;
Athirady Tamil News

மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? (கட்டுரை)

0

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல!
இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்‌ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.

2020 பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷர்கள் பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார்கள். அந்த நிலையில், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளாகக் கருதக்கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றின் மொத்த நாடாளுமன்றப் பலம் 13 ஆசனங்கள் மட்டுமே!

இதை, அன்று ராஜபக்‌ஷர்கள் என்ற மாபெரும் ‘கோலியாத்’துக்கு முன்னால்,சின்னப்பெடியனான ‘டேவிட்’டைப் போல, தமிழ்த் தேசியம் நின்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், இங்கு, ‘டேவிட்’டின் பிரச்சினை, கோலியாத்தை விடச் சிறியதாகவும் பலமற்றும் இருப்பது மட்டுமல்ல; இருக்கும் பலத்தைக்கூட ஒன்றுபடுத்தி, ‘டேவிட்’டால் இயங்க முடியாமல் இருப்பதுதான்.

த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.தே.கூ என்று பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளும் அவற்றின் நட்பு சக்திகளாகக் கருதக் கூடிய கட்சிகளும், ஒரு தளத்தில் இயங்கினால் மட்டுமே, ‘கோலியாத்’தை எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி, ‘டேவிட்’ சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், இன்று ராஜபக்‌ஷர்கள் எனும் ‘கோலியாத்’ நிலைதடுமாறி முழங்காலில் நின்றுகொண்டிருக்கும் போது கூட, ‘தமிழ்த் தேசியம்’ எனும் ‘டேவிட்’ செய்வதறியாது திணறிக் கொண்டுதான் நிற்கிறான். இதற்குக் காரணம், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையின்மை மட்டுமல்ல, இந்தக் கட்சிகளில் பலவற்றுக்கு இடையே தமிழ்த் தேசியம் பற்றிய புரிதலும், பிடிப்பும் மறக்கப்பட்டுவிட்டதே ஆகும். இது பற்றி ஆராய முன்பு, ‘தமிழ்த் தேசியம்’ என்றால் என்ன என்ற புரிதலோடு தொடங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.

‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள்.

‘தேசிய பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை’ என்ற ராம்சே மயரின் கருத்துப்படி, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தின் காரணமாக, பெரும்பான்மை இன-மதத் தேசியவாதத்தாலும் அதன்பாலான இனவெறியாலும், அடக்குமுறைக்கு ஆளான ‘தமிழர்’கள், ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஒன்றை அரசியல் அடையாளத்தின் கீழ் ஐக்கியமானார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது, சிங்கள-பௌத்த பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த எதிர்வினைப் பாதை. பெரும்பான்மை இன-மத தேசிய எழுச்சியை, அதற்கு எதிரானதொரு தற்பாதுகாப்புத் தேசிய எழுச்சியைத் தவிர, தமிழ் மக்கள் வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டிருக்க முடியும்; வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்.

1976இல் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வரை, தமிழ்த் தலைமைகள் சிவில் தேச அடிப்படைகளுக்குள், சிறுபான்மைப் பாதுகாப்புக்காகப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வையே கோரியிருந்தார்கள். ஆகவே, தமிழ்த் தேசியம், அதன் பாலான தனியரசு என்பவை, மற்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி காணாததாலேயேதான், தமிழ்த் தலைமைகளால் முழுமையாகச் சுவீகரிக்கப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

இன்று, தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ‘தாயகம்’, ‘தேசியம்’, ‘சுயநிர்ணயம்’ என்ற மூன்றையும் முன்னிறுத்தி நிற்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் எல்லாம், இதையே முன்னிறுத்துகின்றன; இதைச் சொல்லியே வாக்கு கேட்கின்றன. நிற்க!
இன்றைய தமிழ்த் தேசிய கட்சிகளும் அதன் அரசியல்வாதிகளும், இதே தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தித்தான் தமிழ் மக்களிடம், குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் வாக்கு வேட்டை நடத்தி, அம்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள், தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்க என்ன செய்கிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?
இன்று, தமிழ்த் தேசிய கட்சிகளில் இருந்து கொண்டு, தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப்பெற்று, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வழங்கிய மக்கள் ஆணையால், பதவிகளை வகித்துக்கொண்டு, தமிழ்த் தேசியத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்ன நியாயம்?

ஒருவர், சிவில்-தேசத்தை விரும்பும், தாராளவாதியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது, அவரவர் விருப்பம், நம்பிக்கை, கொள்கை என்பவற்றின் பாற்பட்டது. ஆனால், சிவில் தேசத்தை விரும்பும் தாராளவாதக் கொள்கையுடையோர், அந்தக் கொள்கையை முன்னிறுத்தி மக்களாணையைப் பெற்றுவிட்டு, அந்தக் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்வதில் ஒரு நேர்மை இருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு ‘தமிழ்த் தேசியம்’; தேர்தலில் வென்ற பின்னர், ‘சிவில் தேச தாராளவாதம்’ என்று இருப்பது, மக்களை ஏமாற்றும் செயலாகும்.

நீங்கள் இலங்கையை ஒரு சிவில் தேசமாகக் கட்டமைக்க விரும்புகிறீர்கள் என்றால், தாராளவாதக் கொள்கையை முன்னிறுத்த விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்தலின் போது, அதைச் சொல்லி, அந்தக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அதுதான் நியாயம்; அதுதான் தர்மம்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சியில், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, அதன்பாலான அரசியல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கு மக்கள் வழங்கிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, பதவி கிடைத்ததும், சிவில் தேசிய தாராளவாதத்தை பரப்புரை செய்வது, வாக்களித்த மக்களை ஏமாற்றும் வேலை!

இதில் இன்னொரு சூழ்ச்சி தங்கியிருக்கிறது. ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவை, சிலர் முன்வைத்தே வருகிறார்கள். “நாம் யாவரும் இலங்கையர்”, “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” போன்ற, பகட்டாரவாரப் பேச்சுகள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. குறிப்பாக, மீளிணக்கப்பாடு தொடர்பான தளங்களில், இந்தப் பேச்சு அதிகம் ஒலிக்கும்.

‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவொன்றும் புதியதல்ல. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இலங்கையில் இருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இதைச் செய்வது நல்ல விடயம். இதைச் செய்ய விரும்புகிறவர்கள், மக்கள் முன்னிலையில் இந்தக் கருத்துகளை முன்வைத்து, தேர்தலில் நிற்க வேண்டும். தம்மை அவர்கள் சிவில் தேசிய கூட்டமைப்பு, அல்லது நாம் அனைவரும் இலங்கையர் முன்னணி என எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இந்தக் கொள்கையை முன்னிறுத்தி, அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால், தமது கொள்கைக்கான முறையான மக்களாணையோடு தமது, கருத்தை அவர்கள் முன்வைக்கலாம். இது வரவேற்கப்பட வேண்டியது. இதுதான் நேர்மையான செயல்.

ஆனால், மேற்சொன்னதை செய்வதை விட்டுவிட்டு, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்றுவிட்டு, பிறகு தமிழ்த் தேசியத்தை மறந்துவிடுவது நேர்மையற்ற செயல். இதைச் சிலர் ‘துரோகம்’ என்றும் விளிப்பார்கள்.

மறுபுறத்தில், தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழ் மக்களும், வாக்களிக்க முதல் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு வாக்களித்துவிட்டு, பிறகு அவர்கள் பதவி கிடைத்தபின் தமிழ்த் தேசியத்தை மறந்துவிட்டு செயற்படும்போது, அவர்களுக்கு ‘துரோகி’ முத்திரை குத்துவதில் அர்த்தமில்லை.

தமிழ்த் தேசியத்தின் பெயரால், வாக்கு வேட்டை நடத்திவிட்டு, பதவி கிடைத்த பின்னர், ஒரு சிலர் அமைதியாகத் தமது பதவிகளில் இருந்துகொள்ள, வேறு சிலர் இலங்கையின் தேசிய அரசியலில் தம்மைத் தாராளவாத ஜனநாயகவாதிகளாக நிலைநிறுத்துவதற்குப் பாடாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில், தமிழ்த் தேசியம்தான் மறக்கப்பட்டு விட்டது; இல்லை மறக்கடிக்கப்பட்டு விட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.