நம் முகத்தில் உடலுறவு கொள்ளும் உயிரினம்!!! (கட்டுரை)
முகத்தைச் சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதற்காக பல வகையான க்ரீம்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவது பலரது வழக்கம்.
ஆனால் டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் என்பது போன்ற நுண்துளைகளை சுத்தம் செய்யும் நுண்ணுயிரிகளைப் பற்றித் தெரியுமா? அவை நம் முகத்தின் ஆழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை.
இரவு நேரத்தில் 0.3 மிமீ நீளமுள்ள இந்த ஒட்டுண்ணிகள் தோலின் துளைகளை விட்டு வெளியேறி, புதிய தோல் நுண்குழாயைக் கண்டுபிடித்து தங்களுக்கான இணைகளைத் தேடி அவற்றுடன் உடலுறவு கொள்கின்றன.
இப்படி மனிதர்களின் முகத்தில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரிகளுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நுண்ணுயிரிகளின் டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் சேதமடைந்து வருவதால், அவை முற்றாக அழியும் நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.
குளியலறைக்கு மிக வேகமாக விரைந்து சென்று முகத்தில் எதையாவது அழுத்தித் தேய்த்து அந்த நுண்ணுயிர்களை துடைத்து எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வீர்கள். ஆனால் அவற்றை அப்படியெல்லாம் கழுவி எடுத்துவிட முடியாது. உங்களுக்கு எட்டாத அளவுக்கு ஆழத்தில் அவை வசிக்கின்றன.
நம்மில் 90 சதவிகிதம் பேர் இந்த ஒட்டுண்ணிக்கு நமது முகத்தில் இடமளித்து வருகிறோம். ஏனென்றால் தாய்ப்பால் குடிக்கும் காலத்திலேயே இது பரவி விடுகிறது.
இத்தகைய நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று ஆய்வில் பங்கேற்ற ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெஜான்ட்ரா பெரோட்டி கூறுகிறார்.
“அவை மிகச் சிறியவை, ஆனால் அழகானவை. அவை நம் முகத்தில் இருப்பதால் கவலைப்பட ஒன்றும் இல்லை. அவை நமது தோலின் துளைகளை சுத்தம் செய்து அழகாக வைத்திருக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
“கவலைப்படாதீர்கள். உங்களுடன் ஒரு சிறிய நுண்ணிய உயிரினம் வாழ்வதை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது.”
அவற்றுடன் நமது உறவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆனால் இவை எந்த பூச்சி உயிரினத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மரபணுக்களைக் கொண்டிருக்கின்றன.
புற ஊதாக் கதிரில் இருந்து தனது உடலைப் பாதுகாக்கும் மரபணுவை இந்த நுண்ணுயிரிகள் இழந்துவிட்டன. அதனால் அவை இரவில் மட்டுமே செயல்படுகின்றன.
அந்த இரவு நேர செயல்பாடுதான் உங்களை நெருட வைக்கும்.
“இரவில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, அவை உடலுறவு கொள்வதற்கும் குழந்தைகளைப் பெறுவதற்கும் நமது முகத்தில் உள்ள துளைகளுக்குள் செல்கின்றன” என்று பெரோட்டி கூறுகிறார்.
ஆமாம் நமது முகத்தில் உள்ள துளைகளை, அவை தங்களது படுக்கையறைகளாகப் பயன்படுத்துகின்றன.
ஆனால் அவற்றின் மரபணு பாதிக்கப்பட்டு வருவதால் அந்த ஒட்டுண்ணிகள் நம்மைச் சார்ந்திருப்பது அதிகரிக்கிறது. அதாவது அவை அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.
அவை அழிந்து போனால் நமக்கு என்ன பிரச்னை?
“அவை நமக்கு ஆரோக்கியமான சருமத்தை அளிக்கின்றன. அவை அழிந்தால், சருமத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என்று பெரோட்டி கூறுகிறார்.