;
Athirady Tamil News

‘பெரியண்ணா’வின் பெரியமனம் !! (கட்டுரை)

0

எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமை​யே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்தும் நிலைமை​ ஏற்பட்டுள்ளது. சில நாடுகள் குறைந்த வட்டிவீதத்தில் கடனை வழங்குகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்காகவும் எரிபொருட்களின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகவும் இந்தியா கடன் வழங்கியுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக, இன்னொரு படிசென்று, மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசாங்கம் கடனாகக் கேட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை, வட்டியுடன் மீளச் செலுத்துவதற்காக, அதனிடமே கடன் கேட்டிருக்கிறது அரசாங்கம். ஆக, கடன் கேட்டு, கையேந்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பங்களாதேஷிடம் 250 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

இலங்கை மத்திய வங்கி, தான் நினைத்தாற் போல, பணத்தாள்களை அச்சடித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த திங்கட்கிழமை (28) மட்டும் 27.28 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தாள்களை அச்சடித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் தினமும் சராசரியாக 10.2 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியால் மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூ.1,000, ரூ.2,000 பெறுமதியான நாணயத்தாள்கள் மீண்டும் புழகத்தில் விடப்பட்டுள்ளன. இதற்கிடையே, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சிங்கள-தமிழ் புத்தாண்டுக்குப் முன்னர், நிவாரணப் பொதி அடங்கிய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுமென மார்ச் 23ஆம் திகதி அறிவிப்பொன்று விடுக்கப்பட்டது. இதற்கிடையே 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென்ற அறிவிப்பால், ‘நிவாரண பட்ஜெட்’யை எதிர்பார்க்க முடியாது.

எந்தவிதமான வருமான அதிகரிப்பும் இல்லாமையால், குடும்பச் சுமை கூடியுள்ளது. அதனை தாங்கிக்கொள்ளும் சக்தியை குடும்பங்கள் இழந்து நின்கின்றன. செலவை குறைப்பதற்கு வழியே இன்றி விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

இதற்கிடையே, சுகாதாரம் தொடர்பிலான 38 பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இது ‘மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதை’யாகவே இருக்கிறது. யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிறுத்தப்பட்டது. பேராதனை போத​னா வைத்தியாலையில் அவசர சத்திர சிகிச்சையைத் தவிர, ஏற்கெனவே திட்டமிட்ட சகல சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படுமென நிர்வாகம் அறிவித்திருந்தது. மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாகவே, நிர்வாகம் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்திருந்தது.

அதுதொடர்பிலான செய்தியை பார்த்த, இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உயர்ஸ்தானிகர் பாக்லேயுடன் தொடர்புகொண்டு, தேவையான வசதிகளை​ செய்துகொடுக்குமாறு பணித்திருந்தார். அதன்பின்னர், சத்திரசிகிச்சைகள் வழமைக்குத் திரும்பின.

இந்தியாவை, இலங்கையின் ‘பெரியண்ணா’ என்றே அழைப்பர். ஆபத்தான எல்லா நேரங்களிலும் ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டும் இந்தியா, மருந்துப்பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, பல உயிர்களைக் காப்பாற்றி, மனம் நெகிழச்செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.