;
Athirady Tamil News

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை!! (கட்டுரை)

0

தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள், பொறுப்புக்கூற வேண்டியது இல்லையா?

இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம்? இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, நாம் பங்களிக்கின்றோமா? நமது பங்களிப்பு, மக்கள் நலநோக்கில் நெருக்கடியை தீர்ப்பதாக இருக்கிறதா, அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலமும், அமைதிகாத்து அங்கிகரிப்பதன் மூலமும் இந்நெருக்கடி தொடர வழிசெய்கிறதா?

இவை குறித்து, என்றாவது நாம் சிந்தித்து இருக்கிறோமா? எல்லாவற்றிலும் மேலாக, இந்த நெருக்கடி நாமே நமது தலையில் போட்டுக் கொண்டது என்ற உண்மை, எம்மில் எத்தனை பேருக்கு உறைத்திருக்கிறது?

இப்போது புதிதாகப் பாராளுமன்றம் வந்திருக்கின்ற தம்மிக பெரேரா மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி, ஒரு பொதுப்புத்தி மனநிலை கட்டமைக்கப்படுகிறது. அவர் ஒரு ‘வெற்றிகரமான வியாபாரி’; எனவே, அவரால் நாட்டை மீட்க இயலும் என்று பலர் சொல்கிறார்கள்.

ஏமாற்றாத, கொள்ளையடிக்காத, அரசியல்தரகு செய்யாத, மக்களைச் சுரண்டாத வெற்றிகரமான வியாபாரி என்று யாரும் கிடையாது. ஆனால், நவதாராளவாதச் சொல்லாடலில் இவை, ‘புத்திசாலித்தனம்’, ‘நெழிவுசுழிவுகளை அறிந்திருத்தல்’ என்றும் சொல்லப்படுகிறது.

ஏழை மக்களின் பசியை, குறுங்கடன் திட்டங்கள் மூலம் தீர்த்துவைத்தமைக்காக நோபல் பரிசுபெற்ற முஹமட் யூனிஸ், ஒரு கந்துவட்டிக்காரன் என்ற உண்மை சில ஆண்டுகளில் வெளியானது. இதே வகைப்பட்டதே, ‘வெற்றிகரமான வியாபாரி’ என்ற படிமம்.

சில காலத்துக்கு முன்னர், பசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சராவதற்கு தேசிய பட்டியல் ஊடாகப் பாராளுமன்றம் வந்தபோது, ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் உருவாக்கிய பொதுப்புத்தி மனநிலை, அவரை ஒரு பொருளாதார மீட்பராக முன்னிறுத்தியது.

இவ்வாறே, 2019ஆம் ஆண்டு நாட்டை மீட்பதற்கான வலுவான தலைவராக கோட்டாபய முன்னிறுத்தப்பட்டார். இவை இரண்டும், இலங்கையில் ஏற்படுத்திய பேரிடரர்களை நாமறிவோம். இவ்வாறு, தனிமனிதர்கள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் மனோபாவம், இலங்கை அரசியலுடன் பின்னிப் பிணைந்ததொன்று. அதன் அண்மைய உதாரணத்துக்கு ரணில் பிரதமரானவுடன், அவர் பொருளாதாரத்தை சீர்படுத்துவார் என்று சொல்லப்பட்ட கதைகளை நினைத்துப் பார்க்கலாம்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை அரசியல், தவிர்க்கவியலாமல் தனிநபர் வழிபாடுகளின் வழிப்பட்டதாகவே உருவானது. பின்கொலனிய இலங்கை அரசியலின் அடையாள உருவாக்கம், குடும்ப அரசியலாக அமைந்தபோதும் அதை உருமறைத்து, விக்கிரக வழிபாட்டு அரசியல் முன்னெழுந்தது.

டி.எஸ். சேனாநாயக்கவின் திடீர் மரணம், அவரைத் தேசபிதாவாக உருமாற்றவும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை, அவரை சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் நவீன தலைமகனாக உருவாக்கவும் உதவியது. இது காலப்போக்கில், இருபெரும் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அதன்வழிப்பட்ட குடும்ப அரசியலின் இருப்புக்கும் வழிகோலியது.

இதன் மறுகரையில், சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குப் போட்டியாக எழுந்த தமிழ்த் தேசியவாதமும், படித்த உயர்வர்க்க ஆங்கிலம் பேசும் சட்டம் தெரிந்த தலைமைகளையே உருவாக்கியது. பின்கொலனிய இலங்கையில் முனைப்படைந்த இரண்டு தேசியவாதங்களும், உயர்வர்க்க நலன்களை அடையாள அரசியலின் ஊடு தக்கவைத்தது. அதற்கு, அடித்தள மக்களிடம் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தி மனநிலை முக்கிய காரணமானது.

இந்த மனோநிலை, குறித்த குடும்பங்களையும் தலைவர்களையும் முன்னுதாரணமாகவும் நாயகர்களாகவும் முன்னிறுத்தியது. 1980கள் வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்த போக்கு, சமூகத்தில் அரசியல் மேலாண்மைக்கான அங்கிகாரமாக மாறியது. இதனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் அளவுகணக்கற்ற செல்வம் சேர்ப்பவர்களாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் மாறினார்கள்.

இதில் முதலாவது வெடிப்பை, ரணசிங்க பிரேமதாஸ ஏற்படுத்தினார். எந்தவோர் அரசியல் குடும்பத்தின் பிரதிநிதியாகவோ, உயரடுக்கைச் சேர்ந்தவராகவோ இராத அவர், அடித்தட்டு மக்களின் புதிய நாயகனாக உருவானார். இது சிங்கள உயர்வர்க்க அரசியலடுக்குகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ்த் தேசியவாதம் 1970களில் சந்தித்திருந்த நெருக்கடியும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் இயலாமையும், இளையோரின் உயிரோட்டமான அரசியல் எழுச்சியால், மோசமான பின்னடைவைச் சந்தித்தது. இளையோரின் அமைப்பாக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும், பாரம்பரிய தேசியவாதத் தலைமைகளின் விருப்புக்குரியதாக இருக்கவில்லை. 1980களில் விடுதலைப் புலிகளின் எழுச்சி, தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது.

இருதேசியவாதங்களிலும் 1980களில் ஏற்பட்ட வெடிப்புகள், பல வகைகளில் சாதாரண மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுகளாக இருந்தபோதும், அவை இன்னொரு வகையிலான விக்கிரக வழிபாட்டுக்கு வழிசெய்தன.
பிரேமதாஸவும் பிரபாகரனும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக மாறினார்கள். விமர்சனங்கள், கேள்விகள், எதிர்வினைகள் எதுவும் சகிக்கப்படவில்லை.

இனமுரண்பாடு கொடிய போராகிய நிலையில், வலிமையான தலைவரின் தேவையை சிங்களத் தேசியவாதம் தொடர்ந்து வலியுறுத்தி, ராஜபக்‌ஷவின் வருகையை உறுதிசெய்தது. இந்த விக்கிர உருவாக்கத்தின் ஆபத்துகளை, சிங்கள – தமிழ்த் தேசியவாதங்கள் அனுபவித்த போதும், அதிலிருந்து இன்றுவரை வெளியாக இயலவில்லை. அதன் தொடர்ச்சியே, கோட்டாபயவின் வருகையாகும்.

இலங்கைக்கு ஒரு சர்வாதிகாரியே தேவை; இலங்கை சமூகத்தை, ஒழுங்கமுடையதாக மாற்ற வேண்டும். அதற்கு, மக்களை ஒரு கட்டமைப்புடன் இயக்கக்கூடிய இராணுவத் தலைவரே பொருத்தமானவர் ஆகிய கோஷங்களுக்குக் கிடைத்த அங்கிகாரமே, கோட்டாபயவின் தேர்தல் வெற்றியாகும்.

இது, மஹிந்தவின் தொடர்ச்சியாக இருந்தபோதும், அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலாவது, தன்னை நேரடியாகவே சர்வாதிகாரி என அழைத்துக்கொண்ட ஒருவரை, தலைவராக இலங்கையர்கள் தெரிவு செய்தார்கள்.

இரண்டாவது, அரசியலுக்கு அப்பால் வல்லுனர்களின் மூலம், நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று முன்வைக்கப்பட்ட வாதத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.

இன்றைய நெருக்கடி, இவ்விரண்டின் தோல்வியையும் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. ஆனால், இது பொதுப்புத்தியில் எதுவித மாற்றத்தையும் உருவாக்கவில்லை. முழுமையான சர்வாதிகார நடைமுறையில், நாட்டைக் கட்டியெழுப்ப இயலாது என்ற உண்மை, இப்போது இலங்கையர்களுக்கு உறைத்துள்ளதா என்ற கேள்விக்கான பதிலை, அடுத்த தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கும்.
கோட்டாபயவும் அவரது ‘வியத்மக’ கும்பலும் முன்மொழிந்த வல்லுனர் அரசியல் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இல்லை. இவ்வரசியலின் தொடர்ச்சியே, தம்மிக பெரேராவின் வருகையும் அதைத்சூழும் ஆரவாரங்களும் ஆகும்.

கோட்டாபய முன்மொழிந்த ‘சர்வாதிகாரமும் வல்லுனர் அரசியலும்’ இரண்டு அடிப்படைகளில் கட்டியெழுப்பப்பட்டன. ஒன்று, இராணுவ மையச் சிந்தனைவாதம். இரண்டாவது, சிங்கள-பௌத்த பேரினவாதம். இந்த நெருக்கடி இவ்விரண்டிலும் எதுவித மாற்றத்தையும் செய்துவிடவில்லை. மாறாக, இவ்விரண்டும் தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியிலான பொதுப்புத்தி மனநிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது.

கடந்த கால் நூற்றாண்டுகால இலங்கை அரசியலில், ‘வலுவான தலைவன்’ என்ற படிமம் ஆழமாகப் பதிந்துள்ளது. நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வொரு தடவையும், எந்த அடித்தளத்தில் இது தன்னைக் கட்டமைத்துள்ளதோ அதன் உதவியோடோ தன்னை அது தகவமைக்கிறது.

இலங்கையின் தலைமைத்துவ நெருக்கடி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தேசியவாதங்களின் பிரதிநிதித்துவ நெருக்கடியின் நீண்டகால இயலாமையே, தேவதூதர்களை தமது தேசியவாதம் சார்ந்து இலங்கையர்கள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

பொருளாதார அடியாள்கள், இப்போது புதிதாக தேவதூதர்களாக வேடம் தரிக்கிறார்கள். அவ்வேடத்துக்கான அங்கிகாரத்தை வெற்றிகரமான வியாபாரி என்ற முகமூடியூடாகச் சிலர் வழங்குகிறார்கள். அவர்கள் சொல்வது போல அவர் வெற்றிகரமான வியாபாரி என்ற பொதுப்புத்தி மனநிலையில், எதிர்காலம் பற்றி நம்பிக்கை வைப்பார்களானால், வேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணம் காணாமல் போகுங்கணம் என்ன செய்வதென்று உத்தேசிப்பது நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.