;
Athirady Tamil News

ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது!! (கட்டுரை)

0

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அப்படியானதொரு நிலை தனக்கு என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கடி கூறுவாராம். புலிகளிடம் இருந்து நாட்டை சிங்கள மக்களுக்கு மீட்டுக் கொடுத்த தலைவராக தான் என்றைக்குமே மகா வம்சத்தில் அடையாளம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக, அரச நிதியை செலவிட்டு மகா வம்சத்தில் ராஜபக்‌ஷர்களுக்கான அத்தியாயத்தை அவர் எழுதச் செய்தார்.

ஆனால், 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தன்னுடைய தோல்வி தமிழ், முஸ்லிம் மக்களால் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் தன்னுடனே இருப்பதாகவும் கூறினார். அந்த இடத்திலிருந்து தென் இலங்கையில் பௌத்த-சிங்கள பேரினவாதத்தை தேர்தலுக்கான பெரும் உத்தியாக முன்னிறுத்தி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் அளவுக்கான தலைவராக தன்னை மாற்றிக்காட்டினார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியும், 2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற மூன்றில் இரண்டுக்கு அண்மித்த பெரும்பான்மை வெற்றியும் அதனால் நிகழ்ந்தவை. ஆனால், அந்த வெற்றி முகம் நீடிக்கவில்லை. இரண்டரை ஆண்டுக்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களை ஆட்சியை விட்டு ஒழித்து ஓடுமளவுக்கான நிலைமையை தென் இலங்கை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (13) புதன்கிழமை அதிகாலையில் விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் நாட்டை விட்டுத் தப்பிடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. தெற்காசியாவில் பதவியில் இருக்கும் போதே நாட்டை விட்டுத் தப்பி ஓடிய இரண்டாவது ஜனாதிபதி என்ற அடையாளத்தை கோட்டா பெற்றிருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி கடந்த ஆண்டு தலிபான்களுக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடினார். ஆனால், கோட்டாவோ அவரை யார் ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ, அந்த மக்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடியிருக்கிறார். இது, இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று. அதுபோல எதிர்பார்க்கப்படா ஒன்று.

மஹிந்த தன்னுடைய காலத்துக்கு பின்னர், தான் எப்படி நினைவுகூரப்பட வேண்டாம் என்று நினைத்தாரோ, அது அவர் வாழும் காலத்திலேயே கனவாக மாறியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த மே மாதம் 09ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய போது, நாடு முழுவதும் வெடி கொளுத்திக் கொண்டாடியது. ராஜபக்‌ஷர்கள் பாதுகாப்புத் தேடி இராணுவ முகாம்களுக்குள் பதுங்கியிருக்க வேண்டி வந்தது. இன்றைக்கு கோட்டா சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், நாட்டில் ஜனாதிபதி என்ற ஒருவர் இல்லை. அதுபோல, கோட்டாவும் பதவியை விட்டு விலகியிருக்கவில்லை.

ராஜபக்‌ஷர்கள் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனைக் கட்டமைப்பினால் நிகழ்ந்தது. ஏனெனில், எவ்வளவு ஊழல் மோசடிகளைக் செய்தாலும், காட்டு ஆட்சியை நடத்தினாலும் பௌத்த -சிங்கள இனவாதத்தை பேசிக் கொண்டிருந்தால், தென் இலங்கையின் கிராமங்களை வளைத்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு பௌத்த பீடங்கள் பக்க பலமாக இருக்கும் என்று ராஜபக்‌ஷர்கள் நம்பினார்கள். இதனை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க உள்ளிட்டவர்கள் கடந்த காலங்களில் பின்பற்றி வந்த ஆட்சிக் கட்டிலை அடைவதற்கான உத்தி. ராஜபக்‌ஷர்களும் அதனையே நம்பி நடைமுறைப்படுத்தினார்கள்.

ஆனால், இனவாதமும் மதவாதமும் மனிதனின் வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப் போகும் பிம்பங்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கின்றது. எவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், மக்களிடம் இனவாத மதவாத தீயை வளர்த்தால் ஆட்சியில் தொடர்ந்தும் இருந்துவிடலாம் என்ற சிந்தனையை தங்களின் இறுதி நாட்கள் வரையில் ராஜபக்‌ஷர்கள் நம்பினர். ஆனால், அது இம்முறை சாத்தியமாகவில்லை. வயிற்றுப் பசிக்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல. உணவுதான் முக்கியமானது என்பதை தென் இலங்கையின் கிராமங்கள் உணரத் தொடங்கிய போதுதான், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக தொடர் போராட்டம், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இலங்கையின் அரசியல் போராட்டங்கள், புரட்சிகள், கிளர்ச்சிகள் என்பவை அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால், இவ்வாறான மக்கள் பங்களிப்போடு எந்தப் போராட்டங்களும் நடைபெற்றிருக்கவில்லை. எந்தவொரு கட்டத்திலும் ராஜபக்‌ஷர்களின் சுவடுகள் இருக்கும் ஆட்சிக் கட்டமைப்பொன்று நீடித்திருக்கக் கூடாது என்பதில் மக்கள் குறியாக இருக்கிறார்கள்.

இந்தப் பத்தி எழுதப்படும் போது, பிரதமர் செயலகத்துக்கு முன்னால், ரணிலை பதவி விலகக் கோரி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தைக் கலைப்பதற்கு இராணுவமும், பொலிஸாரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். ரணில், மக்களின் போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்றும் முகமாக பிரதமர் பதவியை ஏற்றதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், ராஜபக்‌ஷர்கள் அகற்றப்பட்டது மாதிரியே, ரணிலும் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுக்காக ஆதரவாக இருந்த பௌத்த பீடங்களும் மக்களின் கோபத்துக்கு முன்னால் செல்லாமல் பதுங்கிக் கொண்டுவிட்டன.

ராஜபக்‌ஷர்களை அகற்றியாகிவிட்டது. இனி அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று மக்கள் நம்பவில்லை. ஆனால், ஊழல் மோசடிக்கார ஆட்சியாளர்களுக்கான எச்சரிக்கைச் செய்தியொன்று சொல்லப்பட்டிருக்கின்றது. இனி ஆட்சிக்கு வரும் யாரும் விட்டேந்தித்தனமாக செயற்பட முடியாது. அத்தோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடத்தினால், தாங்கள் வழங்கிய ஆணையை மீளப்பெற்றுக் கொள்ளலாம் என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். நாட்டில் குழப்பங்கள் இல்லாத நிலையான ஆட்சிக்கான தேவை தவிர்க்க முடியாதது. அதற்கு சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில், அரசியல் கட்சிகள் தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்தவே செய்யும்.

அதுபோல, தென் இலங்கை மக்கள் உணர வேண்டிய முக்கிய விடயமொன்று உள்ளது. அது, பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனையோடு ஆட்சி அரசியல் செய்யும் எந்தத் தரப்பை ஆதரித்தாலும், அது ராஜபக்‌ஷர்கள் போன்றவர்களை உருவாக்கவே செய்யும். அப்போது நாடு இன்னும் மோசமான கட்டத்தை அடையும். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வீழ்ச்சி பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனை ஆட்சி அரசியலுக்கான கருவியாக முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்தது. கடந்த ஏழு தசாப்த காலமாக பௌத்த -சிங்களப் பேரினவாத சிந்தனை நாட்டை பகுதி பகுதியாக அழித்து, இன்றைக்கு படு பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது. ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியை கொண்டாடும் தென் இலங்கை, இனவாத மதவாத சிந்தனையை எப்போது நிராகரிக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்போது சுபீட்சமான இலங்கை சாத்தியாகும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் போன்று பலரும் மீண்டும் மீண்டும் உருவாகுவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.