புலிப் பூச்சாண்டியை இனிமேலும் காட்டமுடியாது !! (கட்டுரை)
அரசியல் ஒரு சாக்கடை என்பர். அதில் எல்லாமே கலந்துதான் இருக்கும். மக்களை கவர்ந்திழுக்கும் அறிவிப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. இன,மத ரீதியிலான இருப்புக்கு பங்கம் ஏற்படுமென்ற அச்சமூட்டலுக்கு குறைவே இருக்காது. பெயருக்காக தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும். அது தெளிவுப்படுத்தப்படாது. மாற்று அணியினர் விமர்ச்சித்தால்தான் உண்டு.
யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், பல வருடங்களாக “புலிப்பூச்சாண்டி” காண்பிக்கப்பட்டது. தேர்தல் காலமெனில், வடக்கு, கிழக்கில் ஆயுதங்கள் அள்ளப்படும். சந்தேகத்தின் பேரில், பெரும் எண்ணிக்கையிலானோர் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்படுவர்.
அந்தப் பூச்சாண்டியை தொடர்ந்தும் காண்பிக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், “தேசிய பாதுகாப்பு” எனும் போர்வைக்குள் சிக்கி, முஸ்லிம்களை மனங்களை நோகடித்து, பெரும்பான்மை இனத்தவரின் கர்ப்பைக்குள் கத்தரியை விட்டு குடைந்து எடுத்துவிட்டனர்.
இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிட்டது என்ற பிரசாரத்தால், வாக்குகளை வாரிவழங்கிவிட்டனர். முஸ்லிம்கள் மீதான சந்தேக பார்வை தொடர்ந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட பலர், நீதிமன்றங்களின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான தமது போக்கு, இன்னுமே கைவிடபடவில்லை என்பதை ஞாபகமூட்டுவதற்காக, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த முஸ்லிம் தலைவர்களில் சிலர், அவ்வப்போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில்தான், ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீதான விமர்சனம் எழத்தொடங்கிவிட்டது. புலிகளால் முடியாததை. புலம்பெயர்ந்தவர்களின் டொலரின் ஊடாக பெற முயல்கின்றனர் என புலம்பத் தொடங்கிவிட்டனர்.
புலம்பலுக்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, “புலிகளை வைத்து எவ்வளவு காலத்துக்கு அரசியல் செய்வீர்கள்” என விமல், கம்மன்பில ஆகியோரிடம் கேட்டுள்ளார். ஆக, அரசாங்கத்தில் இருந்து இவ்விருவரும் விலகப்படாமல், இன்றேல் விலகாமல் இருந்திருந்தால், கூட்டமைப்புடனான பேச்சுக்கு வாய்ப்பே இருந்திருக்காது.
கூட்டமைப்புடன் பேசினால், புலிப்பட்டம் சூட்டிவிடுவர், இது ஆப்பாகிவிடக்கூடுமென, விமலும் கம்மன்பிலவும் அறிவுரை கூறியிருந்தாலும் மறுப்பதற்கில்லை.
ஏற்கெனவே, குறிப்பிட்டது போல, வாக்காளர்கள் எதனையும் இலகுவில் மறந்துவிடுவார்கள், அதனால்தான், மனங்களை கவரும் அறிவிப்புகளுக்கு மயங்கி. அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சியை மாற்றிவிடுகின்றனர். அத்துடன், இனவாதம் கக்குவோருக்கும் அதுவொரு வாய்ப்பாகவே அமைந்துவிடுகின்றது.
புலிப் பூச்சாண்டியை இனியும் காண்பிக்க முடியாது என்பதனால், சகல இனங்களையும் அரவணைத்துக்கொண்டு, புரையோடிபோயிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை கண்டு, நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இறங்குவதே காலத்தின் தேவையாகும்.