அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! (கட்டுரை)
நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தது முதல் 2002, 2015 ஆகிய இரு தடவைகள் மாத்திரமே பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அடையாளத்தோடுதான் இருந்து வந்திருக்கிறார். 2020 பொதுத் தேர்தலில் அவரும் அவரது கட்சியும் மக்களால் என்றைக்கும் இல்லாதவாறு தோற்கடிக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனது.. ஆனாலும், கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னர், பாராளுமன்றம் வந்த ரணில், திடீரென ஒருநாள் பிரதமரானார். இப்போது ஜனாதிபதியாகியிருக்கிறார். இப்போதுதான் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆன்மா அமைதியடைந்திருக்கும்.
ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் என்கிற எதேச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முறையை இலங்கை அரசியலில் அறிமுகப்படுத்தி, அதனை உச்ச அளவில் பிரயோகித்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அவர் தன்னுடைய காலத்தின் பின்னர், என்றோ ஒருநாள் அந்தப் பதவிக்கு தனது மருமகனான ரணில் வரவேண்டும் என்று விரும்பினார். அது, நிறைவேறாமல் போய்விடுமோ என்று அவரது ஆன்மா கடந்த முப்பது ஆண்டு காலமாக அங்கலாய்த்திருக்கும். ஆனாலும், தன்னுடைய பாசறையில் அரசியல் தந்திரம் பழகிய ரணில், என்ன விலை கொடுத்தாலும் அதிகாரத்தை அடைந்து காட்டியிருக்கிறார்.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்த போது, அதனை சாதகமாக பயன்படுத்துவது குறித்து ரணில் மிக நிதானமாக காய்களை நகர்த்தினார். ஐ.தே.க.வின் ஒற்றை உறுப்பினராக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்த்திருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்து கவனம் செலுத்தினார்.
ராஜபக்ஷர்களால் மக்களின் எழுச்சியை கையாள முடியாது என்ற நிலை எழுந்த போது, ரணில் தன்னுடைய அரசியல் தந்திர ஆட்டத்தை தனித்து ஆடத் தொடங்கினார். போராட்டக்காரர்கள், பௌத்த உச்ச பீடங்கள் தொடங்கி அனைத்து கட்டங்களிலும் ராஜபக்ஷர்களுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்த போது, சர்வகட்சி அரசாங்கம் என்கிற விடயம் பேசு பொருளானது. சர்வகட்சி அரசாங்கம் என்பது ராஜபக்ஷர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ராஜபக்ஷவும் தங்களது பதவியை பாதுகாப்பதற்காக மற்ற ராஜபக்ஷர்களின் பதவிகளை பலி கொடுக்கத் தயாரானார்கள். அந்த இடத்தை சரியாக பற்றிக் கொண்ட ரணில், மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த பிரதமர் பதவியை கோட்டாவினூடு கைப்பற்றினார். கோட்டா முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற போதிலும்கூட அவர், ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை தணிந்து போக விடவில்லை.
எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை என்கிற நாளாந்த வாழ்க்கைக்கான பெரும் நெருக்கடியை ரணில் தனக்கான அரசியல் விளையாட்டுக்காக கையாண்டார். பிரதமராக பொறுப்பேற்ற அவர், மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான நெருக்கடியை சமாளிப்பதற்கான வாய்ப்புக்களைப் பற்றி பேசுவார் என்று பார்த்தால், நாட்டு மக்களை நோக்கி பஞ்சம் பசி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கினார். அது, ஒருவகையில், ராஜபக்ஷர்களின் எவர் ஒருவர் ஆட்சியில் இருந்தாலும் சர்வதேச நாடுகளோ, உதவி வழங்கும் அமைப்புக்களோ இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதாவது என்ற தோரணையிலானதாக இருந்தது. அந்த செய்திகள் மக்களை இன்னும் இன்னும் கோபப்படுத்தியது. அது, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாபதிப் பதவியில் இருந்து கோட்டாவை ஓட வைக்கும் போராட்டமாக மாறியது. கோட்டா நாட்டை விட்டு ஓடி சென்று 14ஆம் திகதி பதவி விலகிய போது, பதில் ஜனாதிபதியாக ரணில் மாறினார்.
ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், ஒரு கட்டத்தில் ரணிலுக்கு எதிரானதாகவும் மாறியது. அவரை வீட்டுக்கு செல்லுமாறு கோரியது. ஆனால், அவர் எந்தக் கட்டத்திலும் அந்த முடிவை நோக்கி செல்வதற்கு தயாராக இருக்கவில்லை. தனது கனவை அடைவதற்கான இறுதிச் சந்தப்பம் இது என்பதில் அவர் கவனமாக இருந்தார். கோட்டாவை நாட்டை விட்டு அனுப்புவதில் ரணில் காட்டிய ஆர்வம் மிகப்பெரியது.
அதுபோல, கோட்டா நாட்டைவிட்டுச் சென்றதும், அவர் பாதுகாப்புத் தரப்பை கையாளத் தொடங்கிய விதம் அச்சமூட்டும் அளவுக்கு இருந்தது. அதுதான், போராட்டக்காரர்களை சற்று பின்வாங்கவும் வைத்தது. ராஜபக்ஷக்கள் இருக்கும் வரையில் போராட்டக்காரர்களை ஒரு அளவுக்கு மேல் எதிர்க்காது பின்வாங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, ரணில் பதில் ஜனாதிபதி என்கிற நிலையை அடைந்ததும், முன்நோக்கி வரத் தொடங்கினார்கள். அவசர காலச் சட்டம் தொடங்கி, போராட்டத்தை அடக்குவதற்கான அனைத்து விதமான ஆணைகளையும் ரணில் எந்தவித தயக்கமும் இன்றி விடுக்கத் தொடங்கினார். போராட்டக்காரர்களை நோக்கி பாஷிஸ்டுகள் என்கிற அடையாளப்படுத்தலை அவர் திருப்பத் திரும்பச் செய்தார். ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு ஒருபோதும் முயலேன் என்று பிரதமராக பதவியேற்ற தருணத்தில் அறிவித்த ரணில், பதில் ஜனாதிபதியானதும், அந்தத் தோரணையை மாற்றினார். ராஜபக்ஷர்களை அகற்றப்பட்ட பின்னர், இனி தன்னுடைய களத்தில் யாருக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடாக மாறியது.
கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுக்கு எதிராக அரசியல் செய்த ரணிலும், ரணிலுக்கு எதிராக அரசியல் செய்த ராஜபக்ஷர்களும் இன்று ஒரே அணியில் இருக்கிறார்கள். அதுவும், கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ராஜபக்ஷர்கள், தேர்தலில் தோல்வியடைந்த ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காக பாராளுமன்றத்துக்குள் வாக்களித்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில், அவர் பெற்ற 132 வாக்குகள் என்பது செல்லும் செய்தி, ராஜபக்ஷர்களின் ஆதரவு உறுப்பினர்கள், ஒரே அணியில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது ரணிலை முன்னிறுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு பொது மக்களின் போராட்டமோ, ராஜபக்ஷர்கள் மீதான கோபமோ ஒரு பொருட்டாக இல்லை.
ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக முன்னிறுத்துவதன் மூலம், பொது ஜன பெரமுன என்கிற கட்சியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்ஷர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், இன்றைக்கு தங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தாலும், நல்லாட்சிக் காலத்தில் ரணிலும் -மைத்திரியும் சறுக்கிய இடம்போன்ற சந்தர்ப்பம் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் அதனைப் பிடித்துக் கொண்டு ஆட்சி அதிகார கனவை நோக்கி மீண்டும் ஓடிக் கொள்ளலாம் என்பதே ராஜபக்ஷர்களின் எண்ணம்.
குறிப்பாக, ராஜபக்ஷர்களின் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மஹிந்தவின் நோக்கம். ஏனெனில், ராஜபக்ஷர்களின் வரலாறு கோட்டாவோடு முடிந்து போகக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு. தன்னுடைய மகன் நாமல் ராஜபக்ஷ, அதன் பின்னர் நாமலின் வாரிசு என்று ஆட்சி அதிகார வரலாறு எழுதப்பட வேண்டும் என்று மஹிந்த விரும்புகிறார். அதற்காக, இப்போது, ரணிலை ஆதரிப்பதுதான் அவருக்கு இருக்கும் ஒரே தெரிவு.
ஏனெனில், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இன்னொரு நபர் இடைக்கால ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், கட்சி ராஜபக்ஷர்களின் கட்டுப்பாட்டில் இருந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதனைத் தவிர்ப்பதற்கு இன்னொரு கட்சியின் தலைவரான ரணிலை ஜனாதிபதியாக முன்னிறுத்தி, இரண்டரை ஆண்டுகளைக் கடப்பதுதான் இருப்பதில் சமயோசிதமான வழி.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை உடனடியாக சீர்செய்ய முடியாது. ஆகவும், இனி வரப்போகும் நாட்களை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதுதான், தங்கள் மீதான மக்களின் கோபத்தை குறைப்பதற்கான வழி. ஆகவே, அந்த வழிமுறையை சில காலத்துக்கு பின்பற்றுவதில் தவறில்லை என்பதும், அதுதான் தங்களை அரசியலில் காப்பாற்றும் என்பதுமே மஹிந்த தரப்பு ரணிலை ஜனாதிபதியாக முன்னிறுத்துவதில் முடிந்திருக்கின்றது. இன்று ராஜபக்ஷர்களும் ரணிலும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆதாயங்களை அடைந்திருக்கிறார்கள். ஆனால், போராடி மக்களின் எதிர்பார்ப்போ ஏதுமறிய திக்குத் திசையில் உழலத் தொடங்கியிருக்கின்றது.