பிடில் வாசிக்கும் நவீன நீரோக்கள்!! (கட்டுரை)
உரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள். அதுபோல, இலங்கை மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துள்ள இக்காலப் பகுதியில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்புகளும், கிட்டத்தட்ட பிடில் வாசிக்கும் நவீனகால நீரோக்கள் போலவே செயற்படுகின்றன.
வரலாற்றில் என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியையும் பொருட்களின் தட்டுப்பாட்டையும் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். பிரகடனப்படுத்தப்படாத ஒரு வறுமை, பட்டினியை நாடு சந்தித்துள்ளது. இந்த நிலைமை, இன்னும் மோசமடைந்து வருகின்றதே தவிர, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வரிசைகளின் யுகம் நீள்கின்றது. சந்தையிலேயே கிடைக்காத பொருட்களுக்கும் விலை ஏற்றப்படுகின்ற அதிசயம் எல்லாம், இலங்கையில் மட்டும்தான் நடக்கின்றது. நாட்டையும் மக்களையும் இந்த நெருக்கடிக்குள் இருந்து, இவர்கள் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை, மக்களிடையே குறைவடைந்து கொண்டே செல்கின்றது.
ஒரு கதை சொல்வார்கள், மாட்டைப் பற்றி ஒருவரிடம் கட்டுரை எழுதச் சொன்ன போது, மாட்டை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அந்த மரத்தைப் பற்றியே எழுதியதாக அந்தக் கதை வரும். அதே பாணியிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதாவது, நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள் என்று அதிகாரங்களைக் கொடுத்து, பதவிகளுக்கு ஆட்களை நியமித்தால், அவர்கள் வேறு என்னவோ இரண்டாம் பட்சமான விவகாரங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படித்தான் கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் செயற்பட்டது. இப்போது கோட்டாபய – ரணில் அரசாங்கமும், ஏதோ ஒருவகையில் அதே வழித்தடத்தில் பயணிப்பதாகவே தோன்றுகின்றது.
பெரும்பான்மைப் பலத்தை தமக்குத் தந்தால், நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்வோம் என்று ராஜபக்ஷ குடும்பம் கூறியது. அது கிடைத்தவுடன் 20 ஆவது திருத்தத்தின் ஊடான அதிகாரங்கள் வேண்டும் என்றது; அதுவும் கொடுக்கப்பட்டது.
இவை இரண்டும் கிடைத்தவுடன், ராஜபக்ஷவினருக்கு தலைகால் புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினர். அப்போதுதான் கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி தலைதூக்கத் தொடங்கியது.
நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகின்றது என்பதை, அன்றே நோக்கர்கள் தெளிவாகவே சொன்னார்கள். ஆனால், உச்சாணிக் கொம்பில் நின்ற ராஜபக்ஷவினர் அதையெல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ‘பசிலை எம்.பியாக்க, அமைச்சராக்க வேண்டும்’ என்றனர்.
அமெரிக்கப் பிரஜாவுரிமையை துறக்க விரும்பாத பசிலுக்காக இலங்கையின் அரசியலமைப்பே திருத்தப்பட்டது. அதாவது, அமெரிக்காவின் பிரஜாவுரிமையில் இருந்து நீங்குவதை விட, இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது இலகுவான காரியம் என்று ராஜபக்ஷ குடும்பம் எண்ணி இருக்கின்றார்கள் என்றால், இலங்கையை எவ்வளவு மட்டமாக கருதியிருக்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
‘பல மூளைகளைக் கொண்டவர்’ என வர்ணிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சரானார். ஆனால், குறைந்தபட்சம் எரிபொருள் விலையையாவது அவரால் குறைக்க முடியவில்லை. உண்மையாகச் சொன்னால், அவர் வந்த பிறகுதான் நிலைமைகள் மிக மோசமடைந்தன.
செய்வதையெல்லாம் செய்து விட்டு, இப்போது “69 இலட்சம் மக்களும் பொறுப்புக்கூற வேண்டும்” என்று நக்கலாகச் சொல்கின்றார்கள் என்றால், எந்தளவுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமலும், கவலையில்லாமலும் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமாச் செய்தார். மக்கள் எழுச்சியை அடக்குவதற்கும், கோட்டாபயவின் நிகழ்கால அரசியலையும் நாமலின் எதிர்கால அரசியலையும் காப்பாற்ற அவர், இந்த முடிவை எடுத்தார். அது ஓரளவுக்கு வெற்றியளித்தும் உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே ராஜபக்ஷவினரின் திரைக் கதையில், கௌரவத் தோற்றத்தில் நடிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க உள்ளே வருகின்றார். அதாவது, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் பிரதமர் பதவி விலகி, வேறு பொருத்தமான யாரும் இல்லை என்ற நிலையில், ஐ.தே.கவின் ஒரேயொரு தேசிய பட்டியல் எம்.பியான ரணில், இந்தக் கதைக்குள் வந்தார்.
திட்டமிடப்பட்ட போராட்டங்கள், திடீரென அடங்கிப் போயின. அப்போதுதான் இதற்குப் பின்னால் இருக்கின்ற புவிசார் ஆதிக்க அரசியலும் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வகிபாகங்களும் மக்களுக்குப் புரிந்தன.
ஆனாலும் என்ன? ரணில் வந்தவுடன் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுவதான தோற்றப்பாடு உருவானாலும், உண்மையில் நிலைமை முன்னரை விட மோசமடைந்தே இருக்கின்றது.
ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றியதில் ரணில் ‘பாஸ்’ எனலாம். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் ‘பெயிலாகி’ விடுவாரோ என எண்ணுமளவுக்கு நாட்டின் யதார்த்த நிலைமைகள் உள்ளன.
இந்த நிலைமையில் கூட மக்களுக்கு நம்பிக்கை தரும் எந்த நடவடிக்கையையும் கோட்டபாய – ரணில் அரசாங்கம் எடுத்ததாக ஆறுதல் கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் நம்பிக்கையூட்டும் அறிக்கையையாவது வெளியிடவில்லை.
மாறாக, “இன்னும் கஸ்டங்கள் வரும்”, “நிலைமைகள் மோசமடையலாம்”, “தியாகங்களைச் செய்வதற்கு தயாராக இருங்கள்” என்றுதான் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
அறுதிப் பெரும்பான்மை, 20ஆவது திருத்தம், பசில் ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க என்ற வரிசையில் இப்போது, அடுத்த பாரிகாரியாக தம்மிக பெரேரா களமிறக்கப்பட்டுள்ளார். இவரது வருகை பொருளாதாரத்திலும் சமூக கலாசார விழுமியங்களிலும் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இன்னும் கொஞ்சக் காலத்தில் கணிப்பிட்டுக் கொள்ளலாம்.
எது எவ்வாறிருப்பினும், நாட்டில் நெருக்கடிகள் புகையத் தொடங்கிய காலத்தில் ராஜபக்ஷவினர் விரைந்து செயற்படாமல் விட்டதாலும், தீப்பிடித்த பிறகு கூட, அதைப் பொருட்படுத்தாமல் இருந்தமையாலும், இந்த நெருக்கடிகள் இந்தளவுக்கு பாரதூரமான நிலைக்கு வந்துள்ளன.
கோட்டாபய – ரணில் அரசாங்கமும் அதேபாணியில் பிடில் வாசிக்கத் தொடங்கி இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இதே வேலையைத்தான் எதிர்க்கட்சி மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் அரசியல் அணிகளும் முன்னரும் செய்தன; இப்போதும் செய்து கொண்டிருக்கின்றன. மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், அரசியல் இலாபம் தேடுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.
மக்களுக்கு இன்று தேவையாக இருப்பது, இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஓர் அவசர மீட்புத் திட்டமாகும். ஆனால், அதற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை விட, வேறு விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன.
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை திருத்துவதை விடுத்து, அரசியலமைப்பை திருத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல், 21ஆவது திருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தேர்தல் நடத்த வேண்டும்; ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றார்கள்.
இந்த நிலைமையில் கூட, பலமற்ற எதிர்க்கட்சி ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றது. ரணில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னவர்களும் ‘ரணில் சரிப்பட்டு வரமாட்டார்’ என்ற தொனியில் பேசுகின்றார்கள்.
மக்கள் உண்பதற்கும் வாழ்வதற்கும் நாதியற்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்திலேயே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இவ்விதம் செயற்படுகின்றனர். மக்களை மறந்த இந்த அணுகுமுறையானது, மக்களை நாளுக்குநாள் இன்னும் அதிகமான நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான பின்புலத்திலும் பெருந்தேசிய தலைவர்கள் தான் இப்படிச் செயற்படுகின்றார்கள் என்றால், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிடில் வாசித்துக் கொண்டுதான் நிற்கின்றார்கள்.
மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கவோ அல்லது தனிப்பட்ட அடிப்படையில் மக்களுக்கு உதவுவதற்கோ, முஸ்லிம் எம்.பிக்கள் முன்வரவில்லை. அவர்கள் அரசாங்கத்தின் பக்கமா, மக்களின் பக்கமா நிற்கின்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
தமிழ் அரசியல்வாதிகளும் இவ்விதமே செயற்படுகின்றார்கள். மக்களின் வாழ்வாதார பிரச்சினையை விட, தீர்வுத்திட்டத்திற்கே இக்காலத்திலும் முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை விட ஒப்பீட்டளவில் அவர்கள் குறைந்தளவுக்கே பிடில் வாசிக்கின்றனர் எனலாம்.
நாட்டில் எல்லாம் சரியாக இருக்கும் போது, மக்களை ஆள்வதற்கு திறன்மிக்க ஆட்சியாளர்கள் அவசியமில்லை. நெருக்கடி, சிக்கல் வரும்போதுதான் அது தேவைப்படுகின்றது. இது சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
உண்மையில், கோட்டாபயவோ மஹிந்தவோ ராஜபக்ஷ குடும்பமோ வீட்டுக்குப் போகவேண்டும் என்ற தேவை சாதாரண மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால், இந்த நெருக்கடிக்கெல்லாம் அவர்கள்தான் காரணம் என்பதாலேயே, அவர்களை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.
இன்றைய நிலைவரப்படி, அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றியோ சட்ட சீர்திருத்தங்கள் பற்றியோ மக்களுக்கு கவலையில்லை. இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் பிரச்சினையில்லை. ரணில் வருகின்றாரா, தம்மிக்க வருகின்றாரா, மீண்டும் மஹிந்த வரப் போகின்றாரா என்பதையெல்லாம் விட, மக்கள் மனதில் இன்றிருக்கின்ற கேள்விகள் வேறுபட்டவை.
எத்தனை மணிக்கு வரிசைக்கு செல்வது? எரிபொருள் எப்போது வரும்? எரிவாயு எப்போது கிடைக்கும்? எப்போது வீட்டுக்குத் திரும்புவோம்? எவ்வாறு மூன்று வேளையும் சாப்பிடப் போகின்றோம்? நாளைய நாள் எப்படி அமையப் போகின்றது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? இவர்கள் இந்த நெருக்கடியை தீர்ப்பார்களா? என்பவையே அந்தக் கேள்விகளாகும்.
எனவே, நவீன நீரோக்கள் இதுபற்றி இனியாவது கொஞ்சம் அக்கறையுடன் சிந்தித்து, செயலாற்ற வேண்டும்.