பெரும் அரசியல் தந்திரன் ‘ ரணில் ‘!! (கட்டுரை)
மக்களின் பேரெதிர்ப்பிற்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வகித்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான தெரிவு புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த தெரிவு முறைமையானது பாராளுமன்றத்திற்குள் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்க வைத்துக்கொள்வாரா அல்லது ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிகளை போன்று குறுகிய காலத்திற்குள் இழந்து விடுவாரா என்பது பொதுவான கேள்வியாகவே உள்ளது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க பெரும் அரசியல் தந்திரனாகவே பார்க்கப்படுகிறார். இதற்கு ஆதாரமாக இலங்கை அரசியல் வரலாற்றில் பல சம்பவங்கள் காணப்பட்டாலும் தேசிய அரசியலில் தற்போது நிகழ்கின்ற காய்நகர்த்தல்கள் கண்ணெதிரே உள்ள சிறந்த ஆதாரங்களாகின்றன.
தோல்வியின் எல்லைக்கே சென்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு சென்றார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களை தனி மனிதனாக எதிர்கொண்டார். அவரது அரசியல் வரலாற்று பின்னணியும் இவ்வாறானது தான்.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 42 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார்.
ஆனால் 2020 பொதுத்தேர்தலின் அவரது அரசியல் வாழ்வில் பெரும் தோல்வியாக கருதப்பட்ட நிலையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு சென்றார்.
அரசியல் வியூகங்கள் வகுப்பதில் ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கு பிறகு ரணில் விக்கிரமசிங்க தான் என்றளவிற்கு இன்று நிரூபித்து காட்டியுள்ளார். இதனால் எத்தனையோ தோல்விகளை சந்தித்தும் கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இதுவும்கூட ஒருவகையில் சாதனையாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் எந்தவொரு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் இத்தனை ஆண்டுகள் தலைமைத்துவத்தில் நீடிக்கவில்லை.
1947 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 15 பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதில் 5 தேர்தல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தலைமைத்தாங்கியுள்ளார். இவற்றுள் இரு தேர்தல்களில் (2001,2015) மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிநடைபோடமுடிந்தது. எவ்வாறாயினும் பல்வேறு முரண்பாடுகளின் அடிப்படையில் இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியும் இருந்தனர்.
ஆனால், சஜித் பிரேமதாச தலைமையிலான வெளியேற்றமே பெரும் தாக்கமாக அமைந்தது. 2020 பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாது பிரதான எதிர்க்கட்சி என்ற பதவியைக்கூட ஐக்கிய தேசியக்கட்சியால் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.
பொதுத்தேர்தல்களின் பின்னணி
ரணில் விக்கிரமசிங்க 1970 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாட்டு அரசியலில் இறங்கினாலும் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் முதல் தடவையாக போட்டியிட்டார். 1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப்பெற்றது. 1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால் பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 இலட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
எனினும், இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தேர்தலின் பின்னர் 1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
2000 ஒக்டோபர் 10 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதம வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 63 ஆயிரத்து 668 வாக்குகளைப்பெற்றார். இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே பெரும் வெற்றியை பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.
எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு,2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. 4 இலட்சத்து 15 ஆயிரத்து 686 வாக்குகளைப்பெற்று கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் பிடித்தார்.
2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க மீண்டும் வெற்றிப்பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியது.
2010 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப்பெற்று ஐ.தே.க. பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விமல் வீரவன்ச முதலிடம் பிடித்தார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.
2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தார். 5 இலட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும். இதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தில் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இவ்வாறு பல்வேறு தோல்விகளை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் பயணத்தை முடிவிற்கு கொண்டு வரவில்லை. மாறாக தோல்விகளுடான வியூகங்களையே வகுத்தார். கோட்டபாய ராஜபக்ஷ அட்சியில் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் அதனூடான அரசியல் நெருக்கடியிலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரம் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தி விட்டுள்ளது.
கோட்டபாயவின் அழைப்பை சஜித் பிரேமதாச நிராகரித்தமையினால் ஜனாதிபதி பதவிற்கான வாய்ப்பை இழந்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க வாய்ப்பையும் நாட்டின் சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். பதில் ஜனாதிபதியாக பதவியை பொறுப்பேற்று 48 மணித்தியாலயத்திற்குள் கொந்தளிப்புகளை தனித்தார்.
இனியிருப்பது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கான சவால்.
பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இவரது கட்சி உறுப்பினர் அல்ல. அடுத்த புதன் கிழமை அல்லது அதற்கு முதல் தினத்திலேயே இறுதி சவாலின் முடிவை பெரும் அரசியல் தந்திரத்தினால் தீர்மானித்திட முடியும்.