அயலுறவுக்கு முதலிடம்!! (கட்டுரை)
இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய தூரத்திலேயே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அயல் நாடான இலங்கை இந்தளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியண்ணா (இந்தியா) ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றது மத்திய அரசாங்கத்துக்கு அப்பால், தமிழக அரசும் தமிழக மக்களும் உலருணவுப்பொதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளிலும் கரங்களை நீட்டிக்கொண்டிருக்கின்றது. உலருணவுப் பொதிகள், மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கப்பல்களின் ஊடாக எரிபொருட்களும் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்த உதவி ஒத்தாசைக்கு மத்தியில், இலங்கை- இந்தியா உறவை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், கடந்த வாரத்தில், இரண்டு முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்திய நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத் மற்றும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் சகிதம் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா, ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 23 ஆம் திகதியன்று வந்திருந்தார்.
தனி விமானத்தின் மூலமாக வந்திருந்த இந்தியத் தூதுக்குழுவினர், அதே விமானத்தில் அன்றையதினமே திரும்பிவிட்டனர். நாட்டில் தங்கியிருந்த ஒருசில மணிநேரத்தில், திரும்பிவிட்டனர்.
அந்தக் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்போது, இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கை மக்களுக்காக இந்தியாவால் வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவி குறித்தும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மற்றுமொன்றை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். யாழ்ப்பாணத்துக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் சரக்குக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆக, எந்ததெந்த திசைகளில் இருந்தெல்லாம் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். அந்தந்த திசைகளில் இருந்தெல்லாம் இந்தியா உதவிச் செய்துவருகின்றது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தூத்துக்குடிக்கும் இடையில் சரக்குக் கப்பல் சேவைகள் இடம்பெறுமாயின் வடக்கு மாகாண மக்களும் வடமத்திய மாகாண மக்களும் பெரும் நன்மையடைவார்கள்.
அதன் சேவைகளை நீடித்தால், ஏனைய மாகாணங்களுக்கும் உதவிகளைச் செய்யக்கூடியதாய் இருக்கும். காங்சேன்துறைக்கும் திருகோணமலைக்கும், திருகோணமலையில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கும், ஹம்பாந்தோட்டையில் இருந்து ஏனைய மீன்பிடித்துறைமுகங்களுக்கும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வது சால பொருத்தமானதாய் இருக்கும்.
இந்தியாவின் உயர்மட்டக்குழுவினரும் நாட்டுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராந்துவிட்டு சென்றிருக்கின்றர். எவ்விதமான பேரம் பேச்சுகளுமின்றி “அயலுறவுக்கு முதலிடம்” என்ற அடிப்படையில் இந்தியா நீட்டிக்கொண்டிருக்கும் நேசக்கரத்துக்கு இலங்கைவாழ் மக்கள் அனைவரும் தலைவணங்கவே வேண்டும்.
அதற்கு அப்பால் இலகு கடன் அடிப்படையிலும் இலங்கைக்கு உதவிச்செய்யும் இந்தியா, எரிபொருள் கப்பல்களையும் அனுப்பிவைக்கவிருக்கிறது உலருணவு, மருந்துப்பொருட்களை ஏற்கெனவே அனுப்பியிருந்தது.
இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடிக்கும் அனர்த்தங்களுக்கும் முகங்கொடுக்கின்றதோ, அப்போதெல்லாம் உதவி ஒத்தாசைகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. எனினும், இலங்கையிலிருக்கும் ஒருசில அரசியல்வாதிகள் தங்களுடைய சந்தேக பார்வையிலிருந்து விலகவில்லை.
உதாரணமாக, குடும்பமொன்று பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்குமாயின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் உதவி ஒத்தாசை கோரும். அதில் சமாளித்து தலையைத் தூக்க முடியாவிடின், வீட்டிலிருக்கும் பெறுமதியான தங்க ஆபரணங்களை அடகுவைக்கும் இல்லையே முற்றாக விற்றுவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகளைத் தேடும்.
நமது நாடும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டுவளங்களை இந்தியா சூறையாட போவதாகவும், இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றப்பார்க்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
ஆபத்தில் உதவுவோருக்கு ஏதாவது கைங்காரியம் செய்தே ஆகவேண்டும். நாட்டுவளங்களை விற்கும் போது வாய்மூடி மௌனமாக இருந்த தரப்பினர், உதவிவழக்கும் இந்தியாவுக்கு எதிராக கையை நீட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கு ஒருவிடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். நமது நாட்டினால் முடியாத அபிவிருத்திப்பணிகளை உதவி ஒத்தாசைகளை, இலகுதவனை கடன்களை வழங்கும் நாடுகளுக்கு அபிவிருத்திக்காக கொடுப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை( 6 பில்லியன்) நிவாரண கடனை வழங்கியுள்ளதாக இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் அதிகளவான கடன் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தொகை இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர பல ஆசிய நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கூட்டுக் கடனை செலுத்துவதையும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. இதனடிப்படையில் இந்தியா, கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கைக்கு சுமார் 600 கோடி டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
இதனிடையே கமத்தெழிலுக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்யவும் இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதுடன், அது சம்பந்தமான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்யவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் இலங்கையின் முக்கியஸ்தானம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்திய இலங்கை உறவின் மேம்பாட்டிற்காக இரு தரப்பும் தமது அர்ப்பணிப்பினை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வர்த்தக,வாணிப மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயை ஜூன் 30 ஆம் திகதியன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்தல்,இந்திய-இலங்கை வாணிப தொடர்பிற்கான வழிகளை உருவாக்குதல் போன்ற இருதரப்பு வர்த்தகம் சார்ந்த பலவிடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய அரசாங்கம் மட்டுமன்றி தமிழக அரசாங்கமும் இலங்கை மக்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் உலருணவு பொதிகளை இலங்கையில் இருக்கும் இந்தியாவின் துணைத்தூதரகங்களின் அதிகாரிகள் முறையாக விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ், திருகோணமலையில் 28,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் இந்திய மக்களின் மனிதாபிமான உதவிப்பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜாவினால், இப்பொருட்கள் ஜூன் 9 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டது.
மலையகத்துக்கான உலருணவுப்பொருட்களும் இந்திய நிவாரணப் பொருட்களும் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டொக்டர் எஸ். அதிரா பகிர்ந்தளித்தார்.
கொரோனா தொற்றின் தாக்கம் இன்னுமே இந்தியாவில் இருக்கிறது. கொரொனாவின் ஆரம்பத்தில் அண்டை நாடான இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அந்தக் காலப்பகுதியிலும் இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு தேவையான கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியிருந்தமையை மறந்துவிடமுடியாது.
ஆசியாவின் வல்லரசான இந்தியா, அயலுறவுக்கு முதலிடம் எனும் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்து வருகின்றது. இந்தநேரத்தில் அதன் காலை வாரிவிடாது. கரங்களை இறுக்கப்பிடித்துக்கொண்டு பயணித்தால், விழுந்துகிடக்கும் இலங்கைக்கும் ஓரவுக்குத் தலையைத் தூக்கும்.
இந்திய உயர்மட்டக்குழுவினரின் விஜயத்தின் ஊடாக அதற்கான கோடு இடப்பட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த உதவியை மறந்துவிடக்கூடாது.