. ஆக, மக்களின் சீற்றம் கொஞ்சமேனும் தணியவில்லை.

ஒரு சம்பவத்துக்குப் பின்னர் ஜோடிக்கப்பட்ட ​பின்னணியை கூறுவது இலகு; அதுதான், ‘அடிப்படைவாதி குழு’ என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நாட்டில் இவ்வாறான குழு இருப்பது தொடர்பில் அரச புலனாய்வு துறைக்குத் தெரியாமல் போனது ஏன்?

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர்களா? தன் இயலாமையை ‘அடிப்படைவாத குழு’ என்பதற்குள் அரசாங்கம் மூடிமறைக்க முயற்சிக்கின்றது. அதுதான் முட்டாள்தனமான முடிவாகும்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்து, மிரிஹானவில் நடத்தப்பட்ட போராட்டம் முதலாவது அல்ல; இறுதியானதாகவும் இருக்கமுடியாது. ஏனெனில், மக்களின் இரத்தத்தில், சமூக வலைத்தளங்கள் கலந்துவிட்டன.

​சீற்றத்தில் இருந்த போராட்டக்காரர்கள் சீண்டிப்பார்க்கப்பட்டனர். இதனால், தாக்குதல், பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், ஊடகவியலாளர்கள், படைத்தரப்பினர், பொதுமக்களென 37 பேர் காயமடைந்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

‘அடிப்படைவாத குழு’ என அரசாங்கமே அறிவித்துவிட்டமையால், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய, ​பொலிஸாருக்கு வழிகாட்டப்பட்டுவிட்டது. ஆக, நன்கு திட்டமிட்டு ​​ஜோடிக்கப்பட்டுள்ளது. இது, எதிர்வரும் நாள்களில் நடத்தப்படும் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சியாகவும் கருதலாம்.

மிரிஹானையில் ஒன்றுதிரண்டவர்கள், பஸ்களில் குழு, குழுவாக வரவில்லை. அப்படியாயின், இலக்க தகடில்லாத பஸ்ஸில் வந்திறங்கியவர்கள் யார்? அந்த பஸ்ஸூக்கு தீ மூட்டிவிட்டு தப்பியவர் யார்? இதன் பின்னணியில் சூழ்ச்சியாளர்களின் கை ஓங்கியிருந்திருக்கிறது என்பதற்கான சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

நாட்டில் இராப்பகலாக, மின்வெட்டு அமல்படுத்தப்படுகின்றது. அப்படியிருந்தும், ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டுப்பக்கத்தில் மின்வெட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், போராட்ட க்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், திடீரென மின்வெட்டு அமலானது எப்படி? இதுவும் சந்தேகமே.

அரசாங்கத்தின் மீது மக்கள் சீற்றத்துடன் இருகின்றனர். வாழ்க்கையைக் கொண்டு நடத்தமுடியாமையால் வீதியில் இறங்கியுள்ளனர். அவ்வாறானவர்கள் இரும்பு கரம்கொண்டு அடக்கினால், மீண்டும், மீண்டும் கறைபடிந்துவிடும் என்பதை நினைவில் கொள்க!

You might also like

Leave A Reply

Your email address will not be published.