இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது; பொய் !! (கட்டுரை)
இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.
ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவது ஏன்? என்பதெல்லாம் சுவாரசியமான கேள்விகள்.
அரசியல்வாதிகள் பொய் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி கருத்துரைத்த ஜொனதன் றோச், “அரசியலில் போலித்தனமும் இரட்டைப் பேச்சும் கருவிகள். ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சன் வோட்டர்கேட் சர்ச்சைக்கு உடந்தையாக இருந்ததை மறுத்தபோது, அது தவறான முறையில், சட்டவிரோதமாக அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்ததை மறைக்கச் சொன்ன பொய், ஆனால் ஒரு பொது நோக்கத்திற்காகவும் பொய் சொல்லப்படலாம்.
ஆப்ரஹாம் லிங்கனின் விஷயத்தைப் பொருத்தவரையில், அது உள்நாட்டுப் போரைத் தடுப்பதற்கான நியாயமான பொது நோக்கங்களுக்காக சொல்லப்பட்டதைப் போன்று. மேலும் அமெரிக்க கௌரவத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க, அமெரிக்க உளவு விமானத்தை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியதை ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் மறுத்தது போலவும் பொய் சொல்லப்படலாம்…
தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதை பொதுவில் சரிசெய்வது அல்லது மறுப்பது பாசாங்குத்தனமா? நிச்சயமாக. ஆனால் பொது மற்றும் தனிப்பட்ட முகங்களை தனித்தனியாக பராமரிப்பது நாம் அனைவரும் தினமும் செய்யும் ஒன்று. எரிச்சலூட்டும் உறவினர்களிடம் நாங்கள் அவர்களின் வருகையால் மகிழ்ந்தோம் என்று சொல்கிறோம், மோசமான சேவையை வழங்கிய தகுதியற்ற பணியாளர்களுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் தவறு என்று எங்களுக்குத் தெரிந்தே உயரதிகாரிகளுடன் உடன்படுகிறோம்” என்கிறார் அவர்.
ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை எளிதாக்குவதற்கு அரசியல் போலித்தனம், பாசாங்குத்தனம், இரட்டைப்பேச்சு, மற்றும் பொய் சில சமயங்களில் அவசியமான கருவியாக இருக்கிறது என்பதை றோச் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. வள்ளுவன் சொன்னது போல பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஆனால் யாருக்கு நன்மை பயக்கும் என்பது இங்கு முக்கியமானது.
இங்கு நன்மை என்பது பொதுநன்மை. ஆனால் அரசியல்வாதிகள் மேற்சொன்ன காரணங்களுக்காகவும், பொது நன்மைக்குமாகவும் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா? இல்லை. பல சமயங்களில் தனிப்பட்ட நலன்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்குமாகத்தான் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
அரசியல்வாதிகளின் பொய்களுக்கு லட்சோபலட்சம் உதாரணங்கள் இருக்கின்றன. அதில் அண்மைக்காலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்வையும், அவரது குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்த பொய் என்றால், அது டொக்டர் ஷாஃபி முஸ்லிம் மக்கள் அல்லாதவர்களுக்கு கருத்தடை செய்கிறார் என்று கோட்டாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலரும் சொன்ன பொய்யைக் குறிப்பிடலாம்.
இனவாதம் பரப்பிய கோட்டாவினது இனவெறிக் கும்பல், இந்த இனவாதப் பொய்யினால், ஷாஃபி என்ற அப்பாவி வைத்தியர் மீது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் மீதே வேண்டாத ஒரு வெறுப்பு உருவாக்கப்பட்டது. “சிங்கள-பௌத்த” இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குவேட்டை நடத்த விளைந்த கோட்டா குழுமத்துக்கு இந்த இனவெறிச் சதி, அந்த வாக்குவேட்டைக்கு அவசியமானதொன்றாக இருந்தது. இன்று அந்தப் பொய் தகர்ந்துபோயிருக்கிறது. பொய் சொன்ன சன்ன ஜயசுமன உள்ளிட்டோர் இன்று பதவிகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர் ஷாஃபியும் அவரது குடும்பமும் அனுபவித்த வலிகளுக்கு என்ன மாற்று கிடைக்கப்போகிறது?
இப்படி ஆயிரமாயிரம் இனவாதவெறி நிறைந்த பொய்களையும், புரட்டுக்களையும் அதன்பாலான கடுமையாக எதிர்வினைகளையும் இலங்கையில் சிறுபான்மையினர் காலங்காலமாக அனுபவித்தே வந்திருக்கிறார்கள்.
தமிழனென்றால் “புலி”, “பயங்கரவாதி” என்று எத்தனை கட்டுக்கதைகள்! எத்தனை இளைஞர்கள் மறியலில் தங்கள் இளமையைத் தொலைத்துவிட்டுக்கிடக்கிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லியும் அர்த்தமில்லை. ஏனென்றால், அவர்கள் சொன்னது பொய் என்று எத்தனை தரம் நிரூபிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்லும் பொய்களுக்குள் விழுந்துகொண்டேயிருக்கும் முட்டாள் மக்கள் கூட்டமொன்று இருக்கும்வரை அவர்களும் பொய்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
றொஜர் கூப்மன் சொல்வதுபோல, பொய் மற்ற நபரைப் பாதிக்கிறது, மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது. இது தார்மீக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் திருட்டுக்கு சமம். ஒரு நபரின் மனதை நீங்கள் பொய்யால் நிரப்பும்போது – உண்மையைப் பொய்யால் மாற்றினால் – நீங்கள் உண்மையில் அவர்களிடமிருந்து திருடுகிறீர்கள். ஒருவர் துப்பாக்கி முனையில் உங்கள் பணத்தை திருடும் போது குறைந்த பட்சம், ஒரு திருட்டு நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும்.
ஆனால் உங்களிடம் உண்மையைச் சொல்வதாக நீங்கள் நம்பும் ஒருவர் உண்மையில் பொய்களைச் சொல்லும்போது, அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்களை பாதுகாப்பற்றவர்களாக விட்டுவிடுகிறார்கள். ஒரு வகையில் பார்க்கப்போனால், அரசியல்வாதிகள் சொல்லும் பொய்கள், அவர்கள் கொள்ளையடிப்பதை விட ஆபத்தானது.
அரசியல்வாதிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் பொய்களால் கவரப்படுகிறார்கள். மக்கள் உண்மையைப் பற்றி யோசிக்க நேரமெடுப்பதில்லை. மக்கள் வதந்திகளை நம்ப விரும்புகிறார்கள். இணையம், சமூக ஊடகம் என எல்லாவிடத்திலும், மக்கள் வதந்திகளை விரும்பிப் படிக்கிறார்கள். அது அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இதனால் அரசியல் உலகில், பொய் வேலை செய்கிறது. “உண்மை அதன் உடையை அணிவதற்கு முன்பு ஒரு பொய் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது” என்பது பழமொழி. அதுதான் உண்மையும் கூட.
கடினமான, கசப்பான, வலிமிகுந்த உண்மையை சொல்வது மக்களுக்குப் பெரிதும் பிடிப்பதில்லை. உண்மை எப்போது அழகாக இருப்பதில்லையே! வாய்மையே வெல்லும், உண்மையே பேசு என பெறுமதிகளைக் கொண்ட சமூகம் கூட, கசப்பான உண்மைகளை விரும்புவதில்லை போலும்! தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று பேய்க்காட்டுதலை நம்பிக்கையூட்டுதல் என்று புரிந்துகொள்ளும் மனிதர்களும் இங்கு இல்லாமல் இல்லை.
இன்றுள்ள அரசியல் கட்டமைப்பின்படி, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். பொய் சொல்ல மறுக்கும் மற்றும் பொது அறியாமையை சுரண்டிக் கொள்ளாத அரசியல்வாதிகள், குறைவான ஒழுக்கமும், தராதரமும், பெறுமதியும் உள்ள அரசியல்வாதிளுடன் ஒப்பிடும்போது கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
மேலும், அதன் காரணமாக குறைவான தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள். நேர்மையற்ற அரசியல்வாதிகளை வெறுக்கும் அதே வாக்காளர்கள், அந்தப் பொய்களையே மூலதனமாகக் கொண்ட அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள், வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த அரசியல்வாதிகளின் பொய்கள் குறித்த வாக்காளர்களின் முன்முடிவுகளை வலுப்படுத்தும் போது, உண்மையைப் பற்றி ஆராயமல், அவர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள்.
ஆகவே நேர்மையான அரசியல்வாதிகள் வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்று பேச்சுக்குச் சொல்லும் மக்கள்கூட, உண்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்காது, பொய்பேசும் அரசியல்வாதிகளின் பொய்களுக்கு எடுபட்டு, அவர்களையே ஆதரிக்கிறார்கள். பொய்யால் ஆதரவு கிடைக்குமென்றால், வாக்கு கிடைக்குமென்றால், பதவி கிடைக்குமென்றால், எந்த அரசியல்வாதிதான் பொய் பேச மாட்டான்! பொய்யிற்கு நற்பலனை வழங்கும் சமூகமொன்றில், உண்மை செத்துத்தான் போகும்.
மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, உங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகள் பொய் சொல்வதை சகித்துக்கொள்வது, அந்தப் பொய்யில் நீங்களும் பங்கேற்பதற்கு சமம். உங்கள் தார்மீக குருட்டுத்தன்மை அந்தக் குருட்டுத்தன்மைக்கேற்ற அரசாங்கத்தைப் பெற வழிவகுக்கும் போது, அதற்குப் பிறகு அழுது புலம்புவதில் பயனில்லை.