நெருக்கடியில் இலங்கை, பாகிஸ்தான் நட்பு நாடுகள் நழுவும் சீனா!! (கட்டுரை)
சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (பிஆர்ஐ) திட்டத்தில் சீனாவிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இலங்கை, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கும், இம்ரான்கான், கோத்தாபய போன்றோாின் பதவியிழப்புகளுக்கும் அந்த பொருளாதார நெருக்கடிகளே காரணமாக அமைந்தன.
இலங்கையில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அதிக வட்டிக்குக் கடன்களை வாாி வழங்கி இலங்கையை கடனில் மூழ்கடித்த சீனா, இலங்கை எதிா்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையின் போது கடும் மௌனத்தை கடைப்பிடித்து வருகிறது.
சீனாவிடம் இருந்து இலங்கை அதிக கடனை வாங்குவதற்கு ராஜபக்ஷக்களே காரணமாக இருந்துள்ளனா்.
2005ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மனித உாிமைகள் தொடா்பான சா்வதேசத்தின் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் மீது இழைக்கப்பட்ட மனித உாிமை மீறல்களுக்காக பலத்த கண்டனங்களையும் குற்றம் சாட்டுக்களையும் சா்வதேசம் ராஜபக்ஷ அரசு மீது சுமத்தியது. இதனால் சா்வதேசத்தின் உதவிகளை இழக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.
இந்த சந்தா்ப்பத்தை பயன்டுத்திக் கொண்ட சீனா. எந்த நிபந்தனையும், வரையறையுமின்றி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு கடன் வழங்க முன் வந்தது. சா்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஊழல்களுக்கு பெயா் போன ராஜபக்ஷ அரசுக்கு உதவிக்கரம் நீட்டும் பணியை சீனா ஆரம்பித்தது மட்டுமல்லாமல் ராஜபக்ஷகளின் ஊழலுக்கும் ஆசிா்வாதம் வழங்கியது.
இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்து அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை ஒன்றை பிரசுாித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
அந்தக் கட்டுரையில் வெளியான, இலங்கை மீதான சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் ஆக்கிரமிப்பு தொடர்பான உண்மைகள் வியப்பளிப்பதாக இருந்த போதும், இந்த ராஜபக்ஷகள் நாட்டை சீனாவிடம் பணயமாக வைத்து கடன் பெற்று ஊழல் செய்து பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு வந்தனா்.
இந்த பகற்கொள்ளையின் விபரீதத்தை இந்நாட்டு மக்கள் ஒரு பொருட்டாக அன்று எடுத்துக் கொள்ளவில்லை. இந்த கொள்ளையின் தீங்குகளை மறைப்பதற்கு ராஜபக்ஷகள் இனவாதத்தை ஆயுதமாக கையிலெடுத்தனா்.
சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு இனவாதத்தை போதையாக ஏற்றினா். இனவாத போதையை மக்களுக்கு ஏற்றி அவா்களை மதிமயங்க செய்து விட்டு ராஜபக்ஷகள் வழமை போல நாட்டின் பொதுச் சொத்துக்களை சூறையாடினா்.
ராஜபக்ஷகள் தங்கள் சுயநலத்தையும் பேராசையையும் நிறைவேற்றிக்கொள்ள சீனாவிடம் சரணடைந்தனர். சா்வதேசத்தைப் போன்று சீனாவிற்கு இந்நாட்டில் இடம்பெறும் மனித உாிமை மீறல்களோ, ஊழல்களோ பொருட்டாக தொியவில்லை. மாறாக ஊழல் மிகுந்த ராஜபக்ஷகளை சீனாவின் அரசியல் காய் நகா்த்தல்களுக்கு சாதகமானவா்களாகவும் ஒரு வரப்பிரசாதமாகவும் சீனா பயன்படுத்திக் கொண்டது..
மற்ற நாடுகளிடம் இருந்து குறைந்த வட்டியில் பெறும் கடனுக்கு பதிலாக, சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு கடனை ராஜபக்ஷ அரசு வாங்கியது. துறைமுகம், விமான நிலையம், மாநாட்டு மண்டபம், தாமரை கோபுரம் என்று பல பிரயோசனமற்ற திட்டங்களுக்கு சீனா முதலீடு செய்து இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
ராஜபக்ஷகள் தேசத்தின் காவலா்களாக பாா்க்கப்பட்டனா். இவா்களின் வாயிலிருந்து தேசப்பற்று, தேசப்பெருமை, தேசபக்தி, என்ற வார்த்தைகளே எப்போதும் கொட்டிக் கொண்டு இருந்தன. மக்களுக்கு தேசப்பற்றையும், இனவாதத்தையும் மார்கட் செய்துகொண்டு அதற்கு முற்றிலும் மாற்றமாக நாட்டின் சொத்துக்களை விற்று வந்தனா்.
கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டலை அமைப்பதற்காக அரசுக்குச் சொந்தமான மிகவும் பெறுமதியான இராணுவத் தலைமையகக் காணியை சீனாவுக்கு சொந்தமாக விற்றதும், துறைமுக நகரமான போர்ட் சிட்டியில் 500 ஏக்கர் புதிதாக உருவாக்கப்பட்ட நிலத்தை சீனாவுக்கு சொந்தமாக வழங்கியதும் இந்த ராஜபக்ஷகளின் போலி தேசப்பற்றுக்கும், வெட்கக்கேடான செயல்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
இந்த நாட்டை மீள முடியாத கடனிலும், நெருக்கடியிலும், வங்குரோத்து நிலைக்கும் தள்ளுவதற்கு ராஜபக்ஷகளே காரண கா்த்தாக்களாக இருக்கின்றனா். தனது காரியம் நிறைவடைய சீனா ராஜபக்ஷகளை கைவிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவதற்கு சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனைப் பெற இலங்கையால் முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கடனுதவியாக சீன அதிபர் சீ ஜின்பிங்கிடம் விடுத்த கோரிக்கைக்கு இன்று வரை பதிலளிக்கப்படவில்லை.
சீனா, இலங்கையைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி வளைத்து வருவதாகவும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வந்தது. இருந்த போதிலும், இந்த பாரிய நெருக்கடி நிலையில் இலங்கைக்கு இந்தியா தனது நேசக்கரத்தை நீட்டியது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 3.8 பில்லியனை இலங்கைக்கு கடனாக வழங்கியது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவுக்கு செல்வாக்கு உள்ளது, ஆனால் கொழும்பிற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 20-25 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி தேவைப்படும் என்று பொருளாதார நிபுணர் டொக்டர் கணேசன் விக்னராஜா கருத்துதெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கு உதவுவதில் சீனா பாராமுகமாக இருக்கும் நிலையில், இந்தியா கடனில் சிக்கித் தவிக்கும் தனது அண்டை நாடுகளை மீட்டு எடுப்பதில் தனது பங்கை ஆழப்படுத்த முடியும், இந்தியாவால் முன்மொழியப்பட்ட நன்கொடையாளர் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்க முடியும்” என்று டொக்டர் கணேசன் விக்னராஜாவை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கி இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மீட்புக்கு வந்த முதல் நாடு இந்தியா. இலங்கைக்கு எண்ணெய் வழங்க கடன் வரிகள் ஜூன் மாதம் முடிவடைந்தது, எரிபொருள் இருப்புக்கள் தீர்ந்து போனதால் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது.
இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து விரைவாக வெளிவரவில்லையென்றால், அது வேரூன்றிய தேக்கநிலையில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்றும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது விலைகள் தொடர்ந்து உயரும் என்றும், ஏராளமான மக்களை வேலையிழக்கச் செய்து மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளும் என்றும் டொக்டர் விக்னராஜா கூறியுள்ளார்.
சீனாவின் கடன் வழங்கும் கொள்கையில் அதன் அரசியல் மூலோபாய நன்மைகளே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இலங்கை பிரச்சினை தொடா்பாக அது எதிா்வினையாற்றிய முறையில் நிரூபணமாகிறது. இலங்கையின் நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக இலங்கை வேண்டி நின்ற கோாிக்கைகளுக்கு அது செவிசாய்க்காமல் இருந்து வருகிறது.
சீனா இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கால்களை ஊன்றி வைத்துள்ளது. இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் இந்தத் துறைமுகம் 2017 ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான சீனாவின் ஆர்வம் அதன் பிராந்திய அரசியல் ஆதிக்கத்தின் ஒரு மூலோபாய திட்டமே என்று இந்தியா கருதுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இந்த இருப்பு எதிர்காலத்தில் சீனாவின் இராணுவப் பயன்பாட்டுக்கு முக்கிய தளமாகும் சாத்தியம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
தெற்காசியாவில் உள்ள பிற நாடுகளும் சீனாவின் நிதியுதவி பெறும் வெள்ளை யானைகளால் சிக்க வைக்கப்பட்டுள்ளன – அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போா்வையில் உருவாக்கப்படும் சீனாவின் இந்த திட்டங்கள் அவற்றின் பொருளாதார வருவாயை விட செலவுகள் அதிகமுள்ள அந்த நாடுகளால் தாக்குப்பிடிக்க முடியாத பெரும் சுமையான திட்டங்களாக உள்ளன.
சீனக் கடனுதவியில் சிக்கிய மாலைத்தீவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து கடன் வாங்கிய நேபாளம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் இலங்கையை போன்றே பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தெற்காசியாவில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அதன் நிதிக் கடமைகளில் தவறுவதைத் தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (CPEC), இரு நாடுகளையும் இணைக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களின் தொகுப்பாகும், இது சீனாவினால் பாகிஸ்தானுக்கே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.
பாகிஸ்தானின் கௌதாா் துறைமுகம் சீனாவின் முக்கிய வேலைத்திட்டமாகும். இந்த துறைமுக வேலைத்திட்டம் அமொிக்கா ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அரபிக்கடலின் கரையோரப் பகுதியிலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளுக்கு அருகாமையிலும் காலூன்றுவதற்கான சீனாவின் ஒரு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
சீனா பாகிஸ்தானின் மிகப்பெரிய கடன் வழங்குநராக உள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் $131 பில்லியனாக உள்ளது, இதில் $41 பில்லியன் பலதரப்புக் கடனாளிகளுக்கும், கிட்டத்தட்ட $19 பில்லியன் சீனாவிற்கும் கொடுக்கப்படவுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, சீனாவிடமிருந்து அதிக கடன் வாங்குதல் மற்றும் பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாக பணவீக்கம் மற்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொருளாதாரப் நெருக்கடிகள் ஒரே கட்டமைப்பை கொண்டவை. பாகிஸ்தானில் அந்நிய செலாவணி முற்றாக தீா்ந்துள்ளது. பால்மா இறக்குமதி செய்ய டொலா் தட்டுப்பாடு இருப்பதால் தேநீா் பருகுவதை குறைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அமைச்சா் ஒருவா் மக்களிடம் கோரிக்கை விட்டிருந்தாா். இலங்கை மக்கள் பால்மாவை மறந்து பல மாதங்களாகின்றன.
இலங்கையும் பாகிஸ்தானும் தங்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் மீள வாய்ப்பிருக்கிறது., இனிமேலும் இந்த இரு நாடுகளும் சீனாவை ஒரு பங்காளியாகவும் பாதுகாப்பாளனாகவும் நம்பியிருப்பதை மீள் பாிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் வளரும் மற்றும் வறிய நாடுகளை சீனா தன் பக்கம் சார்ந்திருக்க செய்வதற்கு, அதன் கடன் பொறி இராஜதந்திரத்தினை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அண்மையில் பிாித்தானியாவில் இடம் பெற்ற ஜீ 7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் இது தொடா்பாக தீா்க்கமாக ஒரு முடிவை எடுக்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தன.
சீனாவின் நண்பர்களாக செயற்பட்டு வந்த இலங்கையும் பாகிஸ்தானும் இன்று ஒரே மாதிாியான பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றன. இந்த இரு நாடுகளும் மோசமான நிதி நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லல்பட்டு வருகின்றனா். பணவீக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சீனாவோ இந்த இக்கட்டான சமயத்தில் இந்த இரு நாடுகளுக்கும் உதவி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் செலுத்திய 4 பில்லியன் டாலர் கடனை, திரும்ப வழங்குவதில் சீனா இன்னும் உறுதி கொடுக்கவில்லை. அதேபோல இலங்கையின் 2.5 பில்லியன் டாலர் கடன் உதவிக்கும் பதிலளிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் உதவுவதாக சீனா உறுதியளித்துள்ள நிலையில், மிக கவனமாக சீனா செயல்பட்டு வருகின்றது.